இந்த வாழ்க்கையை நேசிக்கிறேன் : எழுத்தாளர் ஜி.ஏ. பிரபா



சினிமாவில் கலைப்படங்கள், ஜனரஞ்சகமான படங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ரசிகர்கள் இருப்பது போல் எழுத்தில்  ஜனரஞ்சகமான எழுத்துக்கென்று தனியாக வாசக, வாசகியர் எப்போதும் உண்டு. பெரும்பாலும் குடும்பத் தலைவிகளை மிகவும் கவர்வது  ஜனரஞ்சகமான எழுத்துக்கள்தான். அப்படி ஜனரஞ்சகமான தனது கதைகளின் மூலம் பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்  ஜி.ஏ.பிரபா.

பெண்களுக்குப் பிடித்த எழுத்தாளராக இருப்பதாலோ என்னவோ தான் 150க்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும்  எழுதியுள்ளவர் தற்போதும் மேலும் மேலும் நாவல்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார். இலகுவாகத்தான் அமைந்தது என் எழுத்துலகம் என்று  சொல்லும் ஜி.ஏ. பிரபா தன் வாழ்க்கைக் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டவை.“திருச்சி புதுக்கோட்டைதான் அப்பாவின் சொந்த ஊர்.  அம்மாவிற்கு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கெட்டிச் செவியூர் எனும் கிராமம். அம்மா சொந்த ஊர் இந்த  கிராமமாக இருந்தாலும் அம்மா பெங்களூரில்தான் படித்து வளர்ந்தார். அதனால் அம்மாவிற்கு தமிழ் அவ்வளவாக எழுத வராது. ஆனால்  நிறைய தமிழ் புத்தகங்கள் வாசிப்பார். அப்பா சுகாதாரத் துறை அதிகாரி. எக்கச்சக்கமான தமிழ் புத்தகங்கள் படிப்பார். எனக்கு ஒரே அக்கா.  என் சகோதரியும் நானும் எப்போதும் ஒன்றாக இருப்போம்.

அப்பாவுக்கு அடிக்கடி பணியிட மாற்றம் நடக்கும். அதனால் நான் பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. அரசாங்கப் பள்ளியில்தான் படித்தேன்.  அரசாங்கக் குடியிருப்பில்தான் தங்க வேண்டி இருக்கும். பொதுவாக அந்த குடியிருப்புகள் ஊர் புறத்தே இருக்கும். சில ஊர்களில்  சுடுகாட்டுக்கு அருகே இருக்கும். அதனால் பள்ளிக்கு போய் வந்த பிறகு பள்ளிப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்த்து கதைப் புத்தகங்கள் தான்  எங்களுக்கு ஒரே பொழுது போக்கு. பெரிதாக வெளியே எங்கேயும் போகமுடியாது.வீட்டுக்கு வார இதழ்கள் வரும். அது தவிர்த்து அப்பா  நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் எடுத்து வந்து தருவார். புரிகிறதோ புரியலையோ அந்தபுத்தகங்களைத்தான்படித்துக்கொண்டிருப்போம்.  வளர்ந்த பிறகு பல நூல்களை மறுவாசிப்பு செய்திருக்கிறேன்.ஆறாம் வகுப்பு படிக்கும் போதே சரத் சந்தர், தாகூர் என்று பல  ஆசிரியர்களின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போதே ‘செம்மீன்' போன்ற நாவல்களை  எல்லாம் படித்தேன்.

