‘மீ டூ’ அனுபவமில்லை! ‘மரகதக்காடு’ ராஞ்சனா சொல்கிறார்



மிஸ் கர்நாடகா, மிஸ் சவுத் இந்தியா என்று சினிமாவுக்கான முழு தகுதிகளோடு வந்துள்ளார் ராஞ்சனா. ‘‘நான் நடிகையானது விபத்து மாதிரிதான்’’ என்கிற ராஞ்சனா ‘மரகதக்காடு’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். அவரிடம் பேசினோம்.

“தமிழ்ப் படங்களில் நடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தீர்களா?”

“நான் சினிமா நடிகையாக மாறியதே எதிர்பாராதது. எனக்கு பூர்வீகம் மங்களூரு. வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரு. அப்பா, அம்மா இருவரும் அரசு உயர் அதிகாரிகள்.  எனக்கு ஒரு தங்கச்சி. எம்.டெக் பண்றார்.

நான் பி.ஈ. ஆர்க்கிடெக்ட் முடிச்சேன். எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் எவ்வித சம்பந்தமும்  இருந்ததில்லை. எனக்கு பரதம் நன்றாகத் தெரியும். பள்ளி, கல்லூரி நாட்களில் எந்த கலை விழாவாக இருந்தாலும் அதில் நான் கலந்துப்பேன்.

மிஸ் கர்நாடகா, மிஸ் சவுத் இந்தியா போன்ற அழகிப் போட்டிகள்தான் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. அழகிப் போட்டியில் ஜெயித்தவுடன் சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போதுதான் நான் கல்லூரி சேர்ந்திருந்ததால் வீட்டுல தடை சட்டத்தை அமுல்படுத்திவிட்டார்கள்.

கன்னடத்தில் வெளிவந்த ‘ப்ரேம பல்லக்கி’தான் என்னுடைய முதல் படம். தமிழில் ‘மரகதக்காடு’. அந்த வகையில் நான் சினிமாவுக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு விபத்து மாதிரிதான் சினிமாத் துறைக்கு வந்தேன்.”

“இந்த ‘மரகதக்காடு’ படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“இது முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதை. இயற்கை வளங்களைக் காப்போம் என்பதுதான் படத்தோட டேக் லைன். அதுமட்டுமில்ல, பழங்குடி இன மக்கள் தங்கள் பூர்வீக இடத்திலிருந்து ஏன் நகர்ப்புறங்களுக்கு மாறுகிறார்கள் என்பதையும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்கள். நாயகனாக அஜய் நடித்துள்ளார்.

என்னுடைய கேரக்டர் பெயர் மல்லி. ரொம்ப துணிச்சலான பெண்.  படத்துல என்னுடைய கேரக்டர் மற்ற கேரக்டர்களைவிட  டாமினேட்டடா இருக்கும். இந்தப் படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்தீர்களா என்று கேட்கிறார்கள். படத்துல வரும் எல்லா காட்சிகளும் ரிஸ்க் எடுத்து நடித்தவைதான்.

கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள அடர்ந்த காட்டில்தான் முழுப் படப்பிடிப்பும் நடந்தது. யானை, சிறுத்தை என்று கொடிய மிருகங்கள் நடமாடும் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். தினமும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டும். செருப்பு இல்லாமல் நடித்துள்ளேன்.

கதைப்படி ஒரு இடத்தில் 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிக்க வேண்டும். ஃபைட் மாஸ்டர் உட்பட யூனிட்ல உள்ளவங்க டூப் போட்டு எடுத்துக்கலாம் என்றார்கள். எனக்கு நீச்சல் தெரியும் என்பதால் துணிச்சலாக நடிக்க முடிந்தது.

இன்னொரு காட்சியில் தண்ணிக்கடியில் உள்நீச்சல் அடித்து ஹீரோவைச் சந்திக்கும் காட்சி. காட்சி யதார்த்தமா வரணும் என்பதற்காக கூடுதலாகவே ‘தம்’ கட்டினேன். யூனிட் பரபரப்பாகி ஸ்டன்ட் டீம்  தண்ணிக்குள் குதித்து என்னைத் தூக்கி எடுத்தார்கள்.

காட்டு வழிப் பாதையில் அணை திறந்தால் நடக்க முடியாது. அந்த மாதிரி சமயத்தில் மலைவாழ் மக்களுடன் தங்கிவிடுவோம். அப்போது மலை வாழ் மக்களின் உணவாகிய கிழங்கு உட்பட கிராமிய உணவுகளைச் சாப்பிட்டோம்.

குறிப்பாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு நடந்த 60 நாட்களில் செல்போன் இல்லாமல் வாழ்ந்ததை பெரிய சாதனையாகவே பார்க்கிறேன். இப்போது தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையா செல்ஃபோனைத் தான் பார்க்கிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதியில் சிக்னல் இல்லாததால் நோ செல்ஃபோன்.

நான் மட்டும்தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன் என்று நினைக்க வேண்டாம். யூனிட்ல இருந்த அத்தனை பேரும் சிரமம் பார்க்காமல் வேலை பார்த்தார்கள். லைட்மேன் அண்ணன்கள் படப்பிடிப்புக்கான கருவிகளை கரடு முரடான பாதையில் தோளில் சுமந்தது உட்பட அவர்களுடைய தியாகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அடர்ந்த வனப்பகுதியில் ஊர் மக்களே ரிஸ்க் எடுக்காத நிலையில் யூனிட்ல உள்ளவங்க ரிஸ்க் எடுத்தது கிரேட்.

