என்ன எடை அழகே!





‘ஆல் தோட்ட பூபதி’யில் ஆடியதை விட, இப்போது இன்னும் இளமையாக, அழகாக இருக்கிறார் நடிகை சிம்ரன். சிம்ரன் இப்போது, அதீப் ஓடோ (7 வயது), ஆதித் வீர் (ஒன்றரை வயது) என இரண்டு குட்டி இளவரசர்களின் அம்மா! கல்யாணம், குழந்தை பிறப்புக்குப் பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்தவர், ஒரு படம் முடித்து, அடுத்த படத்துக்குத் தயாராகிற கெட்டப் போல மறுபடி அதே ‘ஸ்லிம்ரன்’ ஆக மாறியிருக்கிறார்.

‘‘இதுதான் நான்... நடிக்க வந்தப்ப நீங்க என்னை எப்படிப் பார்த்தீங்களோ, நடிக்க வர்றதுக்கு முன்னாடியும் அப்படித்தான் இருந்தேன். என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னால எந்தக் காலத்துலயும் குண்டா இருக்க முடியாது. அப்படியொரு ஷேப்ல என்னைக் கற்பனைகூட பண்ணிப் பார்க்க முடியாது. ஆனாலும், என் முதல் பையன் அதீப் பிறந்தப்ப, வெயிட் போட்டேன். அவன் கொஞ்சம் வளர்ந்ததும், கஷ்டப்பட்டு, வெயிட்டை குறைச்சேன். ரெண்டாவது பையன் ஆதித் பிறந்ததும் முதல் பிரசவத்துல இருந்ததைவிட, இன்னும் அதிகமா வெயிட் போட்டேன். அப்படி இருந்த நான், இப்ப மறுபடி கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த அதே உடல்வாகுக்கு மாறியிருக்கேன்னா அதுக்குக் காரணம் என் மன உறுதிதான்...’’ - இன்ச்சுகளில் எடை குறைத்து, இளமைக்குத் திரும்பியிருக்கிற சிம்ரனின் பேச்சில் அத்தனை உற்சாகம்.

‘‘நடிக்க வந்ததும், ஒரு நடிகையோட லைஃப் ஸ்டைல் தலைகீழா மாறிடும். இயல்புலேயே நான் ஒல்லியா இருந்தாலும், நடிகையான பிறகு, அந்த உடல்வாகைத் தக்க வச்சுக்க நிறைய போராட வேண்டியிருந்தது. ஒரு நடிகை தியாகம் பண்ற முதல் விஷயம், வாய்க்கு ருசியான சாப்பாடு. நானும் அப்படித்தான்... வாரத்துல 6 நாளும் டயட் சமையல். காலையில வேக வச்ச முட்டையோட வெள்ளைக் கரு... மதியத்துக்கு வேக வச்ச காய்கறிகள்... ராத்திரி சப்பாத்தி... கிட்டத்தட்ட 10 வருஷம் இப்படித்தான் இருந்திருக்கேன். நல்லவேளையா எனக்கு சாப்பாட்டுல பெரிய தேடலோ, வாயைக் கட்ட முடியாதளவுக்கு ஆசையோ இருந்ததில்லை. ஹீரோயினா பீக்ல இருந்த அந்த 10 வருஷமும் ராத்திரி, பகல் பார்க்காத அளவுக்கு பிசியா இருந்திருக்கேன். 12 மணி நேரம் தொடர்ச்சியா ஷூட்டிங் இருக்கும். வீட்டுக்கு வந்ததும், அப்பாடான்னு படுக்க முடியாது. அரை மணி நேரமாவது எக்சர்சைஸ் பண்ணிட்டுத்தான் தூங்கப் போவேன். எந்தக் காரணத்துக்காகவும் என் எக்சர்சைஸ் ரொட்டீனை தியாகம் பண்ணினதே இல்லை. அந்தப் பழக்கம், இப்பவும் தொடருது...’’ என்கிறவர், தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குகிறாராம். வாரத்தில் 3 நாள்கள் நீச்சல் பயிற்சியையும் மிஸ் பண்ண மாட்டாராம்!



