நியூஸ் பைட்ஸ்



ஒரு கோடி போதாது

அக்‌ஷத் ஸ்ரீவத்ஸவா என்ற டுவிட்டர் பயனாளி இட்ட டுவிட்தான் சமீபத்திய ஹாட் டாக். டெல்லி, மும்பை, குருகிராம் போன்ற நகரங்களில் வசிப்பதற்கு ஒரு கோடி போதாது என்று அவர் டுவிட்டியிருந்தார். மும்பையில் ஒரு கோடி கொடுத்தாலும், ஒரு குடும்பம் வசிக்கத் தேவையான நல்ல வீடு கிடைக்காது, டெல்லியில் உள்ள சர்வதேச பள்ளிகளில் உங்கள் குழந்தையைச் சேர்க்க வேண்டுமானால் 95 லட்ச ரூபாயை அன்பளிக்காக கொடுக்க வேண்டும் என்று அக்‌ஷத் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவு பல விவாதங்களைக் கிளப்பி வைரலாகிவிட்டது. அவரது பதிவுக்கு பொருளாதார அறிஞர்கள் எல்லாம் வந்து தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.  ‘‘எல்லாமே நம்ம மனசை பொருத்ததுதான். ஒரு கோடியை வைத்துக்கொண்டு வேறு ஊர்களில் நல்லபடியாக வாழலாம்...’’ போன்ற எதிர்வினைகளும் வருகின்றன.

12 வயது பிசினஸ் கேர்ள்

இன்ஸ்டாகிராமைச் சேர்ந்த பிரபலம், பிக்ஸி கர்டிஸ். சுமார் 1.77 லட்சம் பேர் இவரைப் பின் தொடர்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு தனது அம்மாவின் வழிகாட்டலில், ஆன்லைனில் பிட்ஜெட்ஸ் போன்ற பொம்மைகளை விற்க ஆரம்பித்தார். அப்போது பிக்ஸியின் வயது பத்துக்குள் தான் இருக்கும். பிசினஸ் ஆரம்பித்த சில மாதங்களிலேயே மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்ட ஆரம்பித்தார். பிசினஸில் இறங்கியதால் படிப்பில் பெரிதாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கடந்த வருடம் பிசினஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

‘‘11 வயதில் ஓய்வு பெற்ற பிசினஸ் வுமன்’’ என்ற பிக்ஸியைக் குறித்து பல பத்திரிகைகள் எழுதின. இந்நிலையில் மறுபடியும் பிசினஸ் செய்யப்போவதாகச் சொல்லியிருக்கிறார் பிக்ஸி. இப்போது அவரது வயது 12.

பொம்மை திருமணம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் ஒரு திருமணம் இது. அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண், ஃபெலிசிட்டி. மனிதர்களைவிட பொம்மைகளுடன்தான் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் ராபர்ட் என்ற ஆறு அடி உள்ள ஒரு பொம்மையைப் பார்த்திருக்கிறார். முதல் பார்வையிலேயே அந்தப் பொம்மையின் மீது காதல் கொண்டுவிட்டார். 83 ஆயிரம் ரூபாய் கொடுத்து ராபர்ட்டையும் வாங்கிவிட்டார்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ராபர்ட் என்ற பொம்மையிடம் தன் காதலைச் சொல்லி, திருமணத்துக்கான தேதியையும் குறித்துவிட்டார். சமீபத்தில் ஃபெலிசிட்டிக்கும், ராபர்ட் என்ற பொம்மைக்கும் இடையில் திருமணம் நடந்தது. இதில் ஃபெலிசிட்டியின் உறவினர்களும், சில பொம்மைகளும் கலந்துகொண்டன. இந்த திருமணத்தைப் பதிவு செய்யப்போகிறார் ஃபெலிசிட்டி.

சாக்குப்பை குர்தா

இன்ஸ்டாகிராமில் 5.3 கோடி பார்வைகளைத் தாண்டி டிரெண்டாகிவிட்டது ஒரு வீடியோ. அதில் அப்படி என்னவிருக்கிறது என்கிறீர்களா? குர்தா அணிந்த இளைஞர் ஒருவர் தோன்றும் வீடியோ அது. அந்த குர்தாதான் ரொம்பவே ஸ்பெஷல். ஆம்; சணல் சாக்குப்பையினால் நேர்த்தியாக அந்த குர்தாவை தைத்திருக்கின்றனர். இந்த குர்தாவை பலரும் கிண்டலடித்து வந்தாலும், சிலர் பாராட்டவும் செய்கின்றனர். குறிப்பாக சாக்குப்பையினால் குர்தாவைத் தைத்த டெய்லரின் கிரியேட்டிவிட்டியை வியக்கின்றனர். மட்டுமல்ல,  ‘‘சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத உடை’’ என்று சாக்குப்பை குர்தாவுக்குப் பாராட்டுகளும் குவிகின்றன.

கேரட் புல்லாங்குழல்

வித்தியாசமாக எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன்வசம் திருப்புபவர், ஈதன் டெய்லர். இன்ஸ்டாகிராமில் ஈதனுக்கு என்றே தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
சமீபத்தில் கேரட்டினால் புல்லாங்குழல் செய்திருகிறார். இந்த கேரட் புல்லாங்குழல் இசைக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட். கேரட் புல்லாங்குழல் செய்கின்ற வீடியோவைத் தன் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஈதன். அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிவிட்டது. அடுத்து தர்பூசணியில் டிரம்மைத் தயாரிக்கப்போகிறார்.

த.சக்திவேல்