வானமே எல்லை



- மகேஸ்வரி

நண்பர்கள்  எல்லோரும் சேர்ந்து சுற்றுலா போகலாமென்று பேசினாலே ஒரு ஜாலி எங்கே இருந்துதான் தொற்றிக்கொள்ளுமோ? அட, அந்த நாளை எதிர்பார்த்து மனம் பரபரப்போடு காத்திருப்போம். அண்மையில் சில மாற்றுத்திறனாளி நண்பர்கள் இணைந்து ஒரு  சுற்றுலா சென்று வந்திருக்கிறார்கள். அந்த நண்பர்கள் தங்கள் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்...

சென்னையை சேர்ந்த ரூபா ராஜேந்திரன் கூறியதாவது...
‘‘நான், மோகன், சசிரேகா, சரவணக் குமார், அவரின் மனைவி முத்துமாலை எல்லாருமே முகநூல் மூலமாக நட்பானோம். தொடர்ந்து தினமும் வாட்ஸ் அப், முகநூல் மற்றும் கான்ஃப்ரன்ஸ் அழைப்பு மூலமாக எங்கள் நட்பைத் தொடர்கிறோம். நான் என் முக நூல் நண்பர்களை எல்லாம் தனித்தனியா அவரவர் இடத்திற்குச் சென்று சந்தித்தேன். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு இடத்தில் கூடுவோம் என முடிவு செய்தோம்.

தொடர்ந்து அதைப் பற்றியே பேசினோம். நாங்க யாருமே குடும்பத்தை விட்டு தனியாக வெளியில் நண்பர்களோடு போய் ஊர் சுற்றியது கிடையாது. அந்த ஏக்கம் எங்கள் எல்லார் மனதிலும் இருந்தது.

எனவே குடும்பத்தினர் இல்லாமல் நண்பர்களாகச் சேர்ந்து ஒரு சுற்றுலா போகலாம்னு முடிவிற்கு வந்தோம். முதலில் முடிவு செய்த இடம் கேரளா போட் ஹவுஸ். அடுத்தது பெங்களுர். ஆனால் எங்களால் அது சாத்தியப்படுமா என்ற எண்ணம் வந்து அதை கைவிட்டோம். அடுத்து கொடைக்கானல், ஊட்டி என மலைவாச ஸ்தலங்களை எண்ணத்தில்  கொண்டு வந்தோம்.

ஆனால் போவதற்கு கார், டிரைவர் என்று இருந்தாலும், நாங்கள் சென்று தங்குமிடம், அங்கிருக்கும் கழிப்பறைகள் எங்கள் உடல் நிலைக்கு ஏற்றதாக இருக்காதே என்ற எண்ணம் வந்ததும் அந்த இடங்களுக்குச் செல்லும்  முடிவையும் கைவிட்டோம்.

நண்பர்களாகிய நாம் ஒன்றாக இருக்கணும்.  மகிழ்ச்சியா இருக்கணும். அது எந்த இடமாக இருந்தால் என்ன? நம் உடல்நிலைக்கு  ஏற்ற வசதி தானே முக்கியம் என முடிவு செய்து நான் என் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்காக தேர்வு செய்த இடம் என் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரிளவன்பட்டி கிராமம்.

அங்க 40 ஏக்கர்ல எங்களுக்கு சொந்தமான தோப்பு இருக்கு. அதில் தென்னை, பனை, சந்தனம், தேக்கு, மாமரம் என எல்லா வகை மரங்களும் உள்ளன. எங்கள் தோப்புக்குள் போனால் ஊட்டி, கொடைக்கானல்  மாதிரியே ஒரு இயற்கைச் சூழல் கிடைக்கும். மேலும் எங்களுக்கு ஏற்ற மாதிரியே எங்களின் வீல் சேர் செல்ல வசதியாக சரிவான வழிப்பாதைகள் (Ramp), கழிவறை வசதிகள் இருப்பதால் அந்த இடத்தை தேர்வு செய்து கூறினேன். நண்பர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

எங்கள் பயணத்திட்டத்தை முடிவு செய்தோம். ஈரோட்டில்  இருக்கும் என் நண்பர் மோகன் தசை சிதைவு நோயால் பாதிப்படைந்தவர். அவரின் நண்பர் கார் ஓட்டத் தெரிந்தவர். அவரின் உதவியோடு, திருப்பூரில் வங்கிப் பணியில் இருக்கும் என் மாற்றுத் திறனாளி தோழி சசிரேகாவையும் அழைத்துக்கொண்டு நாங்கள் சந்திக்க திட்டமிட்ட இடத்திற்கு வந்து இறங்கினார். அதேபோல் சாத்தூரில் சொந்தமாக நகைக்கடை ஒன்றினை நடத்தி வரும் எங்கள் மாற்றுத் திறனாளி நண்பரான சரவணக்குமார் மற்றும் அவரின் மனைவி முத்துமாலை  அவர்களும் எங்களோடு கைகோர்க்க எங்களின் ஜாலியான சுற்றுலா துவங்கியது.

