கல்விக் கற்றலில் புதுமையை புகுத்திய விழுப்புரம் ஆசிரியை!



கோவிட் பலரது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பது உண்மையே. குறிப்பாக மாணவர்கள் பயிலவும், அவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கவும் ஆசிரியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். தினமும் நேரடியாக பாடங்களை கற்றுவித்த ஆசிரியர்கள் ஆன்லைன் முறையில் வகுப்பினை எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 
அப்படிப்பட்ட நிலையில் கல்வி கற்பிப்பதில் புதுமையை புகுத்தி மாணவ, மாணவியருக்கு கல்வி கற்றலை எளிதாக்கி தந்தவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ஹேமா டீச்சர். கல்வி கற்பிப்பதில் புதுமையினை புகுத்தியதற்காக இவர் சிறந்த ஆசிரியர் என்ற விருதும் பெற்றுள்ளார்.

மாணவ,   மாணவியர் இவரை ஒரு ஆசிரியையாக பார்க்காமல், ‘அம்மா’ என அழைக்கக்கூடிய அளவிற்கு தன் குழந்தைகளை போல் பார்க்கும் மனப்பான்மை கொண்டவர்தான் இந்த ஹேமா டீச்சர். இவரின் தாய் தலைமை ஆசிரியை, தந்தை பிடிஓ என்று ஆசிரியர்களை கொண்ட குடும்பம். இவரின் கணவரும் ஆசிரியரே. அதனாலேயே ஆசிரிய பணி இவரது குடும்பத்திற்கு நெருங்கிய ெதாடர்பு கொண்டது என்று கூறலாம்.

33 வருடங்களாக ஆசிரியப் பணியில் இருக்கும் இவர் ஆசிரியை பணி மட்டுமில்லாமல் குடும்ப நல ஆலோசகர், தெருக்கூத்து கலைஞர், ஓவியர், சமூக செயல்பாட்டாளர், பண்டைய நாணயங்கள் சேகரிப்பாளர், சூழலியல் ஆய்வாளர் என பல முகங்கள் கொண்டுள்ளார். இதுவரை ஆறு பள்ளிகளில் தன் ஆசிரியர் பணியினை மேற்கொண்டுள்ளார்.

‘‘என்னுடைய இந்த 33 வருட ஆசிரியர் பணியில் நான் நீண்ட காலம் வேலை பார்த்து வந்தது செ.குன்னத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்தான். அங்கு 11 ஆண்டு பணிபுரிந்தேன். அதன் பிறகு மற்ற பள்ளிகளில் ஆறு முதல் ஏழு வருடங்கள் பணிபுரிந்து வந்த நான் தற்போது விழுப்புரத்தை சேர்ந்த அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கு சேவை மனப்பான்மை அதிகம். அதனால் நான் வேலை பார்க்கும் பள்ளியின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவு நிதியுதவி செய்து வருகிறேன். இதற்கான விருது அல்லது பாராட்டு கிடைக்கும் என்று எதையும் எதிர்பார்த்து நான் செய்வதில்லை” என்று கூறியவருக்கு 2019-20ம் ஆண்டில் “மாநில நல்லாசிரியர் விருது” கிடைத்துள்ளது. 

அதே வருடம் “கல்வியில் புதுமை ஆசிரியை” என்ற விருதும் பெற்றுள்ளார். தன் சொந்த செலவில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை மாணவர்களுக்கு அளித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேலும் பாரதப் பிரதமரால் “மனதின் குரல்” நிகழ்ச்சி மூலம் பாராட்டையும் பெற்றுள்ளார் ஹேமலதா.

‘‘கொரோனாவால் உலகம் முழுதும் பாதிப்பு அடைந்திருந்த போது, பள்ளி குழந்தைகளும், ஆசிரியர்களும்தான் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தேன். அவர்களுக்கு ஆன்லைனில்தான் பாடங்களை சொல்லித் தரவேண்டும் என்பதால், அதனை எளிதாக்க பாடங்களை அனிமேஷன் செய்து அதனை பென்டிரைவில் ஏற்றி இலவசமாக என் மாணவ, மாணவியருக்கு கொடுத்தேன்.

