கலைகளை இலவசமாக கற்றுத்தர வேண்டும்!



‘புலிகள் எழுத கற்றுக் கொள்ளும் வரை ஒவ்வொரு கதையும் வேட்டைக்காரர்களையே புகழ்ந்து கொண்டிருக்கும்’ என்ற பழமொழி உண்டு. நமக்குச் சொல்லப்படும் கதைகள் எந்த கோணத்திலிருந்து யார் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது... பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து ஒரு கதை சொல்லப்படுகிறதா அல்லது அவருக்கு எதிர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறதா என்பதில்தான் அந்தக் கதையின் நீதியும் அநீதியும் அடங்கி இருக்கிறது. இதுவரை நாம் கேட்ட கதைகளில் இருக்கும் மற்றொரு கோணத்தை எடுத்து அதை சொல்லியும் பேசியும் வருகிறார் கோவையைச் சேர்ந்த நான்சி கோமகன்.

சமூக செயற்பாட்டாளரான நான்சி கோமகன் கதை சொல்லுதல், சிறார் இலக்கிய செயற்பாட்டாளர், விலங்குகள் நல ஆர்வலர், ஆசிரியை என பல தளங்களிலும் வேலை செய்து வருகிறார்.
‘‘சொந்த ஊர் கோவைதான். அப்பா இடதுசாரி கட்சியை சேர்ந்தவர். சிறந்த பேச்சாளரும் கூட. பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்வி நிகழ்ச்சிகளில் பேசுவார். அம்மா நர்ஸாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவிற்கு முழுக்க சமூகப் பணி செய்ய வேண்டும். தனக்கென அவர் எதையும் வைத்துக் கொண்டதில்லை. விழாவில் பேசும் போது அவருக்கு போடும் சால்வைகளை கூட மற்றவர்களுக்குக் கொடுத்திடுவார். என்னிடம் கல்வி, மருத்துவம் இரண்டுமே வியாபாரத்திற்கானது இல்லை என்று சொல்வார்.

அவருக்கு  சாதி மதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. அவர் சொன்ன ஒவ்ெவாரு வார்த்தைகளும் என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது. அதனால் நன்றாக படித்தேன். சிறு வயதில் இருந்தே, கதை புத்தகங்கள் மட்டுமில்லாமல் அரசியல் சார்ந்த புத்தகங்களும் படிக்க ஆரம்பிச்சேன். கல்லூரி முடித்ததும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன்.

பள்ளியில் 45 நிமிட வகுப்பில் 30 நிமிடங்கள்தான் வகுப்பு எடுப்பேன். மீதம் இருக்கும் நேரத்தில் 15 நிமிடம் நான் படித்த கதைகளில் ஒன்றை அவர்களுக்கு புரியும் வண்ணம் சொல்வேன். நான் சொல்லும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் இடங்களை அவர்களுக்கு என ஒரு கற்பனை வடிவில் வைத்திருப்பார்கள். 

குழந்தைகளுக்கு இவ்வாறு கதை சொல்லும் போது தனக்குள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும்’’ என்றவர், ஒரு கதை சொல்லியாகவும், சிறார் இலக்கியவாதியாகவும் மாறியுள்ளார்.

‘‘நம் சின்ன வயதில் தாத்தா, பாட்டி கதை சொல்லி கேட்டிருப்போம். அதன் பிறகு புத்தகங்கள் வழியாக கதைகள் அறிமுகமாயின. இப்போது டிஜிட்டல் யுகத்தில் செல்ேபானில் கதைகளை படிக்கிறோம். நமக்கு சொல்லப்பட்ட கதைகள் பெரும்பாலும் தெனாலிராமன், அக்பர், பீர்பால் கதைகளாகத்தான் இருக்கும். அவை எல்லாமே அரசர் கதைகள். மன்னராட்சி முறையே இப்போது கிடையாது. அதனால் அந்தக் காலத்து கதைகள் இன்று நம் சூழலுக்கு பொருந்துவதில்லை.

கார்ட்டூன்களிலும் குண்டாகவும் கருப்பாகவும் இருப்பவர்களை வில்லன்களாக சித்தரிக்கிறார்கள். இதை குழந்தைகள் பார்க்கும் போது குண்டாக இருப்பவர்களை வில்லன்களாக தானே பார்க்க தோன்றும். பாம்பு, ஓநாய், நரி என பல விலங்குகள் குறித்தும் தவறான கண்ணோட்டத்தை இவை ஏற்படுத்தி வருகிறது. பள்ளியில் 8 மணி நேரம் ஒரு குழந்தை தன் நேரத்தை செலவு செய்தாலும், மற்ற நேரங்களில் சமூகத்தில் சொல்லப்படும் கதைகளை கேட்டுதான் வளர்கிறது.

