ஜப்பானில் சிலம்பாட்டம் பரப்பிய நடிகர்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-46

ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் கெமிஸ்டரி ஒர்க்அவுட் ஆகிற மாதிரி சில ஹீரோக்களுக்கும், வில்லன்களுக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகிவிடும். எம்.ஜி.ஆருக்கு நம்பியார் மாதிரி சில உதாரணங்களைச் சொல்லலாம்.
அது போல ரஜினிக்கு பொருத்தமான வில்லனாக பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்று கணிக்கப்பட்டவர்தான் கராத்தே மணி. காரணம், இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், அந்த ஹீரோ-வில்லன் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

‘அன்புக்கு நான் அடிமை’  படத்தில் ரஜினியும் கராத்தே மணியும் மோதிக் கொள்ளும் காட்சிகள் இப்போதும் இணையத்தில் பிரபலம். அடுத்து நடித்த ‘ரங்கா’ படத்தில் திருடனான கராத்தே மணியும் நல்லவரான ரஜினியும் ஒரு இரவில் சந்திப்பார்கள். அவரவர் தரப்பு வாதத்தை வைப்பார்கள்., மறுநாள் கராத்தே மணி நல்லவராகவும், ரஜினி திருடனாகவும் மாறிவிடுவார்கள்.

ஒரு குழந்தையைக் கடத்த ரஜினி முயற்சிப்பார், அதைத் தடுக்க கராத்தே மணி போராடுவார். இப்படி அடுத்த படத்திலேயே ரஜினிக்கு இணையான ஒரு இடத்தைப் பிடித்தார் மணி. இப்படத்தின் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’ பாட்டு இன்னும் ஹிட்டு.

எம்.ஜி.ஆர், நம்பியார் மாதிரி ரஜினியும், மணியும்  நீண்ட காலத்துக்கு ஹீரோ வில்லன் ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று கணித்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘அஞ்சாத நெஞ்சங்கள்’, ‘விடியும் வரை காத்திரு’,  ‘தங்க கோப்பை’, ‘கோழி கூவுது’ என சில படங்களில் நடித்தார். தன்னுடைய பலம்  ஆக்‌ஷன் என்றாலும், குணச் சித்திர வேடங்களைச் செய்ய மிகவும் விரும்பினார்.

பின்பு சினிமாவை விட்டு விலகி விட்டார்.  மணிக்கு சண்டை போடுகிற அளவிற்கு நடிக்க வரவில்லை, அதனால்தான் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றார்கள். வேறு சிலரோ அவருக்கு சினிமாவை விட கராத்தேவில்தான் அதிக ஆர்வம் இருந்தது; அதனால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்றும் சொன்னார்கள். இந்த இரண்டு விதமான காரணங்களில் எது உண்மையோ, யாருக்கும் தெரியாது.
1944ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கராத்தே மணி.

ஜப்பானின் முன்னணி மாஸ்டர்களிடம் கராத்தே கற்றவர். கராத்தேவின் உயர்ந்த பட்டமான ‘ரென்ஷி’ பட்டத்தை வென்றவர். இந்த பட்டம் வென்றவர்கள்தான் நிஞ்சா வீரர்களாக முடியும்.  1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

ஜப்பானில் கற்ற கராத்தே கலையை இங்கு பரப்பியது போன்று நம் நாட்டு சிலம்பாட்டத்தை ஜப்பானில் பரப்பினார். உலக தற்காப்புக்கலை அறக்கட்டளை அமைப்பில் இந்திய அரசின் பிரதிநிதியாக இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். கராத்தே கலையுடன் நம் நாட்டு சித்த வைத்திய முறையையும் ஜப்பான் நாட்டின் அக்குபஞ்சர் மருத்துவ முறையையும் கற்றிருந்தார். அப்படிப்பட்டவர் தனது 50வது வயதில் இறந்து போனதுதான் காலத்தின் ஆச்சர்யம்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்