சாரா...சாரா...



- பி.கமலா தவநிதி

நாம் காரணமாயிராத அதே நேரம் நம்மால் மாற்றியமைக்க முடியாத நமது இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது. பல வலிகளையும் கடந்து வெற்றி கண்ட தன்னம்பிக்கை மனிதர்களை காலம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறது. அந்த வரிசையில் சாரா கர்ட்ஸ் என்கிற 26 வயதுப் பெண்ணையும் சேர்த்துக்கொள்ளலாம். இவர் Ehlers-Danlos Syndrome எனும் தோல் நோய்க்கு ஆளாகி 26 வயதிலேயே சுருங்கிய தோல்களுடன் முதுமையான தோற்றத்தைப் பெற்றிருக்கிறார்.

பிணியுற்ற தனது சருமத்தின் மீது எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தவர் ஒரு புள்ளியில் நேர்மறையான எண்ணத்துக்குத் திரும்புகிறார். தான் அசிங்கம் என நினைத்த அந்த சுருங்கிய தோல்கள்தான் தன்னை அழகுபடுத்துகிறது என்பதாக உணர்ந்து மகிழ்ச்சி கொள்கிறார். தான் அழகாக இருக்கிறோம் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடாக மாடலிங் துறையில் இறங்கி வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தன்னம்பிக்கை மனுஷியாய் நம் முன் நிற்கிறார் சாரா.

எஹெர்ஸ்-டான்லஸ் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் இந்த அரிதான நோய்க்குறி  முகம், கை, கால் என்ற பேதமின்றி உடலின் தோற்றத்தையே சீர்குலைக்கவல்லது. இந்த நோயில் பல ரகங்கள் உள்ளன. உதாரணமாக தோல், எலும்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்கு மற்றும் பல உறுப்புகள் என இவை அனைத்திற்கும் ஆதரவளிக்கும் இணைப்பு திசுக்களை பாதித்து சீர்குலைய செய்யும் நோய்தான் இது.

 உடல் ஆரோக்கியம், பழக்க வழக்கங்கள் அதனை தொடர்ந்து பரம்பரை வழி என இந்த நோய் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வகையாக தாக்கத்தை ஏற்படுத்தும்.  அப்படி சாராவுக்கு வந்ததோ கோடியில் ஒருவரை குறிவைக்கும் அரியவகை நோய். உலகில் இதுவரை இவருடன் சேர்த்து எட்டு பேர் இந்த நோயில் சிக்கியுள்ளனர். தன் சருமத்தில் ஏதோ இயல்பை மீறிய மாற்றத்தை சாரா உணரும் போதும் அவரின் வயதோ பத்து.

சருமம் தொங்கிப்போதல், உடலில் ஆங்காங்கு சின்ன பெரிய என்ற வித்தியாசம் இல்லாமல் மூட்டுகள் விலகுதல், தோல் தன் தன்மையை இழந்து, உடல் முழுவதும் வலுவிழந்து, உடலின் உள்ளுறுப்புகளில் சில பிரச்சனைகள் போன்று முழு உடலும் கோளாறாகி விடுவது தான் சாராவின் அன்றாட வாழ்க்கை நிகழ்வாக இருந்தது. தன் பள்ளி, கல்லூரி காலங்களில் தன்னையும்  தன் உடலையும்  வெறுத்து வந்த சாரா, தன் குறைபாட்டை மறைக்க உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடை அணிவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். 

கல்லூரி படிப்பு முடிவடையும் தருணங்களிலெல்லாம் உலகை விட்டு ஒதுங்கி, காதல், நட்பு என்று எல்லா உறவு களிடத்தில் இருந்தும் தன்னை தனிமைப் படுத்தியே வாழ்ந்திருக்கிறார். பதின்வயதில் ஏற்படும் இயல்பான ஆசைகளை கூட மறைத்து தனிமையில் தன்னை தானே ஒடுக்கி கொள்ளும் நிலையெல்லாம் கொடுமையான ஒன்று தான். தனக்கு ஏற்பட்ட குறைபாட்டை ஏற்றுக்கொள்ளாதவராய் சாரா ஆற்றாமையில் வாடி வந்தார்.

ஒரு கட்டத்தில் தன் குறைகளை ஏற்று தன்னைத் தானே நேசிக்க ஆரம்பித்தார். நம் வாழ்வில் வந்து போகும் நபர்கள் அனைவருக்கும் நம் வாழ்க்கையோடு நிச்சயம் ஒரு பங்கு இருக்கும். அதைப்போல் இவர் வாழ்க்கை ஆரம்பமாவதற்கு காரணமே இவர் காதலின் முடிவுதானாம். தனக்கு இருக்கும் குறைபாட்டின் தீவிரத்தை உணராதவராய் சாரா ஒருவர் மீது அதீத காதலில் இருந்திருக்கிறார்.

தன் குறைபாட்டை காரணம் காட்டி தன்னை வெறுத்து சென்ற காதலனின் பிரிவால் வாழ்க்கையே முடிந்தது என்று நினைத்த தருணத்தில் தான் யாஸ்மின் ஜியோர்ட்ஸ் மற்றும் பிரியான் பெர்க்லண்ட் ஆகிய இரு புகைப்படக்காரர்கள் சாராவுக்கு நண்பர்களாக கிடைத்துள்ளனர்.

தன் குறைபாட்டை மறைக்க விரும்பாதவராய் தன்னை உலகிற்கு காட்ட துணிந்தார். எஹெர்ஸ்-டான்லஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தன் கோளாறுடன் மாடலிங் மற்றும் புகைப்படம் எடுப்பதை தேர்ந் தெடுத்திருக்கிறார் சாரா.

நமது அன்றாட வாழ்வில் தற்போது இருக்கும் சமுதாயத்தின் தடைகளை உடைக்க விரும்பியது தான் இவர் தன் குறையை பொருட்படுத்தாமல் உலகிற்கு காட்ட முன்வந்ததன் காரணமாம். தற்போது ஃபேஷன், ஒப்பனை மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்றவற்றை தன்னுடைய முழு நேர வேலையாக கொண்டுள்ளார் சாரா. ‘லவ் யுவர் லைன்ஸ்’ என்கிற ஒரு பிரசாரத்தை 2015 ஆம் ஆண்டில் முன்னெடுத்தார் சாரா.

சிறிய தழும்பு முதல் பெரிய பிரசவக் கோடுகள் வரை நம் உடலில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை அடிப்படை யாகக் கொண்ட பிரசாரம் அது. அழகு என்பதற்கான வரையறைகள் ஏதும் இல்லை. அதற்கென ஓர் அளவீட்டை வைப்பதும் தவறானது. உண்மையில் அழகு என்பது நம் எண்ணத்தில்தான் இருக்கிறது.

வேர் பிடித்து செழித்து வளர்ந்திருக்கும் ஒரு செடியினைப் போல நமது எண்ணங்களும் செழிப்பானதாக இருக்க வேண்டும். அந்த செழுமை நமது வாழ்வினைப் பசுமையாக்கும். நம் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை மட்டுமே அதற்கு உரமாக இருக்க முடியும் என்பதைத்தான் சாரா நமக்கு உணர்த்துகிறார்.