சாட்டை தம்பிராமையா



டைட்டில்ஸ் டாக் 22

சாட்டை என்றதும் என்னுடைய பள்ளிக்கூடம்தான் நினைவுக்கு வருகிறது. என்னுடைய சொந்த ஊர்  புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரம். அங்குள்ள ஆரம்ப துவக்கப் பள்ளியில்தான் என்னுடைய கல்வி  ஆரம்பித்தது.

ஐந்தாம் வகுப்பு வரை அங்கே படித்தேன். அந்தக் காலகட்டத்திலிருந்தே என்னைப் பாதித்த ஆசிரியர்களின் பற்றிய நினைவுகள் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதில் சீனிவாசன், தலைமை ஆசிரியர் பழனியாண்டி முக்கியமானவர்கள். சீனிவாசன் எனக்கு அண்ணன் முறை, பழனியாண்டி பக்கத்து ஊர்க்காரர்,  தலைமை ஆசிரியர்.

ஐந்தாம் வகுப்புவரை ஆங்கிலத்துக்கும் எனக்கும் ஐநூறு கிலோ மீட்டர் தூரம். ஐந்தாம் வகுப்பு வரை ஸ்மால் லெட்டர், கேப்பிட்டல் லெட்டர் என்றால் என்னன்னு தெரியாது. உயர்நிலைப்பள்ளிக்கு வந்த பிறகுதான் ஆங்கிலம் பரிச்சயமானது. உயர்நிலைப்பள்ளி அனுபவம் மறக்க முடியாதது. ஆசிரியர் அருளியாரிடம் நகைச்சுவையை கற்றேன். தமிழை எப்படி உச்சரிக்கணும்னு சொல்லிக்கொடுத்தவர் கலியமூர்த்தி ஆசிரியர்.

மாணிக்கம் ஐயா தமிழ் ஆசிரியர். மனிதநேயத்தை  கணக்கு, அறிவியல் பாடம் எடுத்த அருணோதயம் ஆசிரியரிடம் கற்றேன். உடம்பை பேணிக் காப்பது பற்றி சிதம்பரம் ஆசிரியர் பாடம் எடுத்தார். அவர் எப்போதும் உடம்பை ட்ரிம்மாக வைத்திருப்பார். பல போட்டிகளில் மாணவர்களைத் தாண்டி அவர்தான் பரிசு வெல்வார்.

ஓவிய சிந்தனைக்கான ஆசிரியர் ஸ்டீபன். காதலைப் பற்றி முதன் முதலாகத் தெரிந்து கொண்டதும் பள்ளிப் பருவத்தில்தான். எங்கள் பள்ளிக்கூடத்தில் வேலை செய்த அருணோதயம், சந்திரா டீச்சர் காதலிக்க ஆரம்பித்தபோது அறிந்தும் அறியாத பருவத்தில் இருந்த நான் மாணவர்களுடன் சேர்ந்து டீச்சர்ஸ் லவ்வைப் பற்றி பேசியது சுவாரஸ்யமான விஷயம். நாகரீகமான காதல் அது. பிற்காலத்தில் நான் படித்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக மாறியது. சந்திரா டீச்சர்தான் தலைமை ஆசிரியை.