 ‘நீயே கதைகளை தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள். வெளியில் அந்தக் கதையைப் பேசி பகிர்ந்து கொள்ள முடியுமென்றால் அது தான் நல்ல  கதை’ என்பார் அப்பா.சின்ன வயதிலேயே கதைகளும் எழுத ஆரம்பித்துவிட்டேன். மாயாஜாலக் கதைகள் எழுதுவேன். எங்கள் குடியிருப்பில்  இருந்த அப்பாவின் நண்பர் ஒருவர் கையெழுத்துப் பத்திரிகை நடத்தி வந்தார். அதில் என் கதைகள் வெளியானது. ‘அம்புலிமாமா'விலும்  என் கதை வந்தது. நான் கதைகள் எழுதுவதில் அப்பாவுக்கு மிகவும் சந்தோஷம். எல்லாரிடமும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார்.
கல்லூரியில் கணிதம் படித்தேன். கல்லூரியில் படிக்கும்போதும் நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது 1982ம் ஆண்டு ‘பங்கு’ என்று ஒரு கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். என் முதல்  கதை வெளியானது. அப்பா தன்னுடன் வேலை செய்பவர்களுக்கெல்லாம் அந்த கதையைக் கொண்டு சென்று காண்பித்துப் பெருமைப்  பட்டுக்கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து ‘அமுதசுரபி'யில் ஒரு கதை வெளியானது.

மூன்றாமாண்டு கல்லூரியில் படிக்கும் போது ‘சில தவறுகள் மன்னிப்பதற்கில்லை’ என்ற கதைக்கு ‘அமுதசுரபி'யில் மூன்றாம் பரிசு  கிடைத்தது. ‘தாய்’ பத்திரிகையில் அந்த பத்திரிகையை நடத்தி வந்த வலம்புரிஜான் ஒரு போட்டி அறிவித்திருந்தார்.  ஆறேழு தலைப்புகள்  கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஏதாவது ஒரு தலைப்பில் கதை எழுதி அனுப்ப வேண்டும் என்பதுதான் போட்டி. அப்படி எழுதி அனுப்பிய  எனது கதைக்கு பரிசு கிடைத்தது. அதன் பிறகு அப்பத்திரிகையில் தொடர்ந்து என் கதைகள் வெளியாகின. சாவி சார் எனது எழுத்துக்கு  நிறைய ஊக்கம் கொடுத்தார். இவ்வளவு தூரம் நான் வரக் காரணம் அவர்தான். அவர் நடத்திய அனைத்து சிறுகதைப் போட்டிகளிலும்  கலந்து கொண்டு நிறைய பரிசுகள் வாங்கினேன். என் எழுத்துலக பிதாமகன் சாவி சார் தான். ‘இதயம் பேசுகிறது', ‘தினமணிக்கதிர்'  போன்ற இதழ்களிலும் என் கதைகள் வெளியாகின.

1987ல் எம்எஸ்ஸி பி.எட் முடித்து ஆசிரியை வேலைக்குச் சேர்ந்தேன். கதைகளும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.என் கதைகள்  வெளியானால் அப்பாதான் முதல்ல வாங்கி வந்து படிப்பார். குறைந்த பட்சம் ஒரு ஐந்து பிரதிகளாவது வாங்கி தன் நண்பர்கள்  அனைவருக்கும் கொடுப்பார். அம்மாவுக்கும் மகிழ்ச்சி. அம்மாவை பொறுத்தவரையில் நான் ஆபாசமாக எழுதக்கூடாது. முடிவு துயரமாக  இருக்கக்கூடாது. அன்பு, மனித நேயம், நம்பிக்கை போன்ற விஷயங்களை, நல்ல வடிவில் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின்  விருப்பம். அம்மா படித்த பிறகுதான் கதைகளை பிரசுரத்துக்காக அனுப்புவேன். அக்கா என் கதைகளை விமர்சனம் செய்வாள்.  நிறைகுறைகளை சொல்வாள். அக்காவிற்கு திருமணம் ஆனது. அக்காவிற்கு ஒரே மகன். அன்பான பையன். தற்போது வெளிநாட்டில்  இருக்கிறான். என் பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அம்மா, அப்பா தான்  என் உலகம் என்றிருந்தேன்.

