அக்ரூட் எனும் அற்புதம்!



மனிதன் உயிர் வாழத் தேவையான பல விதைகளை இயற்கை நமக்குத் தந்துள்ளது. அதில் ஒன்றுதான் அக்ரூட் எனும் வால்நட் ஆகும்.  இதில் மனிதனின் மன அழுத்தத்தை போக்கும் குணம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.அக்ரூட் மரம் மருத்துவ  குணங்கள் அதிகம் நிறைந்ததாக உள்ளது. இது சிக்கிம், நேபாளம், இமயமலைப் பகுதிகளில் இயற்கையாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது.  இதனுடைய இலை, பட்டை மற்றும் விதை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ரோமர்களும், பிரெஞ்சு மக்களும் இதைப் பயன்படுத்தி  வந்திருக்கிறார்கள். இதன் முழுமையான பகுதியை அக்ரூட் என்றும் உடைந்த பகுதியை வால்நட் என்றும் அழைப்பார்கள். இந்தியாவில்  இதன் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.

அக்ரூட்டில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாக இருக்கும். இதை தினம் கைப்பிடி அளவு உண்பதால்  மனிதனின் மூளை செயல்பாடுகளுக்கு ஊட்டம் தந்து நினைவாற்றல் இழப்பை சரி செய்கிறதாம். அதோடு மன அழுத்தம் உள்ளிட்ட  பிரச்னைகளுக்கும் நிவாரணம் தருவதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட சுமார் 7 வகையான விதைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்த பொழுது அக்ரூட்டில்தான் ‘பாலிபெனால்’  என்கிற ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் மனிதனின்  மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகளுக்கு அதிக நன்மை செய்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க்,  கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்றவை அதிக அளவில் இதில் உள்ளது. மேலும் மூளை வளர்ச்சிக்கு தேவையான  ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. இயற்கையின் கொடையான இந்த அக்ரூட்டை நம் உடல்நலம் காக்க நாமும் பயன்படுத்தி நம்  சந்ததியினருக்கும் இதை அடையாளம் காட்டுவோம்.

- எம்.எஸ்.மணியன்