ராதா குடும்பத்திலிருந்து...



கௌரி நம்பியார்... கோடம்பாக்கத்துக்கு குடியேறியிருக்கும் மற்றும் ஒரு கேரள வரவு. ஆனால் இவரை பத்தோடு பதினொன்றாக கணக்கிட முடியாது. ஏன்னா, அம்பிகா, ராதா என பலமான சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்.

கார்த்திகா, துளசியின் சகோதரி. சினிமாவில் நெருங்கிய சொந்தங்கள் இருந்தாலும் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாய்ப்புத் தேடியவருக்கு இயக்குனர் சஞ்சீவன் ‘வலியுடன் ஒரு காதல்’ படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

‘‘தமிழில் ஏற்கெனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் சொல்லுமளவுக்கு அமையவில்லை. ஆனால், ‘வலியுடன் ஒரு காதல்’ படத்துல ரொம்ப முக்கியமான ரோல். முதல் நாள் படப்பிடிப்பிலேயே இந்தப் படத்துல என்னோட கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு புரிந்து கொள்ளமுடிந்தது. அந்தளவுக்கு நிறைவான ஒரு கேரக்டர். இந்தளவுக்கு சொல்றேன்னா, நிஜமாவே அது மாறுபட்ட ரோல். அதை விவரிச்சு சொல்ல எனக்கு பர்மிஷன் கிடையாது.

நாயகன் ராஜேஷுக்கு இதுதான் முதல் படம். ஆனால் கேரக்டராகவே மாறி அசத்தி யிருப்பார். அதுக்கு காரணம், கடுமையான ஒத்திகை பார்த்த பிறகு தான் கேமரா முன்னாடி வந்து நின்றார். காதல் காட்சிகளில் ராஜேஷுக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி செமயா ஒர்க் அவுட்டாகியிருக்கும்.

இது அந்தளவுக்கு கலகலப்பான ஸ்கிரிப்ட். க்ளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாதளவுக்கு திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குனர் சஞ்சீவன் வித்தியாசமான படைப்பாளியாக தெரிவார். எனக்கு அம்பிகா, ராதா இருவருமே ரோல் மாடல். மலையாளத்தில் பிசியாக இருந்ததால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த வகையில் இந்தப் படம் மீண்டும் எனக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்” என்கிறார் கௌரி நம்பியார்.

-ரா