‘‘பிரசவ காலத்துல வெயிட் போடறது சகஜம். கண்டதையும் சாப்பிடணும்னு தோணும். கன்னாபின்னான்னு வெயிட் ஏறும். ஆனாலும், அந்த 10 மாசமும் உடல் அழகைப் பத்தி யாருக்கும் யோசிக்கத் தோணாது. குழந்தை பிறந்ததும், சுதாரிச்சுக்கணும். ‘இது நம்ம உடம்பு இல்லை. பழைய உடல்வாகுதான் கரெக்ட்’னு உணரணும். ஆனா, குழந்தை பிறந்ததும் பல பெண்களுக்கும் குழந்தை, கணவன்னு கவனம் திரும்பிடுது. தன்னைப் பத்தியோ, தன் ஆரோக்கியம் பத்தியோ யோசிக்கிறதில்லை. நெய்யும் வெண்ணெயும் சேர்த்துப் பிசைஞ்சு, குழந்தைக்கு ஊட்டற போது, மிச்ச மீதியை வேஸ்ட் ஆக்க மனசில்லாம, தானே சாப்பிடறாங்க. கொஞ்சம் கொஞ்சமா வெயிட் கூட ஆரம்பிக்கும். அப்பல்லாம் அதைக் கண்டுக்க மாட்டாங்க. திடீர்னு ஒருநாள் ஏதோ ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னு பழைய பட்டுப்புடவை ஜாக்கெட்டை எடுத்துப் போடறப்பதான், கை நுழையாததும், தான் அநியாயத்துக்கு குண்டாயிட்டதும் புரியும். உங்க உடம்பை நீங்க நேசிச்சாதான், அது மேல எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருக்கும். அதை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வச்சுக்கணும்னு மெனக்கெடுவீங்க...’’ - சீரியஸாக யோசிக்க வைக்கிறது சிம்ரனின் அட்வைஸ். சிம்ரன், அரிசி சாப்பாட்டை பார்த்தே பல மாதங்கள் ஆகின்றனவாம்.

‘‘யாராவது பிரியாணி சாப்பிடறப்ப, நாக்கு ஊறும். ஆனாலும் ரைஸ் கூடாதுங்கிற என் கொள்கையிலேருந்து மாறலை. 2 மணி நேரத்துக்கொரு முறை, கொஞ்சமா சாப்பிடறது என் ஸ்டைல். மார்ஜரின் போட்ட பிரவுன் பிரெட், சாலட், பழங்கள், எண்ணெய் கம்மியான சமையல்னு நான் டயட் விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட். செவ்வாய், வியாழன் தவிர, மத்த எல்லா நாளும் நான்வெஜ் சாப்பிடுவேன்.

அதுவுமே வேக வச்சதாத்தான் இருக்கும். பார்ட்டி போறதைக் கூடிய வரை தவிர்த்துடுவேன். வேற வழியே இல்லாம போனாலும், சூப், சாலட் தவிர வேற எதையும் தொட மாட்டேன். கண்ட நேரத்துல சாப்பிடறது, அடிக்கடி வெளியில சாப்பிடறது, ஒரு வேளை சாப்பிடாம இருந்துட்டு, அடுத்த வேளைக்கு சேர்த்து சாப்பிடறது, சாப்பாட்டுக்கு முன்னாடியும், பிறகும் எதையாவது கொறிக்கிறதுன்னு எந்தக் கெட்டப் பழக்கமும் எனக்குக் கிடையாது. நீங்க உங்களுக்குக் கொடுத்துக்கிற பெஸ்ட் கிஃப்ட் என்ன தெரியுமா? அளவான, ஆரோக்கியமான உடம்பு. சரியான எடையை மெயின்டெயின் பண்றதுங்கிறது உண்மையில மிகப் பெரிய சவால்... அந்த சேலஞ்ச் எனக்குப் பிடிச்சிருக்கு...’’
அசத்தலாக சிரிக்கிறார் ஸ்லிம்ரன்!