பேரண்பு முரண்



மூளை முடக்குவாதத்தால் (cerebral palsy) பாதிப்புக்குள்ளான டீன் ஏஜ் மகளோடு தன்னந்தனியாக ஒரு தந்தை நிகழ்த்தும் உணர்ச்சிப் போராட்டமே ‘பேரன்பு.’
‘நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வதற்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து இந்தக் கதையை எழுதுகிறேன்’ என்கிற அமுதவனின் குரலோடு தொடங்கி அத்தியாயம்... அத்தியாயமாய் நகரும் படம் குறித்து, சிறப்புக் குழந்தைகளும், அந்தக் குழந்தைகளைப் பெற்ற சிறப்புப் பெற்றோர்களும் இங்கே அலசுகிறார்கள்...

கற்பகம் குமணன், சென்னை


‘‘மூளை முடக்குவாதம் என்பது நோயல்ல... குறைபாடு. இது 100 சதவிகிதமும் பிறப்பிலே வரும். என்னுடைய 22 வயதில் என் மகன் குமரன் பிறந்தான். அப்போது என் கணவர் அனைத்திந்திய வானொலியில் பணியில் இருந்தார். நாங்கள் அப்போது நாகர்கோவிலில் இருந்தோம். குமரனுக்கு தெரபி கொடுப்பதற்காகவே சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். ஆர்.ஜே. வேலை என்பது அவரது டிரீம் மற்றும் ஃபாஷன்(Passion). குமரனுக்காக அந்த வேலையை உதறிவிட்டு தொழில் தொடங்கினார். குமரன் இப்போது எம்.ஏ.எம்.ஃபில் முடித்து பி.எச்.டி. செய்து கொண்டிருக்கிறான்.

எங்கள் மகன் குமரனின் தோழி, பெற்றோர்களால் நன்றாக கவனிக்கப்பட்டு ரெகுலர் கல்லூரியில் இணைந்து படித்து இரண்டு எம்.ஏ. பட்டங்களை வாங்கியுள்ளார். ஹிந்தியிலும் பட்டம் பெற்றுள்ளார். படம் குறித்துச் சொல்ல வேண்டும் என்றால், ஐ ஓப்பனரா ஒரு பெயிண்டிங் மாதிரி படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் இயற்கை காட்சி, நீரோடை, குதிரையின் வருகை எல்லாமே நன்றாக உள்ளது. எல்லோரும் இதைப்பற்றியே பேசுவதால் இயக்குநர் ராமிற்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

நடிகர் மம்முட்டி மிகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் படத்தில் பேச வேண்டிய விசயத்தை இயக்குநர் கோட்டை விட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த படம் எதார்த்தமாக இல்லை. ஒரு பெண் குழந்தையை பாதுகாப்பின்றி எல்லா இடங்களிலும் தனிமைப்படுத்துவதும், தன் மகளுக்கு முக்கியத் தேவையான உடற்பயிற்சி, படிப்பு, உடலியக்க மருத்துவம் என எதையும் கொடுக்காமல் காட்டுவதும் சுத்த ஹம்பக். என் அனுபவத்தில் சிறப்புக் குழந்தைகளின் அப்பாக்கள் குழந்தையோடு மனைவியை விட்டுச்செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

இதில் தாய் செல்வதாக காட்டுகிறார். பதினோறு வருடமாக தன் மகளைப் பார்க்காத அப்பா. அப்பாவைப் பார்க்க பயப்படும் மகள். படம் முழுவதும் மகளைத் தனிமைப்படுத்துவதும், பாதுகாப்பற்ற இடங்களில் தனியாக விட்டுச் செல்வதும், சாகடிக்கப் பார்ப்பதுமாக என்ன மாதிரியான அப்பா கேரக்டர் இது? மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இந்தப் படத்தை பார்த்தால் கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும்.”

இளங்கோ குமணன், சென்னை

‘‘இந்தப் படம் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் படும் கஷ்டங்களை சரியாக முழுமையாகச் சொல்லுகிற படமல்ல. பேரன்பு படத்தின் தகப்பன் அமுதவன் ஒரு தோல்விகரமானவன். தன் மகளுடைய பிரச்சனை பற்றி சரியான புரிதல் இல்லாதவன். மகளின் பாலியல் உணர்வுக்காக அமுதவன் ஆண் பாலியல் தொழிலாளரைத் தேடுவதும், கடலில் தள்ளி சாக வைக்க நினைப்பதும்தான் பேரன்பா?

