வாழ்வென்பது பெருங்கனவு!கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... சமூக சேவகி சக்தி சீனிவாசன்

கனவு என்பது ஒவ்வொரு மனிதனின் தூக்கத்தில் உலா வரும் உள்மன வெளிப்பாடாகும். கனவு காணாத மனிதனே இல்லை என்னும் அளவிற்கு மனிதனின் இயல்பான செயலாய் இந்தக் கனவு இருந்து வருகிறது. சிலர் கடைசி வரைக்கும் கனவு கண்டே பொழுதைக் கழிப்பார்கள். இது கனவுகளுக்கு மட்டுமே உள்ள உரிய சிறப்புத் தன்மையாகும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ‘மாணவர்களே, மக்களே கனவு காணுங்கள்’ என்ற போது தான் கனவின் முக்கியத்துவம் பெரும்பாலான மக்களிடையே பேசப்பட்டது.

அப்படி அவர் என்ன கனவு காணச் சொன்னார்... ‘ஒருவருக்கு தூக்கத்தில் வருவது கனவு அல்ல உன்னை தூங்கவிடாமல் செய்யும் கனவே லட்சியக்கனவு, அப்படிப்பட்ட கனவைக் காணுங்கள் அது உங்களை உயர்த்தும்’ என்றார். அப்படிப்பட்ட கனவை நனவாக்கி இன்றைக்கு இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு நிர்வாகியாகவும், சமூக சேவகியாகவும் இயங்கி வரும் சக்தி சீனிவாசன் அவரது வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘உன்னால் சுமக்க முடியாத அளவுக்கு ஒரு பெருங்கனவை சுமந்து நில்; அது உலகத்தில் எல்லாவற்றையும் விட பெரியது என்கிறார் அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அப்படித்தான் நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இந்த சமுதாயத்திற்கு கல்வியை போதிக்கும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் என கனவு கண்டேன். பள்ளியை விட்டு வரும்போது புத்தகச் சுமைகளோடு எனது கனவுகளையும் சுமந்துகொண்டே வருவேன். எனது குடும்பம் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பம்.

அப்பா பழனியப்பன் -அம்மா பழனியம்மா தம்பதியருக்கு ஒரே மகளாகப் பிறந்ததாலோ என்னவோ அதிகச் செல்லமாக வளர்த்து வந்தனர்.  ஆரம்பக் கல்வியை எங்கள் பகுதி வீரப்பம்பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை எடப்பாடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கற்றேன். அடுத்து பாலிடெக்னிக், எஞ்சினியரிங் என படித்து முடித்தபோது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. படிப்பின் மீதான ஆர்வத்தால் வேலையில் இருந்துகொண்டே தொலைதூரக் கல்வியில் எம்.பி.ஏ. படித்து முடித்தேன்.

பெற்றோர் ஆசீர்வாதத்துடன் திருமணம் முடிந்தது. கணவர் சீனிவாசன் அன்பு செலுத்துவதிலும், எனது கனவுகளை நிறைவேற்றுவதற்கும் உற்ற தோழனாகவே அன்று முதல் இன்றுவரை இருந்து வருகிறார் என்றே சொல்வேன். நான் பள்ளியில் படிக்கும்போது என்னவாக ஆக வேண்டும் என்று கனவு கண்டேனோ அதற்கான முயற்சியை எடுத்து வந்தேன். தொடர்முயற்சியின் பலனாக தற்போது இரண்டு பள்ளிகளுக்கு நிர்வாகியாக இருக்கிறேன். பணம், பதவிக்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம், ஆனால் கனவுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

இளம் வயதில் நமக்கான லட்சியக் கனவு காணவில்லை என்றால், எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். நாம் கனவு காணும் விசயங்களை எல்லாம் அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதனால் கனவை நனவாக்க மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். கனவுக்கு இலக்கு கிடையாது, எவ்வளவு வேண்டுமானாலும் கனவு காணலாம். எனவே, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சொன்னதுபோல் கனவு காணுங்கள். எங்கள் பகுதியில் 2005 ஆம் ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி கற்பது என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

