ஜி.வி.பிரகாஷும், ரவிமரியாவும்!டப்பிங், இயக்குநர்கள் சங்கப் பணி என்று கொரோனா சமயத்திலும் பிஸியாக இருக்கிறார் நடிகரும் இயக்குநருமான ரவிமரியா. அவரிடம் சமூக இடைவெளியோடு பேசினோம்.
‘‘அரசாங்கம் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு அனுமதி கொடுத்ததும்  விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படத்துக்கு டப்பிங் பேசினேன். இந்தப் படத்தை ‘வாய்மை’ செந்தில் இயக்குகிறார்.  கொரோனா விழப்புணர்வுக்காக ஒரு விளம்பரத்தில் நட்டி, சசி, ஆரி ஆகியோருடன் இணைந்து நடித்தேன். இதில்  பாடலும் பாடியுள்ளோம்.

தற்போது ‘ஜெயில்’ படத்திலிருந்து ‘காத்தோடு காத்தானேன்’ சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. ‘ஜெயில்’ படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. இயக்குநர் வசந்தபாலன் ‘வெயில்’ படத்தில் பிரகாஷை இசையமைப்பாளராகவும் என்னை வில்லனாகவும் அறிமுகப்படுத்தினார்.

நாங்கள் இருவரும் ரவுண்டுகட்டி அடித்து வருகிறோம். நடிகனாக அறுபது படங்களை நிறைவு செய்துள்ளேன். வசந்தபாலனின் அறிமுகங்களான நாங்கள் ஹீரோவாகவும் வில்லனாகவும் ‘ஜெயில்’ படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்தாலும் அடக்கி வாசித்திருப்பேன். பிரகாஷ் ஹெட் வெயிட் இல்லாத ஹீரோ. அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இந்த ஆண்டின் மிக முக்கியமான விருதுகளை வாங்குவார். இந்தப் படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக நிறுத்தும்’’ என்கிறார்.

- ரா