என் உயரம் எனக்குத் தெரியும்!துருவா சொல்கிறார்வளர்ந்து வரும் நடிகர் துருவா நடித்துள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இந்தப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகச் சொல்கிறார் துருவா. அவரிடம் பேசினோம்.‘‘இந்தப் படத்தை எடுத்துக்கொண்டால்  ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமான்ஸ்,  காமெடி அனைத்தும் கலந்த ஒரு படமாக இருக்கும்.”“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“நான் வாய் திறந்தால் பொய்தான் சொல்லுவேன். பொய் சொல்வேனே தவிர  கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லிக்  கதாநாயகியிடம் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வேன். நெருங்கிப் பார்த்தால் நாயகியும் ஒரு சிக்கலில் இருப்பார். அந்தச் சிக்கல்களிலிருந்து நாங்கள் இருவரும் எப்படி மீண்டு வெளியே வருகிறோம் என்பதுதான் கதை.”

“ஆரம்பத்திலே ஆக்‌ஷன் அடிதடி என்று ஆட்டத்தை ஆரம்பித்தால் வேலைக்கு ஆகுமா?”

“இது எனக்கு இரண்டாவது படம். ஒரு புதுமுக நாயகன் முழுநீளப் படத்தில் நடிப்பது பற்றிச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அதையும் நியாயப்படுத்துகிற மாதிரி காட்சிகளும் என் பாத்திர சித்தரிப்பும் இருக்கும். அதனால் படம் பார்த்தால் என் பாத்திரம் புரியும். சினிமாவில் என் உயரம் எனக்குத் தெரியும். நான் நீந்தவேண்டிய நீர்நிலையின் ஆழமும் எனக்குத் தெரியும். அந்த வகையில் ஆழம் தெரியாமல் காலை  விடவில்லை. எல்லாம் சரியாகப்  பொருத்தமாக இருக்கிறது. இதைப் படம் பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.”

“இந்துஜா?”

“ரொம்ப எளிமையானவர். இப்போதெல்லாம் கதாநாயகியாக நடித்து வருகிறவர்கள் சினிமாவை ஒரு முறையான தொழிலாக எண்ணித்தான் வருகிறார்கள். எனவே தொழில் ரீதியாக சரியாக இருக்கிறார்கள். அப்படித்தான் இந்துஜாவும். சினிமாவையும் தன் பாத்திரத்தையும் புரிந்துகொண்டு இதில் நடித்திருக்கிறார். ஒரு வளரும் நடிகையாக தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

படித்த, தைரியமான, நகர்ப்புறத்தில் இருக்கும் நவீன பெண்ணாக வருகிறார். எனக்கும் இந்துஜாவுக்கும் படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்கும். ஆனால் எதுவுமே எல்லையைத் தாண்டாமல் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல் இது எல்லாத் தரப்புக்கான படம் என்பதால் எல்லாமே அளவோடுதான் இருக்கும்.”

“வேற யாரெல்லாம் நடிக்கிறார்கள்?”

“என் நண்பனாக ஷாரா நடித்துள்ளார். நானும் அவரும் படம் ஃபுல்லா காமெடியில் கலக்கி இருக்கிறோம்.  தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா வில்லனாக வருகிறார். அவருக்கும் இது நல்ல பெயர் வாங்கித்தரும்.”

“டெக்னீஷியன்கள்?”

“நான் சினிமாவை நேசித்து நல்ல வாய்ப்புக்காகப் போராடி வரும் வளரும் நடிகர். எனக்கு இந்தப் படம் நல்லதொரு வாய்ப்பாகும். அனைவரும் உழைக்கத் தயங்காத குழுவாக  இந்தப்படக் குழு உருவானது. நண்பர்கள் நட்புச் சூழல் நிலவ இந்தப் படம் தொடங்கியது முதல் சாதகமான நல்லெண்ண அலைகளும் எங்களைச் சூழ்ந்து வந்தன.

இயக்குநர்  ஏகே, ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசையமைப்பாளர் திவாகரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முருகன் என்று அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்கள். இப்படப்பிடிப்பின் 55 நாட்களும் நல்ல நட்புச் சூழலில் கழிந்ததை எங்களால்  மறக்கமுடியாது.

மொத்தத்தில் வெகுஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான சிறப்பான படமாக இந்தப் படம்  இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் சொல்வதில் உள்ள நியாயத்தைப் படம் பார்த்து அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.”

“அடுத்து?”

“வாய்ப்புக்காக ஆசைப்பட்டு சுமாரான கதைகளில் நடிக்க  நான் தயாராக இல்லை. என்னை ஆச்சரியமூட்டும் வகையில் கதை அமைந்தால் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன். வாய்ப்பு வந்தால் போதும் என்று  அடுத்தவர் வலிகளில் கைதட்டல் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.”

- சுரேஷ்ராஜா