அந்தக் கனியைப் பறித்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் கணினி அறிவை வளர்க்க வேண்டும்; ஏனெனில், இனி வரப்போவது கணினி காலம் என்பது என் கனவாக இருந்தது. தூங்கும்போதும், நடக்கும்போதும் அதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். அந்த தேடல், அந்த லட்சியக் கனவாக இருந்த கணினிக் கல்வியை எங்கள் பகுதி ஏழை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் எண்ணத்தோடு தனியொரு ஆளாக ஒரு கணினி மையத்தை முதன்முதலாக ஆரம்பித்தேன். இதனையடுத்து 2009-ம் ஆண்டு எங்கள் கிராமப்புற பகுதியில் புதிய முயற்சியாக குழந்தைகள் விளையாட்டுப் பள்ளி (Play School) ஆரம்பித்தேன்.

இலவசமாக எதைக் கொடுத்தாலும் அதற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும் என்பதால் குறைந்த கட்டணத்தில் அதை நடத்தினேன். என் கணவரின் உறுதுணையோடு 2010-ம் ஆண்டு யுனிவர்சல் பப்ளிக் ஸ்கூல் (Universal Public School) என்ற பள்ளியை 3 வகுப்பறைகள், 4 ஆசிரியர்கள் மற்றும் 48 குழந்தைகளுடன் ஆரம்பித்தேன். முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். எனது கணவரும் நானும் சேர்ந்து எடுத்த விடாமுயற்சியால் தற்சமயம் எங்கள் இரண்டு பள்ளிகளிலும் 2500 மாணவர்கள், 160 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை இங்கு பெருமிதத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

எங்கள் பள்ளி முற்றிலும் கிராமப்புறத்தில் உள்ளது.  ஆனால், ஒரு மாநகரத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளோம். ஏனெனில், கல்வி என்பது பணம் ஈட்டுவதற்கல்ல, அது ஒரு சேவை. அதனால், தரமான கல்வியை வழங்கி வருகிறோம். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கிராமப்பகுதியில் உள்ள தகுதி வாய்ந்த பட்டதாரிகள். அவர்களை பணியமர்த்தும் போது அவர்களுக்கு நவீன கல்வியை நானே நேரடியாக பயிற்சி அளித்து அவர்களின் திறன்களை வளர்க்கச் செய்கிறேன்.

இன்றைய நவீனத்துவத்துக்கு ஏற்ற கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கற்கும் கல்வியில் பலனில்லாமல் போய்விடும். எனவே, அறிவியலும், புவியியலும், நவீனமும் திறன்மேம்பாட்டோடு கற்பிக்கப்படுகிறது. தற்போது எங்கள் பள்ளி மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல அறிவியல் ஆய்வரங்கங்களில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து வருகின்றனர்; கராத்தே (Karate), சதுரங்கம் (Chess),  சிலம்பம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் (Gun Shooting) போன்ற போட்டிகளில்; தேசிய அளவில் பங்கேற்கக்கூடிய அளவில் எங்கள் பள்ளி மாணவர்களை தயார்படுத்தியுள்ளோம்.

எங்களது பள்ளியை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கும் விளை யாட்டு உபகரணங்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள் என வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறேன். மற்றும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப் புணர்வு பற்றியும் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் ஒவ் வொரு துறையை சார்ந்த விஞ்ஞானிகளை பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேலும் வளர்க்கும் விதமாக மாணவர்களுடன் அறிவியல் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வு செய்து வருகிறேன்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் பல அரசுப் பள்ளி மாணவர்களையும் பங்கேற்க வைக்கிறேன். எனது கனவு மெய்ப்பட்டதில் அதிக மகிழ்ச்சி. அதனால், எடப்பாடி ரோட்டரி சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு, எடப்பாடி ரோட்டரி சங்கத்தின் கல்வி அறிவுக்குழு தலைவராகவும் இருந்து என்னால் எந்த அளவுக்கு இந்த சமுதாயத்திற்கு நற்பணிகளைச் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்துவருகின்றேன். எங்கள் கிராமப்புற பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இன்றைக்கு நடைமுறையில் உள்ள அனைத்து நவீன அறிவு சார்ந்த கல்வி வசதிகள் கிடைக்கவும், நம் நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கிக் கொடுக்கவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பேன்’’ என்றார் சக்தி சீனிவாசன் பெருமிதத்துடன்.

- தோ.திருத்துவராஜ்