இரக்கமற்ற காலம்! கவிஞர் நெல்லை பாரதி



இரக்கமற்ற இயற்கை, ஆனந்த யாழ் ஒன்றினை தன்னுடைய கோரக்கரங்களால் அறுத்துப் போட்டுவிட்டது. பட்டுத்தறியில் பிறந்த ஒரு பாட்டுத்தறி தனது சப்தத்தை அடக்கம் செய்துகொண்டது.நா.முத்துக்குமார்.

நாளொன்றுக்கு குறைந்தது நான்கு மணி நேரத்தை வாசிப்புக்காக ஒதுக்கிய படிப்பாளி. பதினெட்டு மணி நேரம் எழுதிக் கொண்டிருந்த படைப்பாளி. தூக்கத்துக்கு சில மணித்துளிகளை மட்டுமே விட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தவர், ஒட்டுமொத்தமாக இன்று தூங்கப் போய்விட்டார்.

சைக்கிளில் பயணித்தபோதும், விமானத்தில் பறந்தபோதும் நட்புவட்டத்தை ஒரேமாதிரி கவனித்துக்கொண்ட மனிதாபிமானி.சிறந்த திரைப்பாடலுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்ற இளம் கலைஞரை நாற்பத்தியொரு வயதில் நாசமாக்கிவிட்டது இயற்கை.
முத்துக்குமாரின் எளிமையில் வலிமை என்கிற படைப்பாற்றலை பலர் மெச்சியிருந்தாலும், அவரது குருநாதர் பாலுமகேந்திரா உச்சிமுகர்ந்து, உருகிப் பெருமைப்படுவதை நாம் அவசியம் வாசிக்க வேண்டும்.

“ஒரு சில வரிகளில் ஓராயிரம் உணர்வுகளையும், பிம்பங்களையும் பதிவு செய்ய கவிதையால்தான் முடியும். இந்த செப்படி வித்தை முத்துக்குமாருக்கு நன்றாகவே வருகிறது. சுவாசத்தைப் போல, தாய்மொழியைப் போல, சைக்கிள் மிதிப்பதைப் போல கவிதை இவருக்கு கைவருகிறது.

தெளிவான சிந்தனை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான எளிமை, அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள்... இவைதான் முத்துக்குமாரின் பிரத்யேக கவிதைகளின் அடையாளங்கள்” என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார் பாலுமகேந்திரா.

“கணையாழி விழாவில் சுஜாதா அவர்களால், படைப்பாளிகள் விழாவில் பாலுமகேந்திரா அவர்களால்... இவனையும், இவனது கவிதைகளையும் அறிமுகம் செய்விக்கப்பட்டபோது எழுந்த கரவொலி இன்னும் எனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருக்கிறது” என்று பாசமிகு தமிழால் பாராட்டுகிறார் கவிஞர் அறிவுமதி.

“எங்கள் ஊர் பக்கங்களில் ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து ஜோதிடம் பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும். சிலருக்கு கெட்டது வரும். முத்துக்குமாரின் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தை பிரித்தாலும் நல்ல கவிதைகள்தான் வரும்” என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா, கவிஞரின் சிறப்புகளுக்கு உறுதிமொழிப் பத்திரம் எழுதித் தருகிறார்.

முத்துக்குமாரின் அப்பா நாகராஜன், புத்தகங்கள் வாங்கியே கடனாளி ஆனவர். கிட்டத்தட்ட நாற்பதாயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகமாக தனது வீட்டையே மாற்றினார். “ஒரு மூட்டை புத்தகம் கொடுப்ப தாகச் சொன்னால் போதும், என்னையே விற்றுவிடுவார்” என்று அப்பாவைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுவார் முத்துக்குமார்.

ஐந்து வயதில் தாயை இழந்து சோகத்தைச் சுமந்த முத்துக்குமார், அடிபட்டபோதெல்லாம் கூட ‘அய்யோ, அம்மா’ என்று அழுததில்லை. ‘அப்பா’ என்றே கரைவார். பேச்சு வந்ததுமே, ‘அப்பா எங்கே?’ என்று கேட்கப் போகிற அவரது எட்டுமாதக் குழந்தைக்கு பதில் சொல்ல வக்கு இல்லாமல் கடந்து கொண்டிருக்கிறது காலம்.