என்னுடையது விஸ்வரூப வெற்றி!



மனதில் சிம்மாசனமிடும் கல்யாணி காட்டன் சேலை தயாரிப்பில் பட்டையை கிளப்புகிறார் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த சத்யா.‘‘கல்யாணி காட்டனுக்குன்னு ஒரு லுக் இருக்கும். கலர்தான் இதில் முக்கியம். கூடவே எனது மைன்ட்ல இருப்பதுதான் சேலையோட டிசைன். இதுவே எனது தொழிலின் வெற்றியும்’’ என பேச ஆரம்பித்தவரிடம், கல்யாணி காட்டன் தரம் மற்றும் தயாரிப்பு, தொழிலுக்குள் வந்தது

குறித்து கேட்டபோது...

‘‘நம்ம உடை எப்படி இருக்கணும் என்கிற கனவு நமக்கு இருக்கும்.  அந்த கனவுதான் இதற்கான அடித்தளமே. குறிப்பா காட்டன் சேலைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். காட்டன் சேலை கட்டுனா ரிச்சா பார்க்க லுக் சூப்பராக பெண்கள் பளிச்சுன்னு தெரிவார்கள். ஆனால் மெயின்டென்ஸ் அதிகம் என்பதால், காட்டன் சேலை எடுப்பதை
பெண்கள்  பெரும்பாலும் தவிர்ப்பார்கள். எனக்கு காட்டன் சேலை மீதுதான் எப்போதுமே அலாதியான ஆர்வம் இருக்கும்.

2021ல், 30 மெஷின்களைப் போட்டு ரெடிமேட் நைட்டி தயார் செய்கிற கார்மென்ட்ஸ் தொழிலைத்தான் முதலில் தொடங்கினேன். ஓரளவு நல்லாவே போனது. இந்த நிலையில், நான் உடுத்திய ஒரு காட்டன் சேலை உடுத்த வசதியா, பார்க்க ரிச் லுக்கா இருந்தது. அந்த சேலையை உடுத்துவதில் வித்தியாசம் தெரிந்தது. 
எங்கு இந்தச் சேலை தயாராகிறது என்கிற நதி மூலத்தை ஆராய்ந்தபோது, எனது அருகாமை ஊர்களான எடப்பாடி, ஜலகண்டபுரம், வனவாசி, இளம்பிள்ளை போன்ற ஊர்களில் தயாராகி வருகிற கல்யாணி காட்டன் சேலைதான் இது எனத் தெரிய வந்தது.

இத்தனை ஆண்டுகள் இந்த ஊரில் வாழ்ந்துவிட்டு இது கூடத் தெரியாமல் இருக்கிறோமே என நினைத்தவாறே முதலில் 10 புடவைகளை எடுத்து விற்பனையில் இறங்கினேன். பத்தும் ஒரே நாளில் விற்பனையானது.  எனக்கோ ஆச்சரியம். ஆனால் சேலையை வாங்கி விற்பதில் பெரிய அளவுக்கு லாபம் இல்லை எனப் புரிய ஆரம்பித்தது. அப்போது எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் கல்யாணி காட்டன் சேலைகளுக்கு தறி போடுவதை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால் அவர் பயன்படுத்துகிற நூலின் தரம்  எனக்கு திருப்தியாக இல்லை.

பட்டுச் சேலை நெய்வதற்கு பயன்படும் குவாலிட்டி நூல், வெரைட்டியான கலர்களை வைத்து ஏன் கல்யாணி காட்டன் சேலைகளை நானே தயாரிக்கக்கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன்.
எனது ஊரில் உள்ள சில தறியாளர்களை அணுகி  நூல், கலர், பேட்டன்களைக் கொடுத்து ஜாப் வொர்க் மாதிரி சேலையாக நெய்து வாங்கி அறிமுகப்படுத்தத் தொடங்கினேன். 

இப்படித்தான் எனது கல்யாணி காட்டன் தயாரிப்பு தொழில் ஆரம்பமானது. இன்று எனது கைகளில் 30 தறியாளர்கள் இருக்கிறார்கள். சொந்தமாக 2 தறியும் எனக்கு இருக்கிறது’’
என நம்மை ஆச்சரியப்படுத்தினார் தொழிலதிபரான சத்யா.