பதினாறு வயதிலேயே கல்வி மட்டுமில்லாமல், வாழ்க்கையைப் பற்றிய படிப்பினையும் சொல்லிக் கொடுத்தது என்னுடைய பள்ளி நாட்கள். இப்போது என்னுடைய வாழ்க்கைச் சக்கரம் சிறப்பாக, சீராக சுற்றுகிறது என்றால் குப்புசாமி ஆசிரியர்தான் காரணம். ஏன்னா, குப்புசாமி - ருக்மணி ஆசிரியர் தம்பதி நல்ல தம்பதியாக வாழ்ந்து காட்டினார்கள். ருக்மணி டிச்சர் கணவரைவிட உயர் வகுப்புக்கு பாடம் எடுப்பவர். ஆனால் எந்த இடத்திலும் கணவரை விட்டுக் கொடுக்காமல் மரியாதை செய்வார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் கணவனை விட மனைவி அதிகமாக சம்பளம் வாங்கினால் கிடைக்கிற ட்ரீட்மென்ட்டே தனி என்பது வேறு விஷயம்.
தேவராஜ் சார் இளம் வயதில் ஆசிரியர் பணிக்கு வந்தவர். சமீபத்தில் ஊருக்குப் போனபோது அவரை சந்தித்தேன். ரிட்டயர்டு லைஃப்லேயும் அதே இளமையோடு இருந்தார். அந்தக் காலத்தில் பி.யூ.சி முடித்தால் ஆசிரியர் வேலைக்கு போயிடலாம். இப்படி என் மனசுல புகுந்து சடுகுடு ஆடிய ஆசிரியர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, ஒழுக்கத்தின் ஊற்று பள்ளிக்கூடம்தான். இப்போது நான் நடிக்கும் படங்களாட்டும், மேடைப் பேச்சுகளாட்டும், இவை அனைத்துக்கும் உரமிட்டவர்கள் என்னுடைய ஆசிரியர்கள். ஆசிரியர்கள் கையில் சாட்டை இருந்தாலும் அவர்களை நான் நடமாடும் தெய்வமாகப் பார்த்தேன்.

‘சாட்டை’ படத்துல என்னுடைய பாடிலேங்வேஜ் வித்தியாசமா இருந்திருக்கும். அந்தக் கேரக்டரில் அருணோதயம் சார் கலந்திருப்பார். ஆனால் சினிமாவுல காட்டின மாதிரி இம்சையான கேரக்டர் கிடையாது, அன்பானவர்.ஒரு சமயம் பள்ளிக்கூடத்தில் டூர் போனார்கள். கட்டணம் எழுபத்தைந்து பைசா. எல்லா பசங்களும் காசு கொடுத்துவிட்டார்கள். நான் காசு கொடுக்கவில்லை.

அப்போது அருணோதயம் சார், ‘‘ராமையா, காசு நான் கொடுக்கிறேன். டூர் போய்ட்டு வா’’ என்ரார். ஆனால் ‘‘அம்மா திட்டுவாங்க’’ன்னு சொல்லி அந்தக் காசை வாங்க மறுத்துவிட்டேன்.  என்னுடைய பள்ளிக் கூட நாட்களில் சில ஆசிரியர்கள் அன்பு காட்டியிருக்கிறார்கள், சிலர் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போன்ற மாணவர்களை அப்படி செதுக்கவில்லை என்றால் இந்த அளவுக்கு நான் வாழ்க்கையில் முன்னேறியிருக்க முடியாது.

சமூகத்தில் ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு துறையில் இருப்பவர்கள் ஏற்படுத்த முடியாது. இப்போது நான் ஓரளவு தன்னடக்கத்தோடு ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு என் தொழிலை சரியா செய்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் ஆசிரியர்கள்தான். சிலர் தங்களை சுயம்புவாக சொல்லிக்கொள்வதுண்டு. உண்மையில் அவர்கள் சுயம்பு இல்லை. எழுத்தறிவித்தவர்கள் சாறு பிழிந்து அவர்கள் நெஞ்சுக்குள் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வீட்டைப் பொறுத்தவரை எனக்கு சாட்டை அடி வீழ்ந்ததில்லை. ஏன்னா, சின்ன வயதிலேயே அடுத்தவங்க என்னை விமர்சனம் பண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அப்பா சமூகப் போரளி என்பதால் வீட்ல இருக்கிற நேரம் மிகவும் குறைவு. நான் இரண்டறக் கலந்தது அம்மாவிடம். தாய்க்கு தலைமகன். எனக்கு மூன்று தம்பிகள், ஒரு தங்கை. மூத்தவன் என்பதால் சின்ன வயதிலேயே என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அதனால் எனக்குன்னு அட்வைஸ் பண்ணக்கூடிய சூழல் ஏற்படவில்லை. பதினாறு வயதில் கரிகால சோழன் நீதி வழங்கிய மாதிரி நான் டீன் ஏஜ் பருவத்திலேர்ந்து நிறைய பேருக்கு புத்திமதி சொல்லியிருக்கிறேன்.