நாங்கள்  சந்தித்த அன்று எங்கள் ஊரில் நல்ல மழை. எனவே எங்கள் தோப்புக்குள் நாங்கள் திட்டமிட்டபடி எங்களது வீல் சேரில் எங்களால் பயணித்து உள்ளே செல்ல முடியாத  அளவிற்கு மழையால் சகதியாகிவிட்டது. காரிலும் உள்ளே செல்ல முடியாத நிலை. எனவே எங்கள் பயணம் டிராக்டரில் திரில்லுடன் துவங்கியது.

இதற்கு முன் நான் பல முறை என் உதவியாளர்கள் மூலம் எங்கள் தோப்புக்குள் டிராக்டரில் பயணித்ததால், டிராக்டரை வரவழைத்து, அதில் வீல் சேருடன் எங்கள் உதவியாளர், நண்பர்கள் மூலம் டிராக்டரில் அனைவரையும் வீல் சேருடன் ஏற்றி தோப்புக்குள் பயணித்தோம்.

அன்றைய நாள் முழுவதும் ஒரே மகிழ்ச்சியும், கூத்தும், கும்மாளமுமாக எங்கள் நாட்கள் கழிந்தது. எங்கள் தோப்பில் நிறைய நுங்கு, பதனி எல்லாம் சாப்பிட்டு மகிழ்ந்தோம். மறுநாள் திட்டமிட்டபடி திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டு பயணித்தோம். எனக்கும் என் நண்பர் மோகனுக்கும் பவர் வீல் சேர் இருப்பதால் எங்களால் உள்ளே சென்று சுற்றிவர முடிந்தது. ஆனால் என் தோழி சசிரேகாவிற்கு போலியோ பாதிப்பால் கால்கள் பலம் இழந்து இருப்பதால் அதற்கான ஷூவை அணிந்து ஒரு கையில் ஊன்றுகோல் உதவியுடன் கொஞ்ச தூரம் வரைதான் நடக்க இயலும்.

எனவே அவருக்காக அங்கே ஏதாவது வீல் சேர்  அல்லது, பேட்டரி கார் வசதி உள்ளதா என தேடினோம். அப்படி எந்த வசதியும் அங்கே இல்லை. பேட்டரி கார் ஒன்று முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு என நின்று கொண்டிருந்தது. ஆனால் அதை இயக்குவதற்கு ஓட்டுநர் கடைசிவரை கிடைக்கவில்லை. வெகுநேரம் அவரை தேடியும் எந்த பொறுப்பான பதிலும் நிர்வாகத்திடமிருந்து வரவில்லை. கடைசியில் என் தோழி சசிரேகா நடந்தே எங்களுடன் கொஞ்ச தூரம் சுற்றினார்.

ஆனால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே அவரால் முடிந்தது. அதன் பிறகு நடக்க முடியாமல் உட்கார்ந்துவிட்டார். நாங்களும் என்ன செய்வது என்று சற்று நேரம் யோசித்துவிட்டு கடைசியில் என் நண்பர் மோகனின் பவர் வீல் சேரில் சசிரேகாவை அமர வைத்து, அவரை  இறக்கிவிட்டுவிட்டு, அந்த வீல் சேரை ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பியதும், மோகன் அதில் பயணித்தார். கடலின் அழகை ரசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. எங்களுக்கும் அந்த ஆசை நிறைய நிறைய இருந்தது. ஆனால்  எங்களால் முடியவில்லை.

ஓரளவிற்கு தூரத்தில் இருந்து பார்த்து ரசித்தோம். ஆனால் பவர் வீல் சேர் இல்லாத என் நண்பர்களால் அதுவும் முடியவில்லை. திருச்செந்தூரில் இருந்து அடுத்ததாக நாங்கள் சென்றது ‘தாமிரபரணி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்ட அம்மன்புரத்திற்கு. போகும்போதே உணவினை கையில் எடுத்துச் சென்று அங்கே அமர்ந்து இயற்கைச் சூழலில் மகிழ்ச்சியாக சாப்பிட்டோம். அன்று இரவே அருகில் இருந்த எங்கள் தோப்பு வீட்டிற்கு திரும்பிவிட்டோம்.

