எல்லாம் கடந்த காதல்



- ஜெ.சதீஷ்

ஜப்பான் நாட்டின் இளவரசி மகோ, சாதாரண குடும்பத்தை சேர்ந்த தனது காதலர் கேய் கொமுரோவை ‌விரைவில் திருமணம் செய்துகொள்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் ‌தனது திருமண நிச்சயதார்த்தம் ‌நடக்கவுள்ளதாக மகோ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்தைச் சேராத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், மகோ தன்னுடைய இளவரசி அந்தஸ்தை இழந்து சாதாரண குடிமகளாகி விடுவார்.

ஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் தான் இளவரசி மகோ. ஜப்பானிய அரச குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், மன்னர் பரம்பரையை சாராதவர்‌களை காதலித்து திருமணம் செய்து‌ கொண்டால், இளவரசி என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விதி மன்னர் குடும்பத்தில், பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். 

இந்த விதியை நன்கு அறிந்திருந்தபோதும், தனது காதலரான கேய் கொமுரோவை கரம் பிடி‌ப்பதற்காக சாதாரண குடிமகளாக வாழ முடிவு எ‌டுத்திருக்கிறார் மகோ. காதலுக்கு அதிகாரபூர்வமாக அனுமதி கோரி காத்திருந்த மகோவுக்கு தற்போது பச்சைக் கொடி காட்டப்பட்டிருப்ப‌தால் வரும் மே மாதம் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாக அறிவித்தார்.

டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் இவருடன் படித்தவர் கேய் கொமுரோ. தற்போது கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நீர் விளையாட்டு, வயலின், சமையல் போன்ற கலைகளில் வல்லவர். மகோவும் கொமுரோவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உணவகத்தில் சந்தித்து, வெளிநாட்டில் படிப்பது குறித்துப் பேசினார்கள்.

அன்று தொடர்ந்த நட்பு, பின்னாட்களில் காதலாக மாறியது. கெய் கொமுரோ ‌தற்போது மாத சம்பளத்துக்காக கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார். ராஜ அந்தஸ்தை காட்டிலும் எனது காதலருடன் வாழ்வதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்  என்கிறார் மகோ. இந்த அறிவிப்பு ஜப்பான் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி, மதம் என்ற பெயரில் காதலர்கள் மீது நடைபெறும் வன்முறைகளை நிகழ்த்தும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சிறந்த பாடமாக இந்நிகழ்வு இருக்கிறது.