உன்னத உறவுகள்



அன்றைய திருமணங்களும் பரம்பரை உறவுகளும்!

வாலிப வயதில் தன்னம்பிக்கை என்னும் ஆயுதம் கூடவே இருக்கும். எதையும் சாதிக்கும் துடிப்பும் மன உறுதியும் காணப்படும். பிறரின் ஆலோசனை தேவையில்லை என்ற மன ஓட்டம் சிலருக்கு ஏற்படும். இன்றோ வலைத்தளங்கள் வழிகாட்டியாக இருந்து எதையும் கற்றுத்தரும் ஆசானாகவும் உள்ளன. அன்று பெரியவர்கள் சொல்லித்தந்ததை அனைவரும் நடைமுறையில் கற்றுக் கொண்டோம். இன்று எல்லோருக்கும் கற்றுத்தருவது ‘கூகுள்’தான்.

எத்தகைய முன்னேற்றங்கள் வந்தாலும், முன்னோர்களின் பாசம், அன்பு, அரவணைப்பு இவற்றிற்கு முன்னால் எதுவும் ஈடாகாது. திருமணங்கள் பெரியோர்கள் முன்னிலையில் அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டது. இன்று அப்படி கிடையாது. அப்பொழுது தெருவில் ஒருவர் வீட்டில் திருமணம் நடைபெறுமானால், தெரு முழுவதும் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்கரிப்பார்கள். பனங்குலைகள், தென்னங்குருத்துகள், இயற்கை அலங்காரப் பொருட்கள் பார்ப்பவரை பிரமிக்கச் செய்யும்.

திருமணம் பேசி முடித்தவுடனேயே எந்தெந்த வீடுகளை, என்ன மாதிரி பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டால் வசதியாக இருக்குமென யோசிப்பார்கள். மணமகன், மணமகள் குடும்பத்தினர் தங்குவதற்கான ஒரு வீடு, ‘சீர் வரிசைகள்’ அலங்கரித்து வைக்க ஒரு வீடு, சமையல் பொருட்கள் சேமித்து வைக்கவும். சமையல் ஏற்பாடுகள் செய்யவும் என தனித்தனி இடம் ஒதுக்கப்படும். ஒரு வீட்டுக் கல்யாணம், தெருவுக்கே கொண்டாட்டம்தான். குழந்தைக்கு சாப்பாடு வேண்டுமானாலும், கல்யாண சமையல் நடைபெறும் வீட்டிற்குள் சென்று பெற்றுக் கொள்வார்கள். ஓடி ஓடி வேளா வேளைக்கு வந்தவர்கள் சாப்பிட்டார்களா என்று உபசரிப்பார்கள்.

இன்றும் திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. சாப்பாடு முதல் மண்டப அலங்காரம், வரவேற்பு அனைத்தும் கான்ட்ராக்ட் முறையில் தான் நடைபெறுகிறது. அழகாக உடை அணிந்து திருமண தம்பதிகளை பார்த்து ஆசீர்வாதம் செய்து விட்டு, சாப்பிட்டு தாம்பூலம் பெற்றுக் கொண்டு கிளம்பிடலாம்.

இப்போது பெரும்பாலான திருமணங்களில் பஃபே முறையில் உணவுகள் பரிமாறப்படுகிறது. வாய் நிறைய நம்மை “வாங்க’ என்று அழைத்த நம் பெரியோர்கள் கூட இன்று ‘மொபைல்’ சாப்பாட்டுக்கு மாற வேண்டிய நிலை.சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொண்டால்தான் மரியாதை.

குடும்ப பாசத்தின் முதல் ஆணி வேர் நம் தாத்தா பாட்டிதான். தாத்தா பாட்டிக்கு தன் மகன் அல்லது மகளைவிட அவர்களுக்கு பிறந்த பேர பிள்ளைகள் மேல் தான் கொள்ளை பாசம். அதனால் அந்த காலத்தில் நாம் எல்லோருமே, எனக்கு 3 தாத்தா பாட்டிகள், நான்கு தாத்தா பாட்டிகள் என்றெல்லாம் பெருமிதம் கொள்வோம். அதிலும் தாத்தா பாட்டியுடன் உடன் பிறந்தவர்களை பெரிய தாத்தா பாட்டா, சின்ன தாத்தா பாட்டி என்று அழைப்பது வழக்கம்.

தாய் தந்தையின் உறவு முறைகளுடன் தாத்தா-பாட்டி உறவை சேர்த்துக் கொண்டு, அத்தை-பாட்டி, மாமா-தாத்தா என்றெல்லாம் அழைப்பதுண்டு. சிறிய வயதில் திருமணம் முடிந்தவர்கள், நாற்பது வயதுகளில் கூட தாத்தா பாட்டியாக ஆனதும் உண்டு. 