குடும்பத்தினரை விட்டு தனியாக நண்பர்களோடு பயணிக்க வேண்டும் என முடிவெடுத்தாலும், மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு ஏற்ற  வசதிகள் எந்த இடத்திலும் சுற்றுலாத் தலங்களில் சுத்தமாக இல்லை. முக்கியமாக அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் கூட கிடையாது. நாங்கள் வெளியில் எங்கும் தங்கவும் முடியாது. எங்களின் கால்களான வீல் சேரில் உள்ளே நுழைய முடியாத நிலையே எங்கும் இருக்கிறது.

அதற்கேற்ற வசதியுள்ள பெரிய ஸ்டார் அந்தஸ்து ஹோட்டல்களில் தங்க எல்லாருக்கும் பட்ஜெட் இடம் தராத நிலையும் உள்ளது. அரசாங்கமும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி மாற்றுத் திறனாளிகளான எங்களை மனதில் இருத்தி அவர்களது கட்டிட அமைப்புகளில் வசதி செய்தால் எங்களுக்கு வழி பிறக்கும்” என்கிறார். இவருடைய நண்பரான சசிரேகா திருப்பூரில் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றுகிறார். இவரிடம் பேசியபோது, ‘‘நான் பிறந்து 8 மாதம் கழித்து போலியோவால் என் கால்கள் பாதிப்படைந்து பல
மிழந்து விட்டது.

என்னால் சுயமாக நடக்க முடியாது. வீட்டுக்குள் தவழ்ந்துதான் செல்வேன். வெளியில் செல்வதென்றால் இரும்பு ஆங்கில் ஷூவை மாட்டிக்கொண்டு கையில் ஸ்டிக் வைத்துக்கொண்டு தாங்கித் தாங்கி மெதுவாகத்தான் நடக்க இயலும். வீட்டிலிருந்து வங்கிக்குச் செல்வதென்றால் மூன்று சக்கர வண்டியில் செல்வேன். இப்படியே வீடு, வேலை என என் வாழ்க்கை சிறுவயதிலிருந்து ஒரு வட்டத்திற்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தது.

பி.காம் படித்துவிட்டு, கோ-ஆபரேட்டிவ் பயிற்சி எடுத்து பணியில் சேர்ந்தேன். ஆனால் நண்பர்கள் என்று எங்கும் வெளியில் சென்றதில்லை. வீட்டிலும் என் உடல் நிலையால் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த சூழலில்தான் முகநூல் மூலமாக நண்பர் மோகன், ரூபா மற்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தினமும் அனைவரும் பேசி ஒருவருக்கொருவர் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வோம். இந்தச் சூழலில்தான் என் குடும்பத்தை பிரிந்து நான் மட்டும் தனியாக நண்பர்களோடு வெளியில் செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்தை என் மாற்றுத் திறனாளி தோழர்களிடம் தெரிவித்தேன்.

திட்டம் தயாரானது. சின்ன வயதில் இருந்து என் பள்ளித் தோழி சியாமளா. நான் எங்க வெளியில் போனாலும் என் கூடவே துணையாக வருவாள். அந்த அளவுக்கு எங்கள் நட்பு. அவளும் என் கூடவே பயணத்திற்கு துணையாக வந்தாள்.

சியாமளா இல்லைனா நான் இல்லை. நீண்ட தூரப் பயணங்களை குடும்பத்தோடு செல்வதாக இருந்தாலும், நான் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். ஏனென்றால் எங்களுக்கேற்ற கழிப்பறை வசதியற்ற நெடுஞ்சாலைகள் என்னை பயமுறுத்துவதாக இருக்கும்.

மேலும் பேருந்துகளின் படிக்கட்டுகள் பெரும்பாலும் தாழ்வாக இருப்பதில்லை. அதில் எங்களால் சுத்தமாக ஏறவும் இறங்கவும் முடியாது. மிகவும் தர்மசங்கடமாக இருக்கும்” என்றார். ஈரோட்டைச் சேர்ந்த மோகன்ராஜ் சொந்தமாக மொபைல் சர்வீஸ் கடை நடத்துகிறார். அவருக்கு பயணங்கள் என்றால் மிகவும் பிரியம். மோகனுக்கு கார் ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். ‘‘சரியாக நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு திடீர் என நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நடக்கும்போது கீழே தடுமாறி விழத் துவங்கினேன். படிகளில் ஏற முடியாத நிலையும் ஏற்பட்டது. என்னை கவனித்த மருத்துவர்கள் எனக்கு நரம்பு தொடர்பான ஏதோ குறையிருப்பதாகக் கணித்தனர். சென்னை அப்பல்லோவில் முழு உடல் பரிசோதனை செய்த போது எனக்கு தசைச் சிதைவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு இதுவரை மருந்தில்லை என்பதே நிதர்சனம். தசைச் சிதைவு நோய்க்காக துவங்கப்பட்ட ஆதவ் டிரஸ்டில் நானும் இருக்கிறேன்.

