உலகக் கோப்பையை திருடும் கூட்டம்!சினிமாவில் மதுரைக்காரர்களின் பங்களிப்பு அதிகம். அந்த வகையில் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும்விதமாக ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் சுதர். ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“வில்லங்கமான டைட்டிலாக இருக்கிறதே?”

“ஒரு படத்துக்கு டைட்டில் ரொம்ப முக்கியம். இந்தப் படத்துக்காக 120 டைட்டிலாவது ரெடி பண்ணியிருப்பேன். தயாரிப்பாளரிடம் டெய்லி ஒரு டைட்டில் சொல்லுவேன். அந்த டைட்டிலுக்கு டிசைனும் பண்ணிக் கொடுப்பேன்.படப்பிடிப்புக்கு இரண்டு நாளைக்கு முன்புதான் டைட்டில் ஃபிக்ஸானது.  அந்தவகையில் மொத்த டீமும் டைட்டிலுக்கு என்று ரொம்பவே யோசித்தார்கள். புகழ் பெற்ற பாடல் வரி என்பதால் டைட்டிலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.”

“கதை?”

“2011 ஆம் ஆண்டு இந்தியா டோனி தலைமையில் உலகக் கோப்பை வென்றது. அதே காலகட்டத்தில் அந்தக் கோப்பையை ஐந்து நண்பர்கள் திருடினால் எப்படி இருக்கும் என்பதை சீரியஸாக சொல்லாமல் ஜாலிக்காகவும் ஃபன்னுக்காகவும் சொல்லியிருக்கிறேன். மற்றபடி இது திருட்டை மையப்படுத்திய கதை கிடையாது.

இந்தப் படம் துவங்கும்போதே, திருடுவது எப்படி என்று நாங்கள் சொல்லிக்கொடுக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தோம். படத்தில் காமெடி, திருட்டுக் கும்பல் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல தளங்களில் கதை பயணிக்கும்.”

“ஹீரோ ‘கயல்’சந்திரன்?”

“முதன் முதலாக அவருடைய அண்ணன்தான் கதை கேட்டார். சந்திரனிடன்  கதை சொன்னதும் அவருக்கும் பிடித்திருந்தது. சந்திரன் நாலைந்து படங்களில் நடித்துவிட்டார். அவருடைய முந்தைய படங்களில் சீரியஸ் வேடங்கள் பண்ணியிருப்பார். இதில் அவருடைய கேரக்டர் ஸ்டைலீஷாக இருக்கும். ஐ.டி.யில் இருந்து வெளியே வந்தவராக வருகிறார். ஒரு நடிகனாக அவருக்கு இந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

சண்டைக் காட்சியில் ரிஸ்க் எடுத்தார். கழிவறைக் காட்சியில் முகம் பாதிக்குமளவுக்கு ரிஸ்க் இருந்தது. நான் டூப் போடலாம் என்றாலும் அவர் வலுக்கட்டாயமாக நானே நடிக்கிறேன் என்று ரிஸ்க் எடுத்தார். வளர்ந்து வரும் ஹீரோ அப்படிப் பண்ணியது என்னைச் சிலிர்க்கவைத்தது.”
“நாயகி?”

“சாட்னா டைட்டஸ். திறமையான நடிகை. இந்தப் படத்தில் அவர் ஸ்கோர் பண்ணுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. பாடலுக்கு மட்டும் வந்து
போகாமல் வெயிட்டான் ரோல். கேரக்டர் பெயர் அஞ்சலி. தமிழ் அவருக்கு அந்நிய மொழியாக இருந்தாலும் மொழிப் பிரச்சனையை பிரமாதமாக சமாளித்து நடித்தார். ஃபேஸ் எக்ஸ்பிரஷன் ஒவ்வொன்றும் அசத்தலாக இருக்கும். உலகக் கோப்பையை திருடும் திட்டத்தில் அவருக்கும் முக்கிய பங்கு இருக்கும்.

இது தவிர, சாம்ஸ், டேனி இருவரும் தனி டிராக்கில் அதகளம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் பண்ணும் ஒவ்வொரு வேலையும் சிரிப்புக்கு கியாரன்டி.”“பார்த்திபன் சார் எப்படி?”

“கதையைக் கேட்டதும் சார் மறுப்பு சொல்லாமல் நடிக்க சம்மதித்தார். படத்துல அவருக்கு காட்ஃபாதர் கேரக்டர். அவர்தான் திருடுவதற்கு திட்டம் போட்டுத் தருபவர். கேரக்டர் பெயர் சேது. ஆனால் படத்துல எல்லாரும் சீஃப்னு கூப்பிடுவாங்க. ஆரம்பத்தில் சாரை எப்படி டீல் பண்ணப் போறோம் என்று யோசித்தேன். ஆனால் அதற்கு வேலை இல்லாமல் பண்ணிவிட்டார்.

