ஆரம்பமே அட்டகாசம் ஜீவா



டைட்டில்ஸ் டாக் 33

என் வாழ்க்கையின் ஆரம்பம் காரைக்குடியில் ஆரம்பித்தது. கலை வாழ்க்கையைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டாரின் ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னா கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ பாடலில்தான் ஆரம்பித்தது. படிப்பை பொறுத்தவரை நான் ஆவரேஜ் ஸ்டூடன்ட். ஆனால் நடனம், நாடகம், பேச்சுப் போட்டி, பேன்ஸி காம்பிடிஷன், மிமிக்ரி போன்ற கலைத் துறை சார்ந்த விஷயங்களில் ஹீரோ.

ஒரு முறை பள்ளி ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பித்தபோது ஏகோபித்த ஆதரவும் பரிசுகளும் கிடைத்தது. நான் நன்றாக நடனம் ஆடுவதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் என்னை அழைத்து ஆடச் சொன்னார்கள். அன்று எந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவனாக படித்தேனோ இன்று அதே பள்ளிக் கூடத்துக்கு சிறப்பு விருந்தினராக போகுமளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஏன் ஆரம்ப கால லட்சியங்கள்தான்.

என்னுடைய கலை ஆர்வத்துக்கு விதை போட்டவர்கள் தமிழ் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும்தான். அவர்கள்தான் எனக்கு படிப்பை விட கலை மீது ஆர்வம் இருப்பதை அறிந்து ஊக்குவித்தார்கள். சினிமாவுக்கு வர நினைக்கும் அனைவரும் ஹீரோ கனவோடு தான் வருவார்கள். அந்த நோக்கத்துடன்தான் நானும் சென்னைக்கு வந்தேன். ரஜினி சாரை சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கத்தின் முக்கிய பகுதி. சினிமாவில் நடித்தால் அவரை சந்திப்பது எளிதாகும் என்று முடிவு பண்ணி சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். சினிமா தொடர்புடைய வேலைகளை வேண்டி விரும்பி செய்தேன்.

‘குருவி’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘மதராஸபட்டிணம்’ என்று குறுகிய காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட  படங்களில் காமெடியனாக நடித்தேன். இதில் ஹைலைட்டான விஷயம், நான் ஹீரோவாக நடித்த ‘ஆரம்பமே அட்டகாசம்’ ஆடியோவை ரஜினி சார் வெளியிட்டார். அதுதான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள், ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து நாம்  வர வேண்டும். ஐய்யோ இங்கு மேடு வந்துவிட்டதே! நான் என்ன பண்ணுவேன் என்று தயங்கக்கூடாது. தடைகளை உடைத்து வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.

நான் சினிமாவுக்கு வந்து பதினெட்டு வருஷங்கள் கடந்துவிட்டது. ஆரம்ப காலங்களில் காலை நேரத்தில் கம்பெனி கம்பெனியாக சினிமா வாய்ப்பு தேடுவேன். மதிய வேளையில் டீக்கடை அல்லது ஏதாவது ஒரு வீட்டு வாசலில் நிழலுக்காக உட்கார்ந்துவிடுவேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் துரத்திவிடுவார்கள். அந்த சமயத்தில் எனக்கு நிழல் கொடுத்த இடம் காமராஜர் நினைவு இல்லம்.

அடிப்படையில் எனக்கு கர்ம வீரரைப் பிடிக்கும். அந்த இல்லத்தில் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே போனால் சாயங்காலம் வரை இருக்கலாம். யாரும் துரத்த மாட்டார்கள். ஐயா பயன்படுத்திய பொருட்கள், உடைகள், புகைப்படத் தொகுப்பு என்று அங்கு இருக்கும் ஒவ்வொரு உடமைகளையும் பலதடவை திரும்பத் திரும்ப பார்ப்பேன்.

அந்த இடம் எனக்குள் மன அமைதியை கொடுத்தது.  வாய்ப்பு தேடி முடித்த பிறகு தினமும் காமராஜர் இல்லத்துக்கு வந்துவிடுவேன். அங்கு இருக்கும் போது எனக்குள் பாசிடிவ் எண்ணங்கள் மேலோங்கி நிற்கும்.  இப்போது நான் சமூக தளங்களில் இயங்க காரணமும் ஐயாதான். அவருடைய எளிமையும், தன்னலமற்ற தொண்டும் தான் என்னளவில் ரத்ததானம், மரம் நடுவது என்று சமுதாயத்துக்கு நல்ல விஷயங்கள் பண்ண வேண்டும் என்று தோன்றக் காரணம்.

அப்போது நல்ல அரசியல் இருந்தது. இப்போது அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது. நல்ல அரசியல் ஆரம்பமாக வேண்டும் என்று சினிமாவையும் தாண்டி இயங்கி வருகிறேன். ஏராளமான தியாகிகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். அதை நாம் தக்க வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நானும் சிறியஅளவில் இறங்கியிருக்கிறேன்.

ஏன்னா, நல்ல தலைமையின் கையில்தான் ஒரு நாட்டின் தலையெழுத்தே இருக்கு. தலைமை நல்ல வழியில் நடத்தும்போது நாடு சுபிட்சமாக இருக்கும். எல்லோரும் பகிர்ந்து உண்டு வாழ வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கணும். அப்படி ஒரு அரசாங்கம் ஆரம்பமாக வேண்டும். எந்த ஒரு புது விஷயத்தை ஆரம்பிக்கும் போதும் தடைகள் வரும். வீழ்ந்தாலே எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.

இப்போதுள்ள இளைஞர்கள் டெக்னாலஜியில் மூழ்கி இருக்கிறார்கள். இளைஞர்களை குற்றப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. டெக்னாலஜி அவசியம்தான். ஆனால் சமூகத்துக்கு உங்கள் பங்கு என்ன என்று யோசிக்க வேண்டும். தினந்தோறும் வாழ்க்கையில் ஒரு விஷயமாவது சமூகத்துக்கு என்ன பண்ணப்போறோம் என்று யோசிக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் கிடைத்தால் பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள். படித்தவர்களே அப்படிச் செய்வது வருந்தக்கூடியது. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவன் அன்றே சொன்னான். மை டியர் யுத், கெட்ட விஷயத்தை எப்போதும் பரப்பாதீங்க. நல்லவங்க பக்கம் சேர்ந்துகொள்ளுங்கள்.

வாட்ஸப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக தளங்களில் ‘பார்வேர்டு’ பண்ற மந்தையோடு மந்தையாக இருக்க வேண்டாம். எப்போதும் முதல் பதிவு உங்களுடையதாக இருக்கட்டும். வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதுக்கும் பல சிலிண்டர் ஆக்சிஜன் சுவாசிக்கிறோம். நிறைய தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதுக்காக நாம் எந்தக் கட்டணத்தையும் செலுத்துவதில்லை.

ஆனால் அதை பாதுகாக்கும் முயற்சியும் கடமையும் நமக்கு இருக்கு. அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன வைத்துவிட்டுப் போகிறோம் என்று யோசிக்கும் கட்டத்துக்கு வந்துவிட்டோம். அறம் செய்து பழகிவிட்டால் அதைப்போல் ஒரு மகிழ்ச்சி இந்த உலகத்தில் இல்லை.

அதுக்காக வேலையை விட்டுவிட்டு மரம் நடச் சொல்லலை. உங்கள் வேலையில் தொழில் தர்மத்தை கடைப்பிடித்தாலே நாடும் வீடும் செழிக்கும். அறம் சார்ந்த அரசியல் ஆரம்பமாகும் போது இது சாத்தியமே!

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)