ஒன்பது வயதிலேயே எனக்கு மாதவிலக்குன்னா என்னன்னு தெரியும். அம்மா வீட்டுக்கு தூரமாக இருக்கும் போது நான் தான் சமையல் மாஸ்டர். அம்மா ரெஸிபி சொல்ல சொல்ல நான் சமைப்பேன். முழு குடும்பத்துக்கும் ஒன்பது வயதில் சமைச்சி போட்டிருக்கிறேன். ஒரு மனிதன் எங்கே பக்குவமடைகிறான் என்றால் அவனுக்குன்னு கமிட்மென்ட் கொடுக்கும்போது. கமிட்மென்ட் இல்லாதவன்தான் தடம் மாறிப் போகிறான். கமிட்மென்ட் இருந்தால் அதைப்பற்றியே சிந்தனை இருப்பதால் வேண்டாத விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடிகிறது.

எனக்கு ஒரு மகள், ஒரு மகன். ஆனால் அவர்களைக் கண்டிக்கிறேன் என்று நானும் சரி, என் மனைவியும் சரி, சாட்டையை எடுத்ததில்லை. செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அவர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மகள் தற்போது பிஎச்.டி முடித்து டாக்டர் பட்டம் வாங்கப் போகிறார். மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்தேன். கணவர், குழந்தைன்னு நல்ல வாழ்க்கை அமைந்தது. மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் ஹீரோவா அறிமுகமாகிறார்.

இப்போதுள்ள குழந்தைகளுக்கு சாட்டை அவ்வளவு பரிச்சயமில்லை. ஆசிரியர்கள் சாட்டை எடுத்தால், பெற்றோர்களும் ஏன் சாட்டை எடுக்கிறீர்கள் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். தவழ்ந்து நடக்க வேண்டிய பிள்ளைகள் கையில் ஆண்ட்ராய்ட் போன் தவழ்கிறது. குழந்தைப் பருவத்திலேயே பெரிய மனிதர்கள் போல் நடந்து கொள்கிறார்கள்.

பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். அதுக்கு உதாரணமா என்னுடைய பேத்தியை சொல்லலாம். இரண்டு வயதுதான் ஆகிறது. ஆனால் அதுவே செல்போனை ஆன் பண்ணி ‘க்ரிஷ்’ பாக்குது. அதுவே போனை ஆஃப் பண்ணிடுது. பிரதர்! இது அவசர உலகம். எல்லாமே சீக்கிரத்தில் கிடைக்கிறது. ரகசியம்னு எதுவும் இல்லை. எல்லாமே சீக்கிரம் தெரிந்துவிடுகிறது.

வீட்டைவிட்டு வெளியே போய் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. உள்ளங்கையில் உலகம் வந்துவிட்டது. ஆனால், பதவி வரும் போது பணிவு வரவில்லை என்றால் பள்ளத்தில் வீழ வேண்டியதுதான். தாயின் கருவறைக்கு இனி ஒரு முறை செல்லப் போவதில்லை. இறுதியில் கல்லறையோ நம்மை விடப்போவதில்லை. இருக்கும்வரை இதயங்களை காயப்படுத்தாமல் இயங்கிவிட்டுச் சென்று விடவேண்டும். இது இறைவன் உனக்கு இட்ட மானசீக கட்டளை. இதை நீ மறந்தால் ஞாபகப்படுத்தப்படுவாய்.

தொகுப்பு : சுரேஷ் ராஜா

(தொடரும்)