ஸ்பாட்டுக்கு வரும்போது இயக்குநராக வராமல் நடிகராகத்தான் வருவார். டயலாக் எழுதும்போது அவருக்காக ஓப்பனாக வைத்திருப்பேன். அவர் தன்னுடைய வார்த்தை ஜாலத்தால் வேற லெவலுக்கு கொண்டு போவார். அவர் மட்டும் அப்படி நடிக்காமல் அவருக்குள் இருக்கும் ஸ்பிரிட்டை எல்லாருக்குள்ளும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.”

“இசை?”

“அஷ்வத் மியூசிக் பண்ணியிருக்கிறார்.  என்னுடைய நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஏழெட்டு வருடமாக ஒன்றாக வேலை செய்து இருக்கிறோம். ஏற்கனவே ‘நளனும் நந்தியும்’ பண்ணியிருக்கிறார். என்னுடைய குறும்படங்களுக்கும் மியூசிக் பண்ணியிருக்கிறார். இந்தப் படம் கமிட் பண்ணுவதற்கு முன்பே டியூன் போட்டு வைத்திருந்தோம். பின்னணி இசை பிரமாதமாக இருக்கும்.

‘வில் அம்பு’, ‘விதி மதி உல்டா’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிய மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். வேலையில் கில்லி. முழுப் படத்தையும் டபுள் கால்ஷீட்டில் எடுத்தோம். லைட்டிங் எப்படி ரெடி பண்ணுகிறார் என்று தெரியாது. ஒரு ஷாட் முடிந்ததும் அடுத்த ஷாட் எடுக்க வேண்டும் என்ற என்னுடைய மைண்ட் ஸ்பீடுக்கு ஏற்ற மாதிரி வேகமாக வேலை செய்தார். அவருடைய உற்சாகத்தால்தான் 37 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது. எந்த இடத்திலும் சின்ன படம் மாதிரி தெரியாது. அதுக்கு காரணம் கேமராமேன்.

ஆர்ட் டைரக்டர் ரெமியன் சார் இந்தப் படத்தின் பில்லர்களில் ஒருவர். பெரிய படங்களில் வேலை செய்தவர். இந்தப் படத்துக்காக மியூசியம் செட், ஸ்டேடியம் செட்டை பிரமாதமாக பண்ணிக் கொடுத்தார். மியூசியம் காட்சிக்காக சிலைகளைக் குவித்துத் தள்ளினார். எந்தப் படத்திலும் அப்படி காண்பித்திருக்கமாட்டார்கள்.

நான்கு சண்டைக் காட்சிகள். பெரிய படங்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகளை கம்போஸ் பண்ணியிருக்கிறார் பில்லா ஜெகன்.
‘கயல்’ சந்திரனின் அண்ணன் ரகுநாதன் சார்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். முதலில் வேறு ஒரு கதையைத்தான் அவரிடம் சொன்னேன். அவரைச் சந்தித்த பிறகுதான் அவர் சந்திரனுக்கு கதை கேட்கிறார் என்று தெரியும்.

நான் கொண்டு போன கதை பெரிய ஹீரோவுக்கான கதை. பிறகு  ஆறுமாதம் கழித்து  சந்திரனுக்கு செட்டாகிற மாதிரி  ஒரு கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்திருந்தது. ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்ததால் இந்தப்  படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாகச் செய்து கொடுத்தார். எஸ்.டி.சி பிக்சர்ஸ் ரிலீஸ் பண்ணுகிறார்கள்.”

“உங்களைப் பற்றிச் சொல்லவேயில்லையே?”

“எனக்கு சொந்த ஊர் மதுரை. ஐ.டி.யில் வேலை பார்க்க சென்னை வந்தேன். கடந்த பத்து வருடமாக சென்னையில் இருக்கிறேன். வேலையில் இருக்கும்போது குறும்படங்கள் பண்ண ஆரம்பித்தேன். என்னுடைய குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நம்பிக்கையில் சினிமாவுக்கு போகலாம் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவுக்கு வந்து விட்டேன்.

இந்தப் படத்தில் எந்த இடத்திலும் ரிப்பீட் இருக்காது. எல்லா சீன்களும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். படத்தில் லவ் குறைவாக இருக்கும். ஆனால் விறுவிறுப்பாக இருக்கும். கதைக்குத் தேவையில்லாத எதுவும் இருக்காது. விறுவிறுப்புக்கு தடையாக இருக்கும் விஷயங்களை எடுத்துவிட்டோம். அப்படி சில காதல் காட்சிகளை எடுத்துவிட்டோம். அதற்கு தயாரிப்பாளருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். முதல் பட இயக்குநருக்கு சவாலான படம் என்றார்கள்.

இது பேய் படம் மாதிரி ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை கிடையாது. ஏராளமான லொக்கேஷன்களில் எடுத்திருக்கிறோம். ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பெரிய படங்களில் மட்டுமே சாத்தியமாகும் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். நிச்சயம் இது மக்கள் மனதைத் திருடும் படமாக இருக்கும்.”

- சுரேஷ்ராஜா