நம் சமூகம் ஆண்களை மையப்படுத்தி இருக்கிறது. சாதி பெருமைகளால், ஆணவக் கொலைகளும், பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகள் தான் அதிகமாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. தவறான கதைகளால் தவறாக வழிநடத்தலில் இருந்து மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். மற்றவர்களை வேறுபாட்டோடு பார்க்கக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அந்த எண்ணம் கடைசி வரை அவர்களுக்குள் இருக்கும். நான் அந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து அவர்களுக்கு சொல்லி வருகிறேன்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு அறம் இருக்க வேண்டும். கதைகளுக்கு பின் அரசியல் இருக்கணும். உதாரணமாக அம்மா ஒட்டகத்திடம் குட்டி ஒட்டகம் ஏன் முதுகில் திமில் இருக்கிறது, கால்கள் நீளமாக உள்ளது என தனக்கு தோன்றுகிற சந்தேகங்களை கேட்கும். அதற்கு தாய் ஒட்டகம் அறிவியல் பூர்வமான பதில்களை சொல்லும். 

கடைசியில் விலங்குகளை அடிமைப்படுத்தக் கூடாது, காட்சிப் பொருளாக பார்க்கக்கூடாது, அதன் வாழ்விடங்களில்தான் வாழ வேண்டும், மனிதர்கள் தங்களுடைய சுய நலத்திற்காக விலங்குகளை அடிமைப்படுத்துகிறார்கள் என புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு கதைகளையும் அவர்கள் புரிந்து ெகாள்ளும் தன்மையில் சொல்வேன்.

வகுப்புகளில் கதைகளை சொல்லத் தொடங்கி பின்னர் அப்பா கலந்து கொள்ளும் நிகழ்வில் நானும் பேசத் தொடங்கினேன். தொடர்ந்து பல இடங்களில் எனக்கு அழைப்புகள் வரத் தொடங்கியது. கோவிட் சமயத்தில் தமிழ்நாடு இலக்கிய பெருமன்றம் என்ற பெயரில் மாநிலம் முழுதும் உள்ள குழந்தைகளை ஒருங்கிணைத்து ‘எங்க ஏரியா’ என்ற பெயரில் கலந்துரையாடல் மற்றும் கதை சொல்லல் நிகழ்வுகள் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரம் என்னுடைய சமூக வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன்.

பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் முதியோர் இல்லங்களிலும் கதைகள் சொல்கிறேன். திருப்பூரில் நொய்யல் அமைப்பின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து உரையாடல் நடந்தது. அதில் வளையாபதி, குண்டலகேசி காப்பியங்களை யாரும் அதிகமாக படிப்பதில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணியில் தன் கணவரை மீறாதவளாகவும், கணவர் என்ன தவறு செய்தாலும் அதை கேள்வி கேட்காதவளாகவும் இருப்பாள் மனைவி.

ஆனால் குண்டலகேசியில் கணவன் தவறு செய்தான் என்பதற்காக அறத்தின் பக்கம் நின்று தண்டனை வழங்கும் பெண்ணின் கதை. வளையாபதி அந்தக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேசியது. இந்தக் காரணங்களால் மற்ற காப்பியங்களுக்கு கிடைத்த புகழ் இந்த காப்பியங்களுக்கு கிடைக்கவில்லை. இந்தக் கதைகளை எளிதாக புரிந்து படிக்கும் படி மாற்றம் செய்தேன். அதன் பின்னர் ‘காட்சிப்பிழை என்ற பிழை’ எனும் பெயரில் சிறாருக்கான புத்தகம் எழுதினேன்.

அதில் நாம் பார்க்காத கோணங்களை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதினேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை கொண்டுதான் இந்தக் கதையினை அமைத்தேன்’’ என்றவர் சமூகம் சார்ந்த விஷயங்கள் பல செய்து வருகிறார். அதில் ஒன்று அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சையளித்து சரி செய்யும் வேலை. ‘‘நான் பள்ளிக்கு செல்லும் போது அடிபட்ட நாய் குட்டி ஒன்றை பார்த்த உடனே அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் எனத் தோன்றியது.

அந்த நாயை என் வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சையளித்து திரும்ப அதன் இடத்திலேயே விட்டுவிட்டேன். அதை செய்யும் போது, என் மனம் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தேன். தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என எண்ணம் இருந்தது. ஆசிரியர் வேலை பார்க்கும் போதும் அடிபட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஒரு சந்தோஷம் இருக்கும். வருங்காலத்தில் கலைப்பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் எல்லாவிதமான கலைகளையும் இலவசமாக கற்றுத்தர வேண்டும்’’ என நம்பிக்கையோடு சொல்கிறார் நான்சி கோமகன்.

மா.வினோத்குமார்