தவறான வழிகாட்டுதலாகவே படம் இருக்கிறது. குழந்தையை ஒதுக்க நினைக்கும் கணவனுக்குத் தெரியாமல் தன் குழந்தையை பிஸியோதெரபி கொடுக்க அழைத்துவரும் பல தாய்மார்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு அம்மா பதின்பருவத்தில் இருக்கும் மகளை விட்டுச் செல்வதுபோல் காட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பேரன்பை படமாகப் பார்த்து மறந்துவிடுங்கள். வெற்றிபெற்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்.”

ரூபா ராஜேந்திரன், சென்னை

‘‘படம் அப்படியே என் வாழ்க்கைய திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. படம் முடிந்த பிறகு நானும் என் அப்பாவும் அமைதியாக நகர்ந்தோம். இது அப்பா மகளுக்கு நடுவில் இருக்கும் உணர்வு. பல இடங்களில் நடிகர் மம்முட்டி முகத்தில் என் அப்பா முகமே எனக்குத் தெரிந்தது. நிறைய காட்சிகளில் அப்பாவிற்கும் எனக்கும் இடையே நிகழ்ந்த நிறைய விசயங்களை உணர்ந்தேன். என் வயது 35. என் அப்பாவிற்கு 72. எனது அம்மா இறந்துவிட்ட நிலையில், சிங்கிள் பேரன்டாய் மாதவிடாய் நேரத்தில் அப்பா எனக்கு இன்னும் உதவிக் கொண்டிருக்கிறார்.

மாற்றுத் திறனாளி பெண் குழந்தையை என்னதான் பாதுகாத்து வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தாலும் வயதிற்கேற்ற உணர்வுகளைத் தடுக்கவே முடியாது. அதை வெளிகாட்டியிருப்பது மிகவும் சிறப்பு. என்னுடைய திருமண ஆசைகளை உணர்ந்த என் அப்பா, பல நேரங்களில் எனக்கான துணையை எப்படித் தேடுவதென கண்கலங்கி இருக்கிறார். அந்த உணர்வை அமுதவனிடத்தில் அப்படியே பார்க்க முடிந்தது. அதற்காக 13 வயது சிறுமிக்கு, தந்தை பாலியல் தொழிலாளியை தேடுவது மிகப் பெரும் நெருடல்.

இது அதற்கான தீர்வே கிடையாது. அமுதவனின் அறியாமையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிவில் மீண்டும் சிறுமியை தனிமைப்படுத்திக் காட்டுவதும் சரியல்ல. மாற்றுத் திறனாளிகளின் உணர்வை சாதாரணமாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களின் உணர்வை வெளிப்படுத்த ஒரு படத்தை எடுக்க இயக்குநர் முயற்சித்தது பாராட்டுக்குரிய விசயம்.

படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்த்து, இதில் காட்சிப்படுத்தியுள்ள விசயங்களை கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். பல இடங்களில் நான் வெளியில் செல்ல நேரும்போது அருகில் இருக்கும் நிறைய நண்பர்கள் உதவ ஓடி வருவார்கள். சமுதாயம் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறார்கள். அன்பாகவே இருக்கிறார்கள். முழுவதும் ஒதுக்கு வது மாதிரியான காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.’’

கீதா ராஜா, கோவை

‘‘பாப்பா கனத்த இதயத்தோடு நம்மை படத்தை பார்க்க வைத்துவிட்டாள். ஒரு தந்தை தனியாக  தன் சிறப்புக்  குழந்தையை வளர்க்கிறார் என்கிற விசயம் மட்டுமே இதில் வித்தியாசமானது. சிங்கிள் பேரன்டாக பெண் குழந்தையை அப்பா வளர்ப் பதில் உள்ள கஷ்டத்தை இயக்குநர் வெளிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம். சில எதார்த்தமான உண்மைகளைத் தொட்டிருப்பதும் சிறப்பு. பெற்றோர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்படியான காட்சிகளை அமைத்திருந்தால் பேரன்போடு நம் வாழ்த்துக்களை பகிர்ந்திருப்போம். ஆனால் சமூகத்தில் ஈர உள்ளங்களோடு அரவணைக்கும் பெற்றோரும், மற்றவர்களும் இல்லை என்ற உணர்வை படம் பலப்படுத்துகிறது.

