பயில்வான்குத்துச்சண்டை போடும் மல்யுத்த வீரன்!

நன்றாக சண்டை போடும் ஒரு அனாதைச் சிறுவனைத் தத்தெடுக்கிறார் குஸ்தி வாத்தியாரான சுனில்ஷெட்டி. அந்தச் சிறுவன் வளர்ந்து மல்யுத்தக் கலையில் மாஸ்டர் ஆகிறான். சுத்துப்பட்டு ஏரியாவில் யாராலும் வெல்ல முடியாத மாமல்லனாக உருவெடுக்கும் சுதீப், ஒரு போட்டியில் அந்தப் பகுதி ஜமீன்தாரையே வென்று விடுகிறார்.

சுதீப்பை வென்று தன்னுடைய மரியாதையைக் காத்துக்கொள்ள ஜமீன்தார் சகலவழிகளிலும் முயற்சிக்கிறார். இடையே சுதீப்புக்கு ஆகான்ஷா சிங்குடன் காதல். தன்னுடைய காட்ஃபாதர் சுனில்ஷெட்டிக்கு தெரியாமல் கல்யாணமும் செய்து கொள்கிறார். இந்தக் கல்யாண விஷயமாக கோபப்படும் சுனில்ஷெட்டி, தான் கற்றுக் கொடுத்த மல்யுத்தக் கலையை இனி எங்கேயும் பயன்படுத்தக் கூடாது என்று சுதீப்பிடம் வாக்கு பெறுகிறார்.

ஊரை விட்டு வெளியேறி அமைதியாக மனைவியுடன் வாழும் சுதீப்பை மீண்டும் வம்புக்கு இழுக்கிறார் ஜமீன்தார். இதற்கிடையே குத்துச்சண்டை போட்டிகளில் அசுரனாக உருவெடுக்கும் கபீர் துஹான்சிங்கை வீழ்த்துவதற்கு சரியான ஒரு வீரனை சரத் லோகித்ஸவா தேடிக் கொண்டிருக்கிறார்.

சுனில்ஷெட்டியை சமாதானப்படுத்த முடிந்ததா, ஜமீன்தாரை வெல்ல முடிந்ததா, மல்யுத்த வீரரான சுதீப் குத்துச்சண்டையில் சாதிக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.

சுதீப்பைப் பொறுத்தவரை ஜம்மென்று உடலை ஏற்றி சண்டைக்காட்சிகளில் தூள் பறத்துகிறார். ஆக்‌ஷனில் காட்டும் மும்முரத்தை ஆக்டிங்கிலும் காட்டியிருக்கலாம். ரொமான்ஸ் காட்சிகளில் தேமேவென்று இருக்கிறார். ஹீரோயின் ஆகான்ஷா சிங்கோ எழுபதுகளின் இந்தி ஹீரோயின் மாதிரி அழுது வடிகிறார். சுனில் ஷெட்டி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

கருணா கராவின் ஒளிப்பதிவு, அர்ஜுன் ஜான்யாவின் இசையெல்லாம் படத்தைத் தூக்கி நிறுத்த முயற்சித்தாலும் ஓர் இலக்கில்லாமல் இஷ்டத்துக்கும் அலைபாயும் திரைக்கதை கொட்டாவி விட வைக்கிறது. இந்தப் படத்தை எப்படி தன்னுடைய கனவுப்படமாக சுதீப் கருதினார் என்றே தெரியவில்லை. 1980களின் தொடக்கத்தில் ஒருவேளை வெளிவந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

தமிழ் டப்பிங்கும் ஏனோதானோவென்று செய்திருக்கிறார்கள்.மொத்தத்தில் பயில்வான், மல்யுத்தக் கலையின் வீரத்தையும் பறைசாற்றவில்லை; கன்னட சினிமாவுக்கும் பெருமை சேர்க்கவில்லை.