ஃபேஸ்புக் உருவான கதை...இருபதாம் நூற்றாண்டில் இணையம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உருவான சமூக வலைத்தளங்கள் இன்று நம் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. 600க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களால் அறிமுகமில்லாத பலரோடு நம்மால் உறவாட முடிகிறது. இவற்றுக்கெல்லாம் அரசன் ஃபேஸ்புக். மிகக்குறுகிய காலத்திலேயே இரண்டரை பில்லியனுக்கு மேற்பட்டவர்களை ஈர்த்துள்ளது. இது உலகின் மொத்த இணையதளப் பயன்பாட்டில் பாதி. தற்போது நாம் ஃபேஸ்புக்கை தகவல், கருத்து பரிமாற்றம், புகைப்படப் பகிர்வு, விளம்பரங்கள், சமூக போராட்டங்கள் என பல தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால் ஃபேஸ்புக் உருவாக்கப்பட்ட ஆரம்பகால நோக்கம் வேறாக இருந்திருக்கிறது. 2003ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஜக்கர்பெர்க்கிற்கு அப்போது வயது பத்தொன்பது. மிகவும் துடிப்பான இளைஞனான இவருக்கு கணினித்துறையில் பில்கேட்ஸைப் போல சாதிக்கவேண்டும் என்பது தான் கனவு. ‘கோர்ஸ் மேட்ச்’ எனும் கணினி நிரலை உருவாக்கினார். ஒரே துறை சார்ந்த மாணவர்கள் குரூப் ஸ்டடி செய்வதற்கு இந்த நிரல் பயன்படக்கூடியதாக இருந்தது. ஆனால் இது போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு மிகக் குறுகிய காலத்திலேயே முற்றிலும் வித்தியாசமான கணினி நிரல் ஒன்றை வடிவமைத்தார்.

‘ஃபேஸ்மேஷ்’ என அழைக்கப்பட்ட அந்த நிரலில் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண்களின் புகைப்படம் கொடுக்கப்படும். அதில் எது கவர்ச்சியான புகைப்படமோ அதனை பயனாளர்கள் தேர்ந்தெடுத்து மதிப்பெண் அளிக்கவேண்டும். இதற்கு நிறைய மாணவர்களின் புகைப்படங்கள் தேவைப்பட்டது. எனவே, ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பாக வைத்திருக்கும் மாணவர்களின் தகவல் மற்றும் புகைப்படங்களை ‘ஹேக்’ செய்து தன்னுடைய சொந்த தேவைக்கு பயன்படுத்தினார் மார்க். அடுத்த ஒரு வாரத்தில் ‘ ஃபேஸ்மேஷ் ’ பல்கலைக்கழகம் முழுவதும் பிரபலமானது.

பல மாணவர்கள் தங்களுடைய புகைப்படம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்த நிலையில், மார்க் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஒருபக்கம் பல எதிர்ப்புகள் வந்த போதிலும், மறுபக்கம், இதற்கு கிடைத்த வரவேற்பு, மார்க்கை மேலும் சிந்திக்கத் தூண்டியது. கவர்ச்சியான புகைப்படத்தை காண்பது நோக்கமென்றால், அவை இணையதளத்தில் எளிதாக கிடைக்கும். ‘ஃபேஸ்மேஷ்’  வெறும் கவர்ச்சிக்காக மட்டும் வரவேற்பை பெறவில்லை என்பதை உணர்ந்த மார்க், இதையே விரிவுபடுத்தி ஒரு இணையதளம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார்.

ஒரு தகவலை தேடுவதற்கும், ஆராய்வதற்கும் கூகுளும், விக்கிப்பீடியாவும் இருந்த காலகட்டத்தில், நம்மை சுற்றியுள்ள அறிமுகமில்லாத நபர்களை பற்றித் தெரிந்துகொள்ள அப்போது எந்த இணையதளமும் இல்லை. ஆனால் அதை எவ்வாறு உருவாக்குவது என்று மார்க்கிற்கு குழப்பமாகவும், சவாலாகவும் இருந்தது. ஒரு நாள் வகுப்பில் நண்பன், ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு அந்தப் பெண்ணிற்கு காதலன் இருப்பானா இல்லையா என்று மார்க்கை தொல்லை செய்ய கோவம் அடைந்த மார்க் ‘‘எந்தப் பெண்ணும் தன்னைப் பற்றி நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டு திரியமாட்டாள்.

போய் வேலையைப் பார்...’’ என்று சொல்லி விட்டார்.  அப்போதுதான் மார்க்கிற்கு ஒரு உண்மை தெரிந்தது. ஒருவருடைய ஃபுரபைலை பார்க்கும் போதே அவர்களது நோக்கம் தெரிந்துவிட்டால் பழகுவதற்கு எளிது என்பதை மார்க் உணர்ந்தார். பிப்ரவரி - 4, 2004 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிறகு, பல்கலைக்கழகம் முழுவதும், அனைவராலும் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டது. இது மெதுவாக, பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியிலும் பிரபலமாக ஆரம்பித்தது. ஆனால் ஃபேஸ்புக்கை விரிவுபடுத்துவதற்கு முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை.

இரண்டு வருடங்களில் வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஃபேஸ்புக் பரவ ஆரம்பித்திருந்தது. விளம்பர தொல்லை கள் இல்லை, பயன்படுத்துவதற்கும் எளிது, என்பதால் தகவல் தொடர்புக்கும் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களின் அன்றாட வாழ்வில் ஃபேஸ்புக் முக்கிய அங்கமாக மாறியது. இந்த சமயத்தில் ‘நெப்ஸ்டர்’ இணையதளத்தின் நிறுவனர் ‘சீன் பார்க்கருக்கு ஃபேஸ்புக் பற்றி தெரியவந்தது. அதன் செயல்முறை பிடித்து போகவே மார்க்கை தொடர்பு கொண்டு, ‘‘ஃபேஸ்புக், வருங்காலங்களில் உலகையே ஆட்டிப்படைக்க போகிறது’’ என்று பாராட்டி, ஃபேஸ்புக்கில் முதலீடு செய்வதற்காக சில முதலீட்டாளர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இதன் பிறகு தான் ஃபேஸ்புக் உலகம் முழுதும் பரவத்தொடங்கியது. பில்லியன் டாலர்ஸ் நிறுவனமாக ஃபேஸ்புக் மாறியது. டெக் உலகில் தவிர்க்க முடியாத இடத்தையும் பிடித்தது. விளையாட்டாக உருவாக்கிய ஃபேஸ்புக் இன்று உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஒரு நாட்டின் அரசியல் மாற்றத்திற்கு இன்றைக்கு காரணமாகவும் இருக்கிறது என்பதை 34 வயதை கடந்திருக்கும் மார்க் ஜக்கர்பெர்க் தற்போது நினைத்து பிரமிக்கிறார்.

- பிரபாகரன் காளி