என் மகன் ஆட்டிசம் குறை பாட்டோடு பிறந்தபோது குடும்பமே அவனை கண்ணிற்குள் வைத்து பாதுகாத்தோம். அவனை பொறியியல் படிப்புவரை படிக்க வைத்தோம். இன்றைக்கு இந்தக் குழந்தைகளுக்கு நிறைய சிறப்பு பள்ளிகள் வந்துவிட்டது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்ல நிறைய டே கேர் சென்டர்கள் உள்ளது. பாஸிடிவ்வான ஒரு விசயம்கூட படத்தில் காட்டப்படவில்லை. பெற்றோர்களுக்கு இருக்கும் பயத்தை மேலும் அதிகமாக்கி, இயக்குநர் பயமுறுத்தியுள்ளார். இருக்கும் கொஞ்சம் நம்பிக்கையும் பலவீனப்பட்ட உணர்வே இருக்கிறது.’’

கிரிஜா, கோவை

‘‘மன ரீதியாக நிறைய பிரச்சனைகளை  பெற்றோர்களாக நாங்கள் சந்தித்து இருக்கிறோம். இன்னும் சந்தித்துக்கொண்டும் இருக்கிறோம். என்ன கஷ்டங்கள் இருந்தாலும் சிறப்புக் குழந்தைகளை தனிமைப்படுத்துதல் கூடாது. சமுதாயத்தை சார்ந்துதான் எப்போதும் அவர்களை வளர்க்க வேண்டும். அதுதான் அந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு எப்போதும் நல்லது. சிறப்புக் குழந்தையான  எங்கள் மகன் ஜெகதீஷ் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறான் என்றால் அவனைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள், நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் அது சாத்தியமானது.

தியாக உள்ளங்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் எப்போதும் எங்களைச் சுற்றி இருந்தார்கள். இல்லையென்றால் வேலைக்குச் செல்லும் ஒரு தாயாக என்னால் அவனை இவ்வளவு சிறப்பாக, தன்னை சுயமாக நிலை நிறுத்திக்கொண்ட ஒருவனாக வளர்த்திருக்க முடியாது. பல நேரங்களில் மறைமுகமாக, யார் என்று முகம் காட்டாமலே நிறைய உள்ளங்கள் உதவியுள்ளார்கள். இந்த களிமண் நமக்கு என்ன பண்ணப்போகுது என மூலையில் தூக்கி என் மகனை வீசி இருந்தால் என்னவாகியிருக்கும்.

இன்று என் மகன் ஜெகதீஷ் ஒரு சிலையாகி என் கண் முன்னால் நிற்கிறான். எனவே பெற்றோர்கள் எதிர்மறை எண்ணம் இல்லாமல் முயற்சிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை இந்தப் படம் சுத்தமாகத் தரவில்லை. பெண் குழந்தையின் மாதவிடாய் பிரச்சனை குறித்து இயக்குநர் படத்தில் பேசியிருக்கிறார். வாடகை வீடுகளில் வசிக்கும் சூழ்நிலையிலும், பெற்றோர்கள் வேலைக்குப்போக வேண்டிய சூழலிலும், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலையில் உள்ள பெண் குழந்தையாக இருந்தால்,

குழந்தையின் நலன் கருதி மருத்துவர்கள் சம்மதத்துடன் சில பெற்றோர்கள் யூ டிரஸ்ட்டை நீக்கிவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்காது. இந்த மாதிரியான பெற்றோர்களையும், குழந்தைகளையும் நான் சந்தித்திருக்கிறேன். 13 வயது குழந்தைக்கு பாலியல் உணர்வு இருக்கும் என்பதற்காக ஒரு அப்பா செய்ய நினைக்கும் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. பெண்களுக்கு இதயமே இல்லாதது மாதிரி படத்தில் காண்பித்து இருப்பதும் ரொம்பவே உறுத்தல். நிறைய இடங்களில் படம் முரணாக உள்ளது.’’