மலையாளத்தில் ஒரு பாகுபலி



கோடிகளை அள்ளுகிறது காயம்குளம் கொச்சுண்ணி, மலையாளத் திரைப்படம்.கேரளாவில் திரையிடப்பட்ட முதல்நாளில் மட்டும் 1700 காட்சிகளில் ஐந்தரைக் கோடி ரூபாய் வசூலை வாரியிருக்கிறது.1817 முதல் 1858 வரை வாழ்ந்த கேரளத்து ராபின்ஹுட் கொச்சுண்ணியின் வாழ்க்கை நிகழ்வுகளே இந்தப் படத்தின் கதை.

கொட்டாரத்தில் சங்குண்ணி என்பவர் நூலை அடிப்படையாகக்கொண்டும், கொச்சுண்ணியைப் பற்றிய வரலாற்று ஆய்வுகளைத் திரட்டுவதற்கு அமைக்கப்பட்ட குழு வழங்கிய தகவல்களின் தொகுப்பைக்  கொண்டும்  பாபி மற்றும் சஞ்சய் இணைந்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர்.

பெயரைச் சொன்னாலே தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என அறியப்பட்ட காயம்குளம் கிராமத்தில் பிறந்து, பத்து வயதில் ஊரைவிட்டு வெளியேறி, வேறொரு ஊரிலுள்ள பிராமண அக்ரஹாரத்தில் அடைக்கலம் புகுந்து, அவர்களால் அவமானம், திருட்டுப்பட்டம் அடைந்து, வேறு வழியில்லாமல் கொள்ளையனாக மாறி, அதில் திரட்டிய பணத்தையும் நகைகளையும் தனது ஊர் மக்களுக்கு வழங்கிய கொச்சுண்ணியின் உண்மைக்கதை இது.

கொச்சுண்ணி கதாபாத்திரத்துக்கு அடுத்த சாய்ஸே தேவைப்படாமல் நிவின் பாலியைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இடைவெளி விட்டு விட்டு படப்பிடிப்பு நடந்ததால், ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கமுடியாமல் மூன்று படங்களின் வாய்ப்பை இழந்திருக்கிறார் நிவின்.

இந்தப் படத்துக்காக தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொண்ட அவர், தன்னுடன் நடிக்கும் பாபு ஆண்டனி மற்றும் சன்னிவேன் ஆகியோருடன் கொச்சியில் உள்ள ஆண்ட்ரூஸ் தற்காப்புக் கலைப் பள்ளியில் களரிப்பயட்டு மற்றும் குதிரையேற்றப் பயிற்சிகளை முறைப்படி கற்றிருக்கிறார். நிவினுடைய 34ஆவது பிறந்தநாளான அக்டோபர் 11ஆம் தேதியில் படத்தை வெளியிட்டு, நிவினுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூஸ்.

இத்திக்கா பக்கி என்கிற கொள்ளையர் தலைவனாக சிறப்புத் தோற்றத்தில்  நடித்திருக்கிறார் மோகன்லால். 12 நாட்கள் கால்ஷீட்டில் நடித்த அவர், மூன்று  மணிநேரப்  படத்தில், நாற்பது நிமிடங்களே வந்தாலும் உடல்மொழியால் அசத்தி,  கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்து கைதட்டல்களை அள்ளிச்   செல்கிறார்.

நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் அமலாபால். அவர் கொடுத்த தேதிகளில்  படப்பிடிப்பை நடத்த முடியாததால் பிரியா ஆனந்த் இவ்வாய்ப்பைப்  பெற்றிருக்கிறார். இந்தப் படத்துக்காக மூன்று படங்களை இழந்திருக்கிறார் அவரும்.

‘உதயனானு தாரம்’, ‘நோட்புக்’, ‘எவிடம் சொர்க்கமானு’, ‘மும்பை போலீஸ்’, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ ஆகிய ஹிட் படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள படம் இது. இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் வடிவம்தான் ஜோதிகா  நடிப்பில் வெளிவந்த ‘36 வயதினிலே’.

மோகன்லால் கதாபாத்திரத்துக்கு முதலில் டிசைன் செய்யப்பட்டு விளம்பரங்களில் பயன்படுத்திய காஸ்ட்யூம்களை மாற்றி இப்போதுள்ள  காஸ்ட்யூம்களை உருவாக்கித் தந்துள்ளார் காஸ்ட்யூம் டிசைனர் தான்யா பாலகிருஷ்ணன். 

பீரியட் படத்துக்குத் தேவைப்படும்  சிறப்பான பின்னணி இசை வழங்கியதுடன், இதமாகவும் உருக்கமாகவும் மூன்று பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்திருக்கிறார் கோபி சுந்தர். வெள்ளையர் மாளிகையில் நடக்கும் விருந்துப்பாடலுக்கு நோரா பதேரி  நடனமாடியிருக்கிறார். அந்தக் காட்சி கோவாவில் படமாக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளர் பிரதன்  ஒப்புக்கொண்ட தேதிகளில் படப்பிடிப்பு  நடத்த  இயலாததால், அவர் 110 நாட்கள் மட்டும் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீரவ்ஷா 40  நாட்களும், பால் சேனே 11 நாட்களும் படப்பதிவு செய்து படத்தை நிறைவு  செய்துள்ளனர்.இலங்கையில் உள்ள ஒரு இடத்தில் காயம்குளம் போன்ற செட் அமைத்து, படம்பிடித்திருக்கிறார்கள். 150 வீடுகளை நிர்மாணித்த பணிக்கு தினமும் 400 தொழிலாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள்.

செட்டுக்கு மட்டும் சுமார் 12 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. கிராஃபிக்ஸ் பணிகளுக்கு மூன்று கோடி ரூபாய். ஜெர்மன் நாட்டு சண்டைக்கலைஞர்கள் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ‘பாகுபலி’ படத்தில் கிராஃபிக்ஸ்  காட்சிகள் அமைத்த குழுவில் இடம்பெற்ற சனத் இந்தப் படத்துக்கு பணிசெய்துள்ளார்.

மேல் சாதி, கீழ் சாதி என்று மேம்போக்காக சொல்லிவிடாமல் , பிராமணர், தாழ்த்தப்பட்டவர் என நேர்மையோடு துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூஸ். ஒரு பயணத்தின்போது, கொச்சுண்ணியிடம் நண்பன் சொல்வான், ‘பிராமணர்கள்தான் உசந்தவர்கள், சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள்னு அந்த புஸ்தகத்துல எழுதியிருக்கு’.

கொச்சுண்ணி கேட்பான், ‘யாரு எழுதுனது?’. நண்பன் சொல்வான், ‘பிராமணர்கள்தான்’ என்று. அந்தக் காட்சிக்கு தியேட்டர்களில் கைதட்டலும் விசிலும் பறக்கிறது.தென்னிந்தியாவிலிருந்து சினிமாவில் உரத்து எழுந்திருக்கும் சமூகநீதிக்குரலாக இந்த ‘காயம்குளம் கொச்சுண்ணி’யைச் சொல்லலாம்.

- நெல்லை பாரதி