சிறு வயதிலேயே எனக்கு பேரன், பேத்திகள் உண்டு என்பதில் கூட பெருமை இருந்தது. இளமை, பிள்ளைகளுடன் ஓடியாட, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு ஏதுவாக இருந்தது. இன்று வயதாகி திருமணம் நடந்து, ஒரு பேரனோ, பேத்தியோ இருந்தாலும் தாத்தா-பாட்டி என்று அழைக்காமல், தங்களின் இளமையை வெளிப்படுத்த வேறு பெயர் சொல்லி அழைக்க சொல்கிறார்கள்.

வயதானாலும், குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்றால், அவர் நலம் பெற பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்கு தெரிந்த வீட்டுவைத்தியத்தை செய்து குணப்படுத்த அவர்களால் மட்டுமே முடியும். இன்றோ சின்ன தலைவலி என்றாலும் பயந்து மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். 

ஆனால் பாட்டியின் ஒரு கஷாயம் எந்த தலைவலியையும் குணப்படுத்திடும். உடன் தாத்தா கொடுக்கும் தெம்பு எந்தவித உடல் நிலையையும் குணமாக்கும். பெரியவர்கள் உடன் இருப்பது நமக்கு யானை பலம்தான். விஞ்ஞான முன்னேற்றம் அவ்வளவாக இல்லாத காலத்தில், நம் தாத்தா பாட்டிகள் நடமாடும் கதை புத்தகங்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று கதைப் புத்தகங்கள் வாங்கித் தந்தால் கூட பிள்ளைகள் அதை படிப்பதில்லை.

கைப்பேசியுடன் பேசிக்கொள்கிறார்கள். மாலை பள்ளி விட்டு வந்தால், முகம் கழுவி உடைமாற்றி, சாப்பிட ஏதாவது கொடுத்து ‘போய் விளையாடி விட்டு வா’ என்று அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்தது. இன்று வீடுகளில் தாத்தா பாட்டியும் கிடையாது. அப்படியே இருந்தாலும், நம் வாழ்வு முறை மாறி விட்டதால், அவர்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல். பிள்ளைகள் விஷயத்தில் அறிவுரை கூறுவதில்லை. காரணம், பிள்ளைகளுக்கும் பழமையில் நாட்டமில்லை.

தொலைக்காட்சி பெட்டியில் ஓடும் தொடர்களை பார்த்துக் கொண்டு தங்கள் பொழுதை கழிக்கிறார்கள். தொலைபேசி இல்லாத காலத்தில் பேசுவதற்காவது மனிதர்கள் வந்து போனார்கள். ‘கைப்பேசி’ பிரபலமானதும், அதன் மூலமே பேசிக் கொள்ள பழகிவிட்டார்கள். 

தாத்தா பாட்டி, தன் நான்கு வயது பேரனை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்தும் சென்றார்கள். குழந்தை ‘ஓடியாடி விளையாடட்டும்’ என்று நினைத்தார்கள். குழந்தை சிறிது நேரம் ஓடிவிட்டு பிறகு, கைப்பேசியை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டது. தாத்தா பாட்டி சொன்னாலும் சரி, யார் சொன்னாலும், காலத்தின் கோலம்-விஞ்ஞானம் தான் கையில் நிற்கிறது.

அந்தக்கால முதியவர்கள் நிறைய வேலை செய்தார்கள். அவர்கள் வளர்ந்த முறை. சிலர் மருத்துவரிடம் சென்றதே கிடையாது. அதுபோல் எத்தனை பேர் வீட்டிற்கு வந்தாலும், அனைத்து உணவுப் பண்டங்களும் வீட்டில் தான் தயாராகும். வருடத்திற்கு வேண்டிய மளிகைப் பொருட்கள் வடகம் முதல் அப்பளம் வரை தயார் செய்வார். கோடை வெயிலில் அனைவர் வீட்டிலும் வடகம் மற்றும் வத்தல் போடப்படும். இப்பொழுது நமக்கு எல்லாமே ரெடிமேடாக மாறிவிட்டது.

வீட்டில் தயாரிப்பதற்கும் ரெடிமேட்டிற்கும் பெரிய வித்தியாசமே அதன் சுவைதான். தாத்தா, பாட்டிகள் கல்லூரி சென்று படிக்காமல் இருந்திருக்கலாம். வேலை செய்வதற்கான தொழில்நுட்பங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம். பாசப் பிணைப்பு மலையளவு அவர்களிடம் உள்ளது. கை கால்களை மட்டும் முதலீடாகக் கொண்டு, தாத்தா கொடுத்த தைரியம் தன்னம்பிக்கையை தந்தது. நம் தாத்தா-பாட்டி உறவிற்கு அவர்கள் மட்டுமே கண்கண்ட தெய்வம்!

சரஸ்வதி ஸ்ரீநிவாசன்