நெஞ்சில் துணிவிருந்தால்



துணிவு மட்டும் போதுமா?

நாயகன் சந்தீப்பின் அப்பா, ஆபரேஷனில் நடந்த குளறுபடி ஒன்றின் காரணமாக இறந்துபோவதில் தொடங்குகிறது படம். மருத்துவ உலகின் வணிகவெறியை தோலுரிக்கும் படம் இதுவென்று நிமிர்ந்து உட்கார்ந்தால், வேறு கதை ஒன்றை காட்டுகிறார்கள்.

சந்தீப்பும், விக்ராந்தும் நெருங்கிய நண்பர்கள். சந்தீப்பின் டாக்டர் தங்கை சாதிகாவை விக்ராந்த், நண்பனுக்கு தெரியாமல் ரகசியமாக காதலிக்கிறார். சரி, இது நட்பு முரண் பற்றிய படமாக இருக்குமென்று நினைத்தால் அதுவுமில்லை.

விக்ராந்தையும், சாதிகாவையும் போட்டுத் தள்ள பணத்துக்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன் மெனக்கெடுகிறார். அப்படியென்றால் இது கிரைம் படமாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அதுவுமில்லை.

இப்போதுதான் கதை முதல் பாயிண்டுக்கு வருகிறது. கூலிப்படையின் குறி விக்ராந்த் அல்ல, மருத்துவ மேற்படிப்பு படிக்க நினைக்கும் சாதிகாதான் என்று தெரியவருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சமீப வருடங்களில் நடந்த சில தற்கொலைகள் குறித்த வேறொரு பரிமாணத்தை தொட இயக்குநர் முயற்சித்திருக்கிறார்.

கூலிப்படையினரிடமிருந்து சாதிகா தப்பினாரா, எதற்காக அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்றெல்லாம் அது பாட்டுக்குமாக அலைந்து திரிகிறது திரைக்கதை. இடையில் கந்துவட்டி கும்பலோடு வேறு படத்தின் நாயகர்கள் மோதுகிறார்கள்.

பொதுவாக இயக்குநர் சுசீந்திரனின் படங்களில் திரைக்கதை தொய்வில்லாமல் மையப்புள்ளியை ஒட்டியே பயணிப்பது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தப் படத்தின் மையப்புள்ளியை விட்டுவிட்டு, சமகால தமிழ் சமூகத்தின் அத்தனை பிரச்சினைகளையும் இந்த ஒரு படத்தை இயக்கியே தீர்த்துவிட வேண்டுமென்று கடுமையாக முயற்சித்திருக்கிறார்.

நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் சிறப்பாக திறமை காட்டுகிறார் சந்தீப்.  இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும் நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் அளவான நடிப்பை அழகோடு கொடுத்திருக்கிறார். ஆனால், அவரைவிட விக்ராந்தின் காதலியாக வரும் சாதிகாவுக்குத்தான் அதிக வாய்ப்பு. ஹரீஷ் உத்தமனின் வில்லத்தனம் வித்தியாசமாக இருக்கிறது.  சூரி சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார்.

இமான் இசையில் பாடல்களை  ரசிக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு  உறுத்தல் இல்லாமல் ரசிக்க வைக்கிறது..சமூக அக்கறையுடன் ஒரு கதையை எடுத்து இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.