இயக்குநர் மங்களேஸ்வரன் சார் பற்றியும் சொல்லவேண்டும். அவ்வளவு எளிதில் மனுஷன் காம்ப்ரமைஸ் ஆகமாட்டார். இப்போ எனக்கு ஓரளவுக்கு தமிழ் தெரியக் காரணமே அவர்தான். எக்ஸ்பிரஷன், டயலாக் யதார்த்தமாக இருக்கணும் என்பதற்காக ஸ்பாட்லதான் டயலாக் ஷீட்டை கொடுப்பார். ப்ராம்ப்டிங், மக்கப் அவரிடம் செல்லாது.

சின்னச் சின்ன கண் அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து வேலை வாங்குவார். அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ஒரு நடிகைக்கு எப்போது புகழ் கிடைக்கிறது என்றால் நல்ல இயக்குநர்கள் கிடைக்கும்போதுதான். அப்படி எனக்குக் கிடைத்த இயக்குநர் மங்களேஸ்வரன்.

தயாரிப்பாளர் ரகு சார் வயதில்தான் மூத்தவர். எப்போதும் உற்சாகமாக இருப்பார். ஸ்பாட்ல அவர்தான் முதல் ஆளாக இருப்பார். படப்பிடிப்பு முடிந்து போகும் கடைசி ஆளாகவும் அவராகத்தான் இருப்பார்.

யூனிட்ல உள்ளவங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.தமிழ் சினிமாவில் கமல் சாரை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். அவருடைய அறிமுகம் என்பதில் எனக்கும் பெருமையே.”

“சினிமாவுக்காக உங்களை எப்படி தயார் செய்துகொண்டீர்கள்?”

“சில பேருக்கு சினிமா பேஷனா இருக்கும். அதனால் அவர்கள் நடனம், நடிப்பு என்று தங்களை தயார் செய்து கொண்டு இண்டஸ்ட்ரிக்கு வருவார்கள். அப்படி ஒரு முன் ஏற்பாட்டுடன் நான் சினிமாவுக்கு வரவில்லை.

சினிமாவுக்கு வந்தபிறகு தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் படங்கள் என்று எல்லா மொழி படங்களையும் பார்த்துதான் என் சினிமா அறிவை வளர்த்துக் கொண்டேன். பல்வேறு படங்கள் வாயிலாகவே பிராந்திய மொழிகளையும் பிராந்திய மக்களின் லைஃப்ஸ்டையும் கற்றுக் கொண்டேன்.”

“கன்னட தேசத்தைச் சேர்ந்த நீங்கள் எந்த மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்போகிறீர்கள்?”

“கண்டிப்பாக தமிழ்ப் படங்களில் நடிப்பதுதான் என்னுடைய முதல் சாய்ஸ். ஏன்னா, தமிழ்ப் படங்களில் வரும் கேரக்டர்ஸ் அழுத்தமாக இருக்கும். எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் ஆடியன்ஸ் தங்களை கனெக்ட் பண்ணி பார்த்துக் கொள்ளலாம். அப்படி வாழ்வியலுடன் தொடர்புள்ள படங்களாக இருக்கும்.”

“என்ன மாதிரி கேரக்டர்ல நடிக்க ஆர்வமாக இருக்கீங்க?”

“எல்லா வகையான கேரக்டரும் பண்ணுவேன். நாலு பாட்டு, இரண்டு டயலாக் என்ற டெம்ப்லேட் ரோலில் நடிக்க விருப்பமில்லை. இதுவரை நான் பண்ணிய படங்களில் என்னுடைய கேரக்டர் பேசப்படும் விதத்தில்தான் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை கதை வலுவாக இருக்கவேண்டும். எந்த வகையிலாவது சமூகத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். நடிகை என்பதைத் தாண்டி நல்ல பெர்ஃபார்மர் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன்.”

“கிளாமர் ரோல் பண்ணுவீங்களா?”

“கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமர் ரோலில் நடிப்பதற்கு கவலைப்படமாட்டேன். எல்லை பற்றியும் கவலை இல்லை.”

“நிஜத்துல உங்க கேரக்டர் எப்படி?”

“அமைதியோ அமைதி. அதே மாதிரி கோபம்னு வந்தால் என்னைப் போல் ஒரு கோபக்காரியைப் பார்க்கவே முடியாது. இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை கன்ட்ரோல் பண்ண ஆரம்பித்துவிட்டேன்.

எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதும் என்னுடைய அடையாளம். எனக்கு மேனேஜர் கிடையாது. யூனிட்ல உள்ளவங்க, சக ஆர்ட்டிஸ்ட் சொல்லித்தான் அடுத்தடுத்த வாய்ப்பைப் பெற்றேன். என்னைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளணும்னா ‘மரகதக்காடு’ டீம்ல கேட்டுப் பாருங்க.”

“மீ டூ?”

“இந்தக் கேள்வி இன்னும் வரலையே என்று எதிர்பார்த்தேன். மீ டூ என்ற  இந்த வார்த்தையை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதனால் அதைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் என்னிடம் இல்லை. ஒண்ணு மட்டும் என்னால் தெளிவா சொல்ல முடியும். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் நமக்கு மரியாதை கிடைக்கும். சாமி சத்தியமாக சொல்வதா இருந்தால் எனக்கு அந்த அனுபவம் இல்லை.”

- சுரேஷ்ராஜா
படம் : ஆண்டன் தாஸ்