பள்ளியில் ஆசிரியை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டைப் பொறுத்த வரை எனக்கு ஒரு வேலையும் கிடையாது.  படிப்பது, எழுதுவது மட்டும் தான் வேலை. அம்மாவே எல்லா வேலைகளையும் செய்து விடுவார். என்னை ஒரு வேலையும் செய்ய விட  மாட்டார். காபி, சாப்பாடு எல்லாம் உட்கார்ந்த இடத்திற்கே வந்துவிடும். கதை உருவாக்கத்தின்போது அம்மா என்னுடன் அமர்ந்து நிறைய  ஆலோசனைகள் சொல்வார். நிறைய கதைகளின் கருக்கள் அவர் சொன்னவை தான். அம்மா பெங்களூரில் படிக்கும் போது சுதந்திர  போராட்ட காலமாக இருந்ததால் தாத்தா அவரை பெரிதாக படிக்கவோ, வேறு கலைகள் கற்றுக்கொள்ளவோ அனுமதிக்காததால் தனக்கு  கிடைக்காத விஷயங்கள் தன் பிள்ளைகளான எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று அம்மா விரும்பினார். அதனால் நான் வாழ்வில்  உயர்வதற்காக எனக்குத் தேவையானவற்றை செய்தார். ராஜபாட்டை மாதிரி தான் இருந்தது என் எழுத்துலகம்.

நான் எழுதியதை அப்பா கொண்டு போய் அஞ்சலில் அனுப்பி வைப்பார். அப்பா தான் பத்திரிகை ஆசிரியர்களிடமும் பேசுவார். அப்பா தான்  பிரசுரமான புத்தகங்களை வாங்கி வருவார். இப்படி இருந்த அப்பா 2008ல் காலமானபோது மிகவும் உடைந்து போனேன். அதன்பிறகுதான்  நானே இந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டேன். 2010ல் எனக்கு இதயக்கோளாறு ஏற்பட்டு பைபாஸ் செய்ய வேண்டி வந்தது. அதற்கு  அடுத்த வருஷம் அக்காவின் கணவர் காலமானார். அந்த சமயத்தில் எனக்கு ‘சிறந்த பெண் எழுத்தாளரு’க்கான விருது  அறிவிக்கப்பட்டிருந்தது. அச் சூழ்நிலையில் என்னால் அவ்விருதை பெற நெய்வேலி செல்ல முடியவில்லை. இப்படி பல கவலைகள்  தொடர்ந்தன. ஆனால் எனக்கு ஒரே ஆறுதலாய் இருப்பது எழுத்துதான். இன்னமும் எனக்கு பெரிதாக வெளியுலகம் தெரியாது. எந்த  பத்திரிகை அலுவலகத் திற்கும் சென்றதில்லை. அவ்வளவாக எந்தபத்திரிகை ஆசிரியர்களையும் பார்த்ததில்லை.  இலக்கியக்கூட்டங்களுக்கெல்லாம் போனதில்லை.