‘‘சேலைகள் தயாரானதுமே சமூக வலைத்தளங்களில் நானே மாடலாகி எனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி  புரோமோட் செய்யத் தொடங்கியதில், குறைந்தது ஒரு நாளைக்கு 50 சேலைகள் விற்கத் தொடங்கியது’’ என்றவர், ‘‘கல்யாணி காட்டன் சேலையின் சிறப்பே மெயின்டென்ஸ் தேவையில்லை என்பதுதான். சேலையை வாங்கி கட்டிப் பார்த்துவிட்டு, பட்டுச் சேலை மாதிரியே இருக்கு என சொல்லும் வாடிக்கையாளர்களே அதிகம்’’ என்கிறார் இந்த மாடல் தொழிலதிபர்.  

‘‘முழுக்க முழுக்க இது என் சொந்த டிசைன். வார்ப்பு, பேட்டன், பிரின்ட் எல்லாமே என்னுடையது. யாரிடமும் இல்லாத செலக்டிவ் கலர்கள் 128 மற்றும் பேட்டர்ன் 24 என்னிடம் உள்ளது. நானே பேட்டன் மற்றும் கலர்களை தேர்வு செய்து தறி போடுபவர்களிடம் கொடுத்துவிடுவேன். அதை அப்படியே தறியில் ஓட்டுவார்கள். ஒவ்வொரு டிசைனிலும் குறைந்தது 30 தறி போடுவோம். எனது தயாரிப்பில் கலர், பேட்டன், குவாலிட்டி என எல்லாமே டிரென்டிங்தான்.

ஹன்டிரெட் கவுன்ட் நூலை, பட்டு நூலோடு இணைத்து தயாரிப்பதால் மற்ற காட்டன் சேலை போல சுருங்காது. சாயம் போகாது. தண்ணீரில் நனைத்த பிறகு கரையும்
சுருங்குவதில்லை. முக்கியமாக உடுத்தியிருக்கும்போது வியர்க்காது. 

பெரிய அளவுக்கு பராமரிப்பு தேவையில்லை. தனித்துவமான தோற்றத்தில் பட்டுச்சேலை கலர் மாதிரியே அப்படியே இருக்கும்.மொத்த விற்பனை, சில்லறை  விற்பனை என இரண்டுவிதமான வாடிக்கையாளர்கள் எனக்கு இருக்கிறார்கள். 30 சேலைகள் வரை எடுத்தால் ஒரு விலை.

100 சேலைகள் வரை எடுத்தால் ஒரு  விலை என இதில் விலை வித்தியாசப்படும். 30 வருடம், 50 வருடத்திற்கு முன்பு இருந்த அம்மா காலத்து, பாட்டி காலத்து சேலை பேட்டன் மற்றும் கலர்களைக் காட்டினாலும் கஸ்டமைஸ்டாக தயாரித்து தரமுடியும்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சின்னச் சின்ன குக்கிராமங்களில் இருந்தும் வந்து, மொத்தமாக எடுத்துச் சென்று பெண்கள் எனது தயாரிப்பு சேலைகளை விற்பனை செய்கிறார்கள். இதில் விற்பனையாகாத சேலைகளை திரும்பவும் எடுத்துக்கொண்டு அதற்குப் பதிலாக வேறு டிசைன்களை மாற்றி அவர்களிடம் விற்பனைக்கு கொடுப்பேன்.

அதேபோல், ஆன்லைன் வாடிக்கையாளர்களும் எனக்கு அதிகம். துபாய், கனடா, யுகே, யு.எஸ் என வெளிநாட்டு வாடிக்கையாளர்களும் உண்டு. இவர்கள் நேரில் வந்தும், ஆன்லைன் வழியாகவும் மொத்தமாக வாங்குவார்கள். 

