Four More SHOTS Please ..!



சினிமா, சீரியல்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள், குறும்படம் அடுத்து என்ன?... என்றால் ஹாட் வெப் சீரிஸ் என்கிறார்கள் இளசுகள். ஏகப்பட்ட வெப் சீரிஸ்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டன. முதலில் யூடியூபில் மட்டுமே அங்கொன்றும், இங்கொன்றுமாக வாரா வாரம் ஒரு எபிசோட் என்னும் ஃபார்முலாக்களுடன் களம் இறங்கிக்கொண்டிருந்தன இணைய சீரியல்கள். இப்போதெல்லாம் நிலையே வேறு. ஒரு சீசன் அதில் குறைந்தபட்சம் 8 அதிகபட்சம் 10 எபிசோட்களாக ஒரே நாளில் ரிலீஸ் செய்துவிடுகிறார்கள்.

இதே பாணியில் அமேசான் ஆப்பில் புது வரவாக களமிறங்கியிருக்கும் குளுகுளு சீரிஸ் ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ்’. கலர்ஃபுல் பெண்களின் கலக்கல் கான்செப்ட். தனக்கென தனி உலகில் இருக்கும் பிரபல ஆன்லைன் தளத்தின் எடிட்டர் மற்றும் பத்திரிகையாளர் தாமினி, விவாகரத்தான இளம் தாய் அஞ்சனா மேனன், பப்ளி சிங்கிள் கேர்ள் சித்தி படேல் மற்றும் இரு பாலின சேர்க்கையாளராக உமாங் சிங். நால்வரும் நண்பர்கள். எந்நேரமும் பாரில் ஜாலி மொமெண்ட் காட்டிக்கொண்டு பாட்டிலும், கையுமாக திரியும் மில்லினியம் பெண்கள்.

இவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு சியர்ஸ் கொடுக்கும் பார் ஓனர் பிரதீக். நால்வரும் சேர்ந்து இருக்கும் பார்தான் மையப்புள்ளி. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்வில் ஏகப்பட்ட பிரச்னைகள். பத்திரிகையாளர் தாமினிக்கு வேலையில் உயரதிகாரி குடைச்சல், இளம் தாய் அஞ்சனாவிற்கு குழந்தையை வளர்ப்பதிலும் மேலும் கணவனின் புது பெண் உறவைக் கண்டும் மனக்குழப்பம், சித்திக்கு தான் குண்டாக இருப்பதால் நல்ல வரன் அமையவில்லை என்னும் அம்மாவின் டார்ச்சர்.

உமாங் சொல்லவே வேண்டாம். ஓரின மற்றும் ஈரினச் சேர்க்கையாளர். பிரச்னைக்கு காரணம் வேண்டுமா என்ன? தினம் தினம் பிரச்னை... அதுக்கு ஒரே மருந்து இவர்களின் மீட்டிங் டைம்தான். நால்வருமே பெண்ணியம் என்ற போர்வையில் எல்லை மீறிய தவறுகளை செய்கின்றனர். அதுவே அவர்களின் வாழ்வை எப்படி திசை திருப்புகிறது... முடிவு என்ன என்பது மீதிக்கதை. ஏற்கனவே பல லைக்குகளை க்ளிக் செய்துவிட்ட இந்த வெப் சீரிஸை ரங்கீதா பிரித்திஷ் நாந்தி இயக்கியிருக்கிறார்.

பெண் இயக்குநர் என்பதாலேயே சில கருத்துகளை உண்மையான உணர்வுகளுடன் முன்வைக்க முடிந்திருக்கிறது. அதிகமான பார் காட்சிகள் மற்றும் திரும்பத் திரும்ப வரும் சீன்கள் தவிர்த்து முழு சீரிஸும் பல இடங்களில் இக்கால பெண்களுக்கான மெஸ்ஸேஜ்களை அள்ளித் தெளிக்கின்றன. மொத்தத்தில் பெண் சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை எது வரை என்பதை கலர்ஃபுல், ஹேங் ஓவர் அத்தியாயங்களுடன் எடுத்து வைத்திருக்கிறது ‘ ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ்’.

- ஷாலினி நியூட்டன்