வேலையை துறந்த ஆசிரியை



- கி.ச.திலீபன்

நீட் தேர்வினால் தனது டாக்டர் கனவு பலியானதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னையே பலியாக்கிக் கொண்டார் மாணவி அனிதா. அவரது மரணம் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வு கொஞ்ச நஞ்சமல்ல.

தமிழ்நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் அதி தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆசிரியர்களுக்கும் இப்போராட்டத்தில் பங்கு இருப்பதை உணர்ந்து தனது அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை துறந்திருக்கிறார் சபரிமாலா. விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலாவிடம் பேசினேன்...

‘‘நீட் தேர்வு அனிதாவின் உயிரைப் பறித்து விட்ட பிறகு அத்தேர்வுக்கெதிரான போராட்டம் கல்வி எழுச்சியாக உருமாறி விட்டது. மருத்துவப் படிப்புக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தாலும் நீட் தேர்வு அவளை தகுதியற்றவளாக்கி விட்டது. பல மொழிகள், பல பாடத்திட்டங்களைக் கொண்ட இந்த நாட்டில் எப்படி எல்லோருக்கும் பொதுவாக ஒரு தேர்வை வைக்க முடியும்? அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரே தரத்திலான கல்வியைக் கொடுக்க வேண்டும்.

எப்படிப்பட்ட தேர்விலும் வெற்றி பெறும் அளவுக்கு அது தரமான கல்வியாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அதனால்தான் நீட் தேர்வில் அனிதா போன்ற ஏழை மாணவியால் வெற்றி பெற முடியவில்லை. அனிதாவின் மரணம் என்பது ஒரு கல்வி பிரச்னை. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இதற்காகப் போராட வேண்டும் என நினைத்தேன். தன்னெழுச்சியாக என்னுள் எழுந்த போராட்ட உணர்வு காரணமாக மரத்தடியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தேன்.

அதற்கான அனுமதியை மறுத்தனர். போராட்டத்துக்கான அனுமதி கேட்டுப் போனால் நான் அரசு ஊழியர் என்கிற காரணத்தால் அனுமதி தர முடியாது என்றனர். சமூகத்தின் மீது பற்று கொள்ள அரசு ஊழியர் பணி தடையாக இருக்குமென்றால் அது தேவையே இல்லை என்று முடிவு செய்து ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டேன்.

இது அவசரத்தில் எடுத்த முடிவல்ல. நன்றாக யோசித்து எடுத்த முடிவுதான். எப்போதும் இப்படியொரு முடிவுக்காக நான் வருந்தப் போவதில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்’’ என்கிறார்.