என்னதான் நாம் வீட்டில் பாதுகாப்பாக இருந்தாலும், அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் மனநிலை பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்தது. அதனால் பாடங்கள் ஒரு பக்கம் என்றாலும், மறுபக்கம் அவர்களுக்கு பனை கழிவிலிருந்து பொம்மை செய்வது, குட் டச், பேட் டச் போன்றவற்றையும் சொல்லிக் கொடுத்தேன்.

மேலும், பள்ளி திறந்ததும், குழந்தைகள் வெளியே செல்லும் போது, தனித்து செல்லாமல் குழுவாகவோ அல்லது பெற்றோரின் அரவணைப்பில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். அறிமுகம் இல்லாதவர்களால் ஆபத்து தோன்றுவது போல் மனதிற்கு பட்டால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். உடனே அந்த இடத்தைவிட்டு ஓடி வந்து
விட வேண்டும். நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் மறைக்காமல் கூறவேண்டும் என்று எல்லாம் அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தேன்’’ என்றவர் கொரோனா காலத்தில் பல சமூக சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

‘‘இந்த காலக்கட்டத்தில் பேருந்துகள் எதுவும் இயங்காத நிலையில் பல கிலோமீட்டர் பயணம் செய்து குடிநீர், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் செய்தேன். நான் பள்ளிக்கு தினமும் இரண்டு சக்கர வாகனத்தில்தான் செல்வது வழக்கம். பயணிக்கும் வழியில் நாடோடி இனத்தைச் சார்ந்த சிறுவர்கள் அழுக்கான மற்றும் கிழிந்த உடைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டேன். அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று சீருடை, நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவைகளை கொடுத்தது மட்டுமில்லாமல், அவர்களின் பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை பள்ளியில் சேர வைத்தேன். அதில் ஒரு மாணவன் இந்தாண்டு +2 தேர்வு எழுதி இருக்கான். மேலும் கடந்த 25 வருடங்களாக விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆலோசகராக வேலை பார்க்கிறேன்.

முன்பெல்லாம் தனியார் பள்ளியில் தான் மாணவர்களின் பாடத்தில் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதால், பலர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வந்தார்கள். இன்று தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளிகளும் இப்போது செயல்பட்டு வருகின்றன. சிறந்த வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம், நூலகம், நல்ல உணவு என அரசு பல வகையில் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

மேலும் தமிழ்க்கூடம், தமிழ் மன்றம் போன்றவை மாதா மாதம் அரசுப் பள்ளியில் இடம் பெற்று வருவதால், மாணவர்கள் தமிழை ஆர்வமாக கற்று வருகிறார்கள். இங்கு பாடங்களுடன் ஒழுக்கங்களையும் நாங்க மாணவர்களுக்கு புகட்டுகிறோம். ஆசிரியர்கள் பணி ஒரு பக்கம் என்றாலும், இன்றைய கல்வி முறையும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை அரசாங்கம் கடைபிடித்தாலே ஒவ்வொரு மாணவ, மாணவியரும் மிகவும் திறமையுடன் தேர்ச்சிப்பெறுவது உறுதி.

கொரோனா காலகட்டத்தில் வாசித்தல்  என்பது குறைந்து போனது. ஆனால் இன்று அப்படியில்லை. வீட்டுப்பாடம் போன்றவை கொடுத்து வருவதால் பிள்ளைகள் மீண்டும் ரெகுலர் கல்வி வழிக்கு திரும்பிவிட்டார்கள். நூலகத்துக்கு சென்று வாசிக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது’’ என்றவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, முன்னோடி பெண்மணி விருது, மொழி மேம்பாட்டுத்திறன் ஆசிரியை விருது, சிறந்த பெண்மணி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சித்ரா சுரேஷ்