சுயநலத்தில் பிறக்கிறது பொதுநலம்!சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! கதை எழுத கத்துக்கலாம்! 51

ஏறத்தாழ ஓராண்டாக இத்தொடரில் சினிமாவுக்கு கதை எழுத கற்றுக் கொண்டு வருகிறோம். கதை என்பது ஒட்டுமொத்தமாக 36 சூழல்களை மையமாக வைத்து எழுதப்படுவது என்பதை பார்த்தோம். அதில் ஏற்கனவே 35 சூழல்களைப் பார்த்துவிட்டோம். இதுதான் கடைசி.

ஒரு சினிமாவைப் பொறுத்தவரை படத்தின் முதல் பதினைந்து நிமிடம், இடைவேளைக்கு முன்பான பத்து நிமிடம் சிறப்பாக அமைந்தால்தான் அது வணிகரீதியாக வெல்வதற்குரிய வாய்ப்புகளைப் பெறும். அது தவிர்த்து படத்தின் முடிவு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்.

ஒரு படத்தின் இயக்குநரும், எடிட்டரும் வளவளவென்று கதை ஓடிக்கொண்டே இருக்காமல் கச்சிதமாக எப்போது முடிக்கப்பட வேண்டும் என்கிற தெளிவினைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இத்தொடரையும் இந்த அத்தியாயத்தோடு முடித்துக் கொள்கிறோம்.
நாம் காணப்போகும் கடைசி சூழல், இழப்பினால் உருவாகும் பொதுநலம்.

ஒரு ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ தனிப்பட்ட முறையில் ஒரு பேரிழப்பு ஏற்படும். அதற்கு அவன் காரணத்தைத் தேடும்போது ஒட்டுமொத்தமான சமூகத்தின் அல்லது அரசாங்கத்தின் தவறே அதற்குக் காரணம் என்பதைக் கண்டுகொள்வான்.

அதற்கு எதிராகப் போராடுவான். இயக்குநர் ஷங்கரின் படங்களில் இந்தக் கதைப் போக்கினை நீங்கள் தொடர்ச்சியாகக் காணலாம். அவருடைய படங்கள் கமர்ஷியலாக பெரும் வெற்றியடைவதற்கு ஒருவேளை இம்மாதிரி கதைகளைப் பிடிப்பதும் காரணமாக இருக்கலாம்.

உதாரணத்துக்கு, ‘ஜென்டில்மேன்’ படத்தில் கல்விக் கொள்ளையர்களால் தன்னுடைய நண்பன் வினீத்தை இழப்பார் அர்ஜுன். அம்மாதிரி இழப்பு வேறொரு குடும்பத்தில் நடைபெறக்கூடாது என்று அரசுக்கு எதிரான மிகப்பெரிய போரைத் தொடுப்பார்.‘இந்தியன்’ படத்தில் லஞ்சம் கொடுக்கக்கூடாது என்கிற கொள்கையால் தன் மகள் கஸ்தூரியை இழப்பார் கமல். வேறொரு தந்தைக்கு இப்படியான இழப்புக்கூடாது என்று லஞ்ச லாவண்யங்களுக்கு எதிராகப் போராடுவார்.

‘முதல்வன்’, ‘அந்நியன்’ என்று ஷங்கர் எடுத்த வெற்றிப்படங்கள் பலவற்றுக்கும் இதுதான் கதை.தனிப்பட்ட முறையில் ஓர் இழப்பு. அந்த இழப்பு வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் போராடும் நாயகன். நீங்கள் குறைந்தபட்சம் இதை வைத்து நூறு கதைகளாவது எழுதலாம்.தொடரை ஓராண்டாக தொடர்ச்சியாக வாசித்து வரும் வாசகர்கள், கதாசிரியர்களாக தமிழ் சினிமாவில் வெற்றிபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

(கதை முடிஞ்சது)