புலி முருகன்



டக்கர் புலி!

வனத்துக்குள் அமைந்திருக்கும் கிராமம் புலியூர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் பழங்குடியினர். இந்த கிராமத்துக்குள் அடிக்கடி ஊடுருவும் புலி, மக்களைக் கொன்று தின்கிறது. மோகன்லால் சிறுவனாக இருந்தபோது அவரது தந்தையும் இந்தக் கொடூரப் புலிக்கு பலியாகிறார். ஏற்கனவே தாயை இழந்த அச்சிறுவன், தந்தையையும் இழந்து அனாதை ஆகிறான். தன்னுடைய இந்த நிலைக்குக் காரணமான புலியைப் பழி தீர்க்க, தன் தாய்மாமன் உதவியுடன் திட்டம் தீட்டுகிறான்.

தன்னுடைய அறிவுக்கூர்மையை பயன்படுத்தி புலியை வேட்டையாடிக் கொன்று விடுகிறான்.இளம் வயது மோகன்லாலாக நடித்திருக்கும் சிறுவன் ஷிஜாஷ், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது வெறிப்பாய்ச்சல், புலியைவிட கடுமையாக இருக்கிறது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து புலியால் மக்களுக்கு ஆபத்து என்றால் ‘புலி முருகன்’ உதவியை நாடுகிறார்கள் வனவாழ் மக்கள்.

மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறிக்க  வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்கிறார்கள்.  மோகன்லாலும் அவர்களுக்கு  கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார். கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது.

அவர்களைத் தாக்கிவிட்டு மோகன்லால், தன்னுடைய மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்.  ஜெகபதி பாபுவை ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கு நல்ல மதிப்பு உருவாகிறது.

ஒரு கட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. புலிவேட்டையில் தன்னிகரற்றவனாக விளங்கும் ‘புலி முருகன்’, நாட்டில் மனிதர்களின் தந்திரங்களில் குழம்புகிறான். கடைசியில் என்ன நடக்கிறது என்பது பரபர திரைக்கதை. 
 
மோகன்லாலின் அறிமுகக்காட்சியே புலியறியவும் புல்லரிக்கவும் வைக்கிறது. மனித வேட்டையாடுவதற்கு வெறியோடு பாய்கிற புலியை மிருக வேட்டையாடி, ஊருக்கே காவல்காரனாக உயர்ந்து நிற்கிறார். புலி  வேட்டையின்போது ஆக்ரோஷம், மனைவி கமாலினி முகர்ஜியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் கண்கலங்கும்போது சென்டிமென்ட் என அனைத்திலும் உயரிய நடிப்பால் உயர்ந்து நிற்கிறார் மோகன்லால்.  

மோகன்லாலின்  மாமாவாக வரும் லால் வில்லத்தனம் செய்வார் என எதிர்பார்த்தால், விலா நோக சிரிக்கவைக்கிறார். மோகன்லாலின் தம்பியாக வரும் பினு, அண்ணன் - தம்பி சென்டிமென்டில் ரசிக்க வைத்திருக்கிறார். 

மோகன்லால் மனைவியாக வரும் கமாலினி முகர்ஜி, கணவனுடன் போடும் செல்லச் சண்டைகள், கொஞ்சல்கள் ரசிக்க வைக்கின்றன. ஜெகபதிபாபு அமைதியான வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். சிறிது நேரமே வந்துபோனாலும், கிறங்கவைக்கிறார்  நமீதா. வன இலாகா அதிகாரியாக வரும் கிஷோர் வழக்கம்போல மிரட்டுகிறார்.

பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள் சிறப்பு. இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.  கிராபிக்ஸ் புலி என்று நம்பமுடியாத வகையில் புலியின் உறுமலும் பாய்ச்சலும் அபாரம். தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஆர்.பி.பாலா.  லிப் சிங், குரல் தேர்வு, நேர்த்தியான வசனங்கள் என நேரடி படத்துக்குரிய பிரசன்ட்டேஷன் கொடுத்திருக்கும் ஆர்.பி. பாலாவுக்கு ஒரு பூங்கொத்து!

ஷாஜிகுமாரின் கேமரா காடுகளில்  காட்டுத்தனமாக புகுந்து விளையாடியிருக்கிறது. புலி வேட்டை காட்சிகளும், லாரி சேசிங் காட்சிகளும் இவரது கேமராவில் அழகாக பதிவாகியிருக்கின்றன.

கோபிசுந்தரின் இசையில் ஆர்.பி.பாலா எழுதியுள்ள ‘முருகா முருகா புலிமுருகா’ என்ற தீம் சாங்  விறுவிறுப்பு. காதல், பாசம், விரோதம், புலிவேட்டை என கலந்துகட்டி,  அனைவரும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வைசாக்.
முடிந்தால் குடும்பத்தோடு 3D வடிவில் பாருங்கள். ‘புலி முருகன்’, உங்களை மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளையும் வெகுவாகக் கவருவான்.