ஆட்டு மூளை முட்டை பணியாரம்



என்னென்ன தேவை?

ஆட்டு மூளை - 1,
முட்டை - 3,
உப்பு - தேவைக்கு,
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,
நறுக்கிய தக்காளி - 100 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து.

எப்படிச் செய்வது?

மூளையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு பிரட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற மசாலா பொருட்களை சேர்க்கவும். வாசனை போகும் வரை வதக்கி மூளையை சேர்த்து இறக்கவும்.

முட்டையில் உப்பு, பச்சைமிளகாய், மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பணியாரக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும். அதில் மூளை மசாலாவை வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்து,கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.