தசைச் சிதைவு நோயால் உயிரிழந்த வானவன் மாதேவியும், ஆதவ் டிரஸ்டை தற்போது நடத்தி வரும் இயல்இசை வல்லபியும் என் நண்பர்கள்தான். மூவாயிரம்பேரில் ஒருவர் இந்த தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவத் தரவுகள் கூறுகின்றன. எங்களை மாதிரியான மாற்றுத் திறனாளிகளும் இந்த உலகத்தில் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? அதற்கு நாங்கள் எங்களை தயார்படுத்திக்கொள்கிறோம். எங்களுக்கு உதவியாக இந்த அரசாங்கமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

பெரிய அளவில் சுற்றுலா போக நினைத்தோம். அதன் துவக்கமாக அருகில் இருக்கிற சின்னச் சின்ன இடங்களுக்கு சுற்றுலா செல்வதே எங்களுக்கு மிகப் பெரிய சவாலான விசயமாக உள்ளது.

அரசாங்கம் எங்களையும் மனதில் நிறுத்தி பொது இடங்கள், சுற்றுலாத் தளங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எல்லா இடத்தையும் மாற்றுத் திறனாளிகள் சென்று வருகிற மாதிரி வடிவமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் சாதாரணமான சக்கர நாற்காலி என்பது யாராவது ஒருவர் உதவியோடு சென்றுவர வேண்டும்.

அதற்குப் பதிலாக கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய பவர் வீல் சேரின் விலை மாற்றுத் திறனாளிகள் வாங்க முடியாத அளவிற்கு அறுபது ஆயிரத்தில் துவங்கி ஒன்றரை லட்சத்தை தாண்டி விற்பனையில் உள்ளது.

அரசாங்கம் மானிய விலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இதை வழங்கினால் மிகவும் நல்லது. அதேபோன்று கார் ஓட்டுவதையும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர், கிளட்ச் என வடிவமைத்தால் இன்னும் உதவியாக இருக்கும்” என முடித்தார்.

சாத்தூரில் இருக்கும் சரவணக்குமார்-முத்துமாலை தம்பதி, மாற்றுத் திறனாளி தம்பதிகளான இருவரும் சாத்தூரில் சொந்தமாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள லூசியா பார்வையற்றோர் கிறிஸ்டின் மிஷினரி பள்ளியில் படித்து அங்கே வார்டனாக மாற்றுத் திறனாளி குழந்தைகளிடத்தில் பணியாற்றிய முத்துமாலையும் போலியோவால் ஒரு காலில் பாதிப்படைந்தவர்.

தன்னைப்போல் மாற்றுத்திறனாளி ஒருவருடன் தான் தன் இல்வாழ்க்கையினை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியுடன் இருந்த அவருக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையாய் கிடைத்தவர்தான் சரவணக் குமார்.

+2 வரை படித்த சரவணக் குமார் இளம் வயதிலேயே போலியோவால் பாதிப்படைந்தவர். இருவருக்கும் திருமணம் நடைபெற இதோ இன்று “காதலொருவனை கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே என” ஒருவரை ஒருவர் அன்பால் கட்டிவைத்திருக்கின்றனர் இந்த மாற்றுத் திறனாளி தம்பதியினர்.

முகநூலில் மற்ற நண்பர்களுடன் இவர்களும் கைகோர்க்க இதோ இந்த சிறிய சுற்றுலா பயணத்தில் இந்த காதல் தம்பதிகளும் இணைந்திருக்கிறார்கள். இந்த பயணத்திற்குப் பிறகு தன் ஆசை கணவருக்கு எத்தனை விலை கொடுத்தாவது அந்த பவர் வீல் சேரை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதையே கனவாகக் கொண்டிருக்கிறார் முத்துமாலை. ‘‘அவர் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்தவர்” என்கிறார் இவர்.

‘‘மாற்றுத் திறனாளி நண்பர்களோடு பயணித்தபோது எங்களுக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகமாக இருந்தது. வாழ்க்கை மீது நம்பிக்கை அதிகமானது” என்கிறார் முத்துமாலை.