செய்து பாருங்கள்



அவல் கட்லெட்

என்னென்ன தேவை?

அவல் - 1 கப்,
உருளைக்கிழங்கு - 2,
பச்சைப்பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 2 கைப்பிடி அவலை தனியாக  எடுத்து தூளாக மிக்சியில் அரைக்கவும். மீதியுள்ள அவலை கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். இதனுடன் மசித்த  உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், பச்சைப்பட்டாணி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசைந்து விரும்பிய வடிவில் கட்லெட்டாக  செய்து கொள்ளவும். சோள மாவைக் கரைத்து கட்லெட்டுகளை மாவில் தோய்த்து எடுத்து அவல் பொடியில் புரட்டி தோசைக்கல்லில்  போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

சிறுதானிய கம்பு வடை

என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1/2 கிலோ,
 உடைத்த கடலை - 75 கிராம்,
நிலக்கடலை - 75 கிராம்,
வெங்காயம் - 300 கிராம்,
சீரகம் - 4 டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - தேவையான அளவு,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ெணய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கம்பு மாவில் சிறிது வெந்நீர் ஊற்றி நன்கு பிசறிக் கொள்ளவும். இத்துடன் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,  பச்சைமிளகாய், உடைத்த கடலை, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.  கடைசியாக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கையில் வைத்து தட்டும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை  காயவைத்து மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

- கவிதா சரவணன், திருச்சி.