டப்பிங் ஸ்டார்:‘அவதார்’ சபரி!



சபரிநாதன் முதன்முதலாக தனியாக தமிழில் டப்பிங் செய்து கொடுத்த படமே ‘அவதார்’தான். அதிலிருந்து ‘அவதார்’, அவர் பெயருடனேயே ஒட்டிக் கொண்டது. ‘‘அப்பா ஏ.எம்.குமார் சில படங்கள் இயக்கியிருக்கார். அம்மா மாலா டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ‘மகாநதி’ படத்தில் கமல் சார் பையனுக்கு பேட்ச் ஒர்க் பேசியிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டப்பிங்தான். ‘மம்மி’, ‘ஹாரிபாட்டர்’னு நிறைய வாய்ஸ் குடுத்திருக்கேன்.

இந்தத் துறையில் உள்ள சசிகுமார் சார் மூலமா ‘அவதார்’ வாய்ப்பு வந்தது. அதன்பிறகு ‘லைஃப் ஆஃப் பை’, ‘அவென்ஜர்ஸ்’னு நூறு படங்களுக்கு மேல் டப்பிங் பண்ணிட்டேன். ‘தூம்3’, ஷாரூக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படங்களுக்கு தமிழில் கிடைச்ச வரவேற்பு மறக்க முடியாதது. ஆங்கிலப் படங்கள் மொழிமாற்றம் பண்ணும் போது  உடனே முழுப் படத்தையும் நம்மகிட்ட குடுத்திட மாட்டாங்க.

சில நிமிட வீடியோக்களாகக் குடுத்து அதை எப்படி டப் பண்றேன்னு சாம்பிள் டெஸ்ட் வைப்பாங்க. அதன் பிறகு ஒவ்வொரு கேரக்டருக்கான வாய்ஸுக்கும் மூணு குரல் ஆப்ஷன் குடுக்கணும். இப்படி நிறைய பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பாங்க’’ என்கிறார் சபரி.