தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை...கடலில் நீந்திய வாண்டுகள்



கலர் கலரான க்யூட் குட்டி மீன்கள்... ஸ்டார் ஃபிஷ்கள்... கடல் குதிரைகள்... டால்பின்கள்... கிளிஞ்சல்கள் சுற்றிவர... கடலில் கலக்கும் நெகிழிகள் குறித்த விழிப்புணர்விற்காக,
தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கி.மீ. தூரத்தை நீந்திக் கடந்திருக்கின்றனர் 9 வயது சிறுமி தாரகை ஆராதனா மற்றும் 7 வயது சிறுவன் நிஷ்பிக்.
‘‘நாம் தூக்கிப்போடுகிற பிளாஸ்டிக் கழிவுகள் கடலைச் சென்றும் சேர்கிறது.

நம்முடைய பொறுப்பின்மையால் கடலையும் ஆபத்தான கழிவுகளால் நிரப்பி இயற்கையை பாழாக்கி வருகிறோம் என்கிற விழிப்புணர்வுக்காகவே, Save the ocean என்ற தலைப்பில் தனது மகள் தாரகை ஆராதனா மற்றும் தன் தங்கை மகன் நிஷ்பிக் இருவரையும் கடலில் நீந்தி கடக்க வைத்தேன்’’ என நம்மிடம் பேசியவர், ஆழ்கடலில் நீந்த பயிற்சி அளிப்பவரும், டெம்பிள் அட்வென்சர்ஸ் ஸ்கூபா டைவிங் பயிற்சி பள்ளியை இயக்கி வருபவருமான அரவிந்தன்.

‘‘கடலில் சேரும் நெகிழி குறித்த விழிப்புணர்வுக்காகவே அண்டர் வாட்டர் திருமணம், அண்டர் வாட்டர் கிரிக்கெட், அண்டர் வாட்டர் செஸ், அண்டர் வாட்டர் சைக்கிளிங், அண்டர் வாட்டர் உடற்பயிற்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூபா டைவிங் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறேன்’’ என்றவர், என் குழந்தையையும் கடல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் ஈடுபடுத்தவே இந்தப் பயணம்’’ என்கிறார். எனக்குத் தேவை விருதுகள் அல்ல விழிப்புணர்வுதான் என்கிறார், மேலும் நம்மிடம் பேசியபடி ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர்  அரவிந்தன்.

‘‘ஏற்கனவே தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று Save the ocean என்கிற தலைப்பில், எனது மகள் தாரகை ஆராதனா நீலாங்கரை முதல் மெரினா கடற்கரை வரை உள்ள 21 கி.மீ. தூரத்தை நீந்திக் கடந்திருக்கிறார். ஆனால் இந்த முறை நீந்தியது, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு.இரு நாட்டு அரசுகளின் அனுமதிக்கான சம்பிரதாயங்களை பலகட்டங்களாக நாங்கள் கடக்க வேண்டியதிருந்தது.

உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், கொழும்பு மற்றும் இந்திய ஹை கமிஷன் அலுவலகங்கள், இருநாட்டு நேவி, கோஸ்ட் கார்டு, மரைன் போலீஸ் என பலகட்ட அனுமதிகள் இதற்குத் தேவைப்பட்டது. இமிகிரேஷன் கிளியர் ஆனதுமே படகு வழியாக இலங்கை புறப்பட்டோம். இலங்கை நேவி எங்களை பார்டரில் இருந்து பிக்கப் செய்தார்கள். அவர்கள் கொடுத்த இடத்தில் படகில் இருந்த நிலையில், தரையில் கால் வைக்காமலே நாங்கள் லேன்ட்  ஆனோம்.

கடலில் நீந்துவது அத்தனை சுலபமில்லை. ரொம்பவே சவாலான விஷயம். ஏப்ரல் 3, இரவு 2.30 மணிக்கு வாண்டுகள் இருவரும் கடலில் நீந்தத் தொடங்குவதற்கு முடிவு செய்திருந்தோம். அந்த நேரத்தில் கடல் அதிகக் கொந்தளிப்புடன் ஆக்ரோஷமாகக் காணப்பட்டது. அதிகாலை 4 மணிக்கே அவர்களால் நீந்த ஆரம்பிக்க முடிந்தது. இறுதி 4 மணிநேரமும் நீந்துவது ரொம்பவே கடினமாக இருந்தது. ஆனாலும் இருவருமே வெற்றிகரமாக தூரத்தை நீந்திக் கடந்தார்கள். மாலை 3.30 மணிக்கு தனுஷ்கோடி அடைந்தனர்.

நானும் அவர்களுடன் இணைந்து கடலில் கூடவே நீந்தினேன். அப்பாவும் மகளுமாக கடலில் நீந்திக் கடப்பது இதுவே முதல்முறை’’ என்றவர், ‘‘நீந்தும்போது மிதந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கைகளில் சேகரித்து அருகில் வரும் போட்டில் இருவருமாகப் போட ஆரம்பித்தனர். நீருடன் சேர்த்து 6 கிலோ வரை நெகிழி கழிவுகள் கடலில் மிதந்து வந்தது.

எங்களின் பாதுகாப்புக்காக உடன் வரும் போட்டில் ஒரு கார்டியாலஜி, ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் இருந்தனர். இடையிடையே வழங்கப்படும் எனர்ஜி டிரிங்கை போட்டுக்குள் ஏறாமல் போட்டைப் பிடித்த நிலையிலேயே நீச்சல் வீரர்கள் அருந்த வேண்டும்.

கடலில் இறங்கிய இரண்டு மூன்று மணி நேரத்திலே நமது உடல் கடல் நீருக்கு அடாப்ட் ஆகி, பயம் போய்விடும். பிறகு கடலை ஃப்ரெண்ட்லியா பார்க்கவும் நேசிக்கவும் ஆரம்பிச்சுருவோம்’ என்கிற அரவிந்தன், ‘‘இது முழுக்க முழுக்க விழிப்புணர்வுக்கான முன்னெடுப்புதான். மீண்டும் இந்தியா டூ இலங்கை...இலங்கை டூ இந்தியா என இவர்களை நீந்த வைப்பதே எனது அடுத் கட்டத் திட்டம்’’ என்றவாறு விடைபெற்றார்.

மகேஸ்வரி நாகராஜன்