இப்போது முகநூல் உலகம் எனக்கு வெளியுலகையும் புது நல்ல நண்பர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது என்று சொல்லலாம். ஃபேஸ்புக்  எனக்கு ஒரு சிறந்த அவுட்லெட்டாக இருக்கிறது. இதுவரை 170 நாவல்கள் எழுதி இருக்கிறேன். 6 நாவல் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.  90 சிறுகதைக்கும் மேல் எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு சிறுகதைத்தொகுப்பு ‘புதிதாய் பிறப்போம்’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது.  வானதி பதிப்பகம் வெளியிட்டது. ஐந்து குறுநாவல்கள் எழுதி இருக்கிறேன். 10க்கும் மேற்பட்ட தொடர்கள் வெளியாகி உள்ளன. ‘இலக்கியச்  சிந்தனை’ விருது வாங்கி இருக்கிறேன். சமீபத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற அமரர் ராஜரத்தினம் குறுநாவல் போட்டியில் எனது  குறுநாவல் முதல் பரிசு பெற்றது. எனது இரண்டு நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எம்.ஃபில் ஆய்வுக்கட்டுரைகளுக்காக  மாணவிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எனது ஒரு கதையை இந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.  பெங்களூரில் இருக்கும் ஜெயந்தி என்பவர் எனது 4 நாவல்களை  கன்னடத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். வாசகர் கடிதங்கள் வீட்டிற்கு வரும். ஒரு சிலர் போன் செய்து பேசுவார்கள். டி.கே.சி பேரன்  திருமலையப்பன் கூட எனது  எழுத்துக் குறித்து போன் செய்து பெருமையாகப்  பேசினார். நிறையோ, குறையோ  எழுத்தாளருக்கு  விமர்சனம் ரொம்ப முக்கியம். எங்கள் கிராமத்தில் அது நடக்காது. என் கதை வந்திருக்கு என்று புத்தகம் கொடுத்தால் அந்த புத்தகத்தின்  நடுவில் வந்திருக்கும் சமையல் குறிப்பு பற்றி ‘நன்றாக இருக்கிறது எழுதிக்கொண்டேன்' என்று சொல்லி புத்தகத்தைத் திரும்ப தருவார்கள்.  நாம் எதிர்பார்க்கிற விமர்சனங்கள்கூட கிடைக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்துதான் எழுதினேன். சமீபத்தில் அக்காவும் இறந்துவிட்டாள்.  அம்மா மட்டும்தான் உடன் இருக்கிறார். கோபிச்செட்டிப் பாளையத்தில்தான் இருக்கிறோம். பல மனத்தடைகளை தாண்டி எழுதி வருகிறேன்.  தற்போது தொடர் ஒன்றை எழுதி வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் 10,000 ரூபாய் பரிசு பெற்றேன். அப்போது என்னிடம் பேசிய  அனுராதா ரமணன், ‘அன்பை கொடுத்து அன்பை பெறுக, அன்பு ஒன்றே கொடுக்க கொடுக்க வளரும்’ என்று வாழ்த்தினார். அது தான் என்  வாழ்க்கையின் லட்சியமும் கூட. சில முறை மரணம் வரை சென்று மீண்டு வந்தவள் நான். அதுமட்டுமன்றி பல மரணங்களை  கண்ணெதிரே கண்டவள். என் அப்பா, என் அக்கா, என் அக்காவின் கணவர் அத்தனை பேரும் என் கைகளிலே மரணத்தைத் தழுவினர்.  மரணங்களை நேரில் பார்த்ததனாலோ என்னவோ துரோகம் செய்தவர்களை கூட மன்னித்து நேசிக்க ஆரம்பித்து விடுகிறேன். போன  நிமிஷம் என்பது முடிந்து போன ஒன்று. அடுத்த நிமிஷம் நம் கையில் இல்லை. இந்த நிமிஷம் மட்டும் தான் உண்மை. அதனால் இந்த  வாழ்க்கையை நேசிக்கிறேன். அனைவரையும் நேசிக்கிறேன்.

இருக்கும் வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போய்விட வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாம பெருந்தன்மையான குணத்தோடு தீங்கு  பண்ணாமல் நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம். முடியாவிட்டால் அன்பை மட்டும் பகிரலாம். காசு, பணம் எவ்வளவு கொடுத்தாலும்  மக்களை திருப்திப்படுத்த முடியாது. அதனால் அன்பை எல்லாருக்கும் பகிர்வோம். நாமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கூட  இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். யாருக்கும் தீங்கு நினைக்கக்கூடாது. எதிர்பார்ப்பு என்று எதுவும் கிடையாது  என்னிடம். நல்லதே நினைப்பேன். நல்லதே நடக்கும் என நினைக்கிறேன் எப்போதும். நம்மீது எறியப்படும் அம்புகளை தூக்கி எறிந்து விட்டு  நடந்து கொண்டே இருங்கள். நல்ல விஷயங்களை நல்ல நடையில் மனப்பூர்வமாக கொடுத்தீர்கள் என்றால் உங்கள் எழுத்து மக்களை  கட்டாயம் சென்றடையும்