வேகமாக விற்பனையாகும் டிசைன் மற்றும் கலர்களை மீண்டும் ரிபிடெடாக தறிபோட்டு தரச்சொல்லிக் கேட்பார்கள்.என் தயாரிப்பு சேலைகளுக்கு நானே மாடல். வீடியோ எடுப்பது, எடிட்டிங் செய்வது, சமூக வலைத்தளங்களில் போஸ்டிங் செய்வது, டிஸ்கிரிப்ஷன், ரிப்ளை என எனது வலைப்பக்கத்தை இயக்குவது நானே.

என்னுடையது விஸ்வரூப வெற்றி... பத்து மெஷின்களோடு, என் பகுதியில் என்ன கிடைக்குதோ அதில் யுனிக்கா எதையாவது செய்து ஜெயிக்கணும் என முடிவு செய்து தொடங்கிய தொழில் இது.  ஜெயிச்சும் காமிச்சுட்டேன். இன்று சொந்தமாய் எனக்கு வீடு, கார் எல்லாமும் இருக்கிறது. வியாபார விஷயமாக பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கும்போது, எனது காரை நானே ஓட்டிக்கொண்டு செல்கிறேன்.  என் தைரியம்தான் என்னை தலை நிமிர்ந்து நிற்க வைக்கிறது’’ என்றவாறு கல்யாணி காட்டனில் புன்னகைத்து விடைகொடுத்தார் இந்த மாடல் தொழிலதிபதி.

என் தயாரிப்புக்கு நானே மாடல்...

‘‘வீட்டில் நான்கு சுவற்றுக்குள் இருந்தவள் நான். 10ம் வகுப்புதான் படிச்சேன். 15 வயதில் தாய் மாமாவுக்கே திருமணம் முடித்தார்கள். நான்கு வருடத்தில் அடுத்தடுத்து 2 குழந்தைகள். பொருளாதாரத் தேவைகளுக்காக வேலைக்கு போக லாம் என முடிவெடுத்தபோது என் வயது 24. வீட்டில் இருந்தவர்களின் எதிர்ப்போடு, பத்தாயிரம் சம்பளத்தில் மெடிக்கல் ரெப்பாக வேலைக்குப் போனேன். ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என அவமானப்படுத்தினார்கள். தாங்கிக் கொண்டு 2 வருடம் அங்கேயே பணியாற்றினேன்.

என் முகநூல் பக்கத்தில் காட்டன் சேலை உடுத்திய என் புரொஃபைல் போட்டோ பார்த்த புகைப்படக் கலைஞர் ஒருவர், சேலை கடைகளில் தரப்படும் அட்டைப் பெட்டி விளம்பரத்துக்கு மாடலிங் செய்ய அணுகினார். 6 மாதம் சின்னச் சின்ன கடைகளின் அட்டைப்பெட்டி விளம்பர மாடலாகவும்  இருந்தேன். நிறம் குறைவு... அழகு இல்லை... ஆம்பளை மூஞ்சி என்றெல்லாம் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன்.

ஜெயிக்கணும் என்கிற வெறியில், கிடைத்த வருமானத்தை கொஞ்சம் சேமித்து சீட்டு போட்டதில், தொடங்கிய தொழில் இது. இன்று என்னிடம் 17 பெண்கள், 5 ஆண்கள் என 22 பேர் வேலை செய்கின்றனர். பெண்களின் ஜாக்கெட்டிற்கான ஆரி வொர்க் வேலைகளுக்கு ஒரு யூனிட், நைட்டி தயாரிப்புக்கு ஒரு யூனிட், சேலை விற்பனைக்கு ஒரு யூனிட் என 3 யூனிட்டாக தனித்தனியாக இயங்குகிறது.

பெண்களை உயர்த்தணும் என்பதே எப்போதும் என் சிந்தனை. கஷ்டப்படுகிற பெண்களுக்கு என் தொழில் சார்ந்து வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்தபோது 3 லாரிகளில் பெண்களுக்கான உடைகள், குழந்தைகளுக்கான உணவுகளோடு சென்றேன். அப்போது உடமைகளை இழந்து தவித்த பெண்கள் சிலரை ஒருங்கிணைத்து நைட்டி தயாரிப்பு வேலையில் அவர்களை அங்கிருந்தே ஈடுபடுத்தி வருகிறேன்.’’

மகேஸ்வரி நாகராஜன்