தில் கிரேன் மனோகர்டைட்டில்ஸ் டாக்-131
 
வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா தில் இருக்கணும் என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் குடும்பம் தில்லான குடும்பம் கிடையாது. நாங்கள் ரொம்ப சாதாரண குடும்பம். ஒருவேளை எங்கள் குடும்பத்தில் தில்லான மனிதர்கள் இருந்திருந்தால் இந்நேரம் சென்னையில் பாதி இடத்தை வளைத்திருப்போம். அப்படியில்லையென்றால் எம்.எல்.ஏ.வாகி இருப்போம் அல்லது குறைந்தபட்சம் வார்டு உறுப்பினராவது ஆகியிருப்போம்.

நான் ஒரு அன்றாடங் காய்ச்சி. பாக்கத்தான் தில்லான ஆள் மாதிரி தெரியும். ஆனால் ஒரு சின்ன மிரட்டலில் ஐயா சாமி... ஆளை விடுங்க... என்று ஓடும் சாமான்ய மனிதன். சொந்த ஊர் சென்னை. அப்பா கொத்தனார். அம்மா நாலு வீட்டுலே பத்துபாத்திரம் தேய்த்தவர். அப்பாவும் சரி, அம்மாவும் சரி மிகவும் எளிமையானவர்கள்.

அப்பா தொழிலுக்காக நாலு இடம் போய் வருவார். அம்மா உலகம் தெரியாத அப்பிராணி. அவர் வாழ்க்கையில் தாம்பரத்தைத் தாண்டியதில்லை. வீடுதான் அவர் உலகம். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். எனக்கு அண்ணன், அக்கா, தம்பி, தங்கை இருக்கிறார்கள்.

மாநகராட்சிப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு எனக்கு சரியா வராத காரணத்தால் நாலாங் கிளாஸோடு படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு அப்பா கூட சேர்ந்து சித்தாள் வேலைக்குப் போவேன். ஒருமுறை மாம்பலத்தில் வேலை. நான் வேலை செய்த சைட் அருகில் ஒரு சினிமா அவுட்டோர் கம்பெனி இருந்தது. அங்கிருந்தவர்கள் என்னுடைய சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு ஆபீஸ் பாய் வேலைக்கு கூப்பிட்டார்கள். அப்படித்தான் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தேன். 1985ல் லைட்மேன் கார்டு எடுத்தேன்.

பதினைந்து வருடம் லைட்மேனாக வண்டி ஓடியது.கே.எஸ்.ரவிக்குமார் சார் இயக்கிய ‘புத்தம் புது பயணம்’ என்ற படத்தில்தான் கிரேன் மனோகர் என்ற அடுத்த பதவிக்கு போனேன். அப்போது நான் ஜெயபாரதி மேடம் நிர்வகித்த அவுட்டோர் நிறுனத்தில் வேலை செய்துவந்தேன். அந்த நிறுவனம் மூலம் ஏராளமான மலையாளப் படங்களில் வேலை பார்க்க முடிந்தது.

அப்படி... மம்மூட்டி, மோகன்லால் என்று பெரிய ஸ்டார்களின் படங்களில் வேலை பார்த்துள்ளேன். எல்லாமே ஹிட் படங்கள். அதே சமயத்தில் கே.எஸ்.ரவிக்குமார் சார் படங்களிலும் வேலை பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில் ஜெயபாரதி மேடத்தோட நிறுவனம் ரவிக்குமார் சார் படங்களில் வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது எனக்குள் தில்லை வரவழைத்துக்கொண்டு ரவிக்குமார் சார் முன்னாடி நின்று ‘வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன்’ என்று என்னுடைய நிலைமையைச் சொன்னேன். சாருக்கு என்னுடைய வேலை பிடிக்கும். அப்போது அவரிடம், ஒரு  கிரேன் இருந்தால் பிழைப்பு ஓடும் என்றும், சம்பாதித்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்றும் கூறினேன்.

என் நிலைமையைப் புரிந்துகொண்ட சார் என்ன விலை வரும் என்று விசாரித்துவிட்டு வரச் சொன்னார். அதன்படி ஒண்ணேகால் லட்சம் விலையுள்ள கிரேனை அவர் செலவில் வாங்கிக் கொடுத்தார். அப்படி ரவிக்குமார் சார் வாங்கிக் கொடுத்த கிரேன் மூலம் ‘புத்தம் புது பயணம்’ படத்தில் கிரேன் ஆபரேட்டராகப் பணிபுரிய ஆரம்பித்தேன்.

பிறகு தொடர்ச்சியாக படங்களில் வேலை செய்து சம்பாதித்த பணத்தைச் சேமித்து ரவிக்குமார் சாரிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரச் சென்றேன். பெரிய மனுஷன் பணத்தை வாங்குவாரா... நான் கொடுத்த பணத்தை அவர் வாங்காமல்,  ‘நீயே வைத்து வேறு சில உபகரணங்களை வாங்கி தொழிலை டெவலப் பண்ணு’ என்று வாழ்த்தி அனுப்பினார். கிரேன் ஆபரேட்டராக ‘பாரதி கண்ணம்’,  ‘பொற்காலம்’ போன்ற ஏராளமான படங்களில் வேலை பார்த்துள்ளேன்.

கிரேன் மனோகராக இருந்த நான் நடிகர் மனோகராக மாறினேன். அதற்கும் காரணமாக இருந்தவர் கே.எஸ்.ரவிக்குமார் சார்தான். ‘முத்துக்  குளிக்க வாரீயளா’ என்ற படத்தில் நடிகனாக அறிமுகம் செய்து வைத்தார். அடுத்து ‘பெரிய குடும்பம்’ படத்திலும் நடிக்க வைத்தார். அதன்பிறகு கே.எஸ்.ரவிக்
குமார் சார் இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக நடித்தேன். ‘ஆதவன்’, ‘படையப்பா’ ஆகிய இரண்டு படங்கள்  தவிர ரவிக்குமார் சார் இயக்கிய ஏராளமான படங்களில் நடித்துள்ளேன்.

சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என்று முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நடித்துள்ளேன். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகிய இருவரின் படங்களில்தான் இன்னும் நடிக்கவில்லை. ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் எவ்வளவு படங்கள் நடித்துள்ளேன் என்று கணக்கு எழுதி வைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. நான் சம்பாதிக்கவில்லை என்பது மட்டும் தெரியும்.

இப்போதும் குடிசை வீட்டில்தான் வசிக்கிறேன். பத்துக்கு இருபது சைஸ்தான் என்னுடைய வீடு. எம்.ஜி.ஆர். ஓட்டு வீடாகக் கொடுத்தார். கலைஞர் அதை ஷீட் போட்ட வீடாக மாற்றிக் கொடுத்தார். என் வீட்டுக்கு சினிமாக்காரர்கள் யாரும் வந்ததில்லை. அன்பான மனைவி. மகன் பத்தாம் வகுப்பும் மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். வீட்டில் நான்தான் எல்லோருக்கும் வழிகாட்டி. எங்கள் வீட்டில் நல்லது கெட்டது என்று எல்லாத்தையும் நான்தான் முன்நின்று நடத்துவேன்.

இப்போது சினிமாவுக்கு நிறையப் பேர் முயற்சி பண்ணுகிறார்கள். சினிமாவில் ஜெயிக்க எதிர்நீச்சல் போடுமளவுக்கு தில் வேண்டும். வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சோர்ந்துபோகக்கூடாது. சினிமா சாதாரணமாக யாருக்கும் எளிதில் கிடைக்காது. தலையெழுத்து முக்கியம். சிலர் நான்கு  வருடம் போராடுகிறேன் என்று சொல்வார்கள். என்னைப் போன்றவர்கள் 35 வருடமாக போராடிக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் நடிக்க அழகு மட்டும் போதாது. இங்கு நிலவும் கடினமான சூழ்நிலையைச் சந்திக்கும் தில் வேண்டும். தில்லாக போராடத் தெரிந்திருக்க வேண்டும். புதுமுகங்கள் மீது இயக்குநர்களுக்கு தில் வரணும். தில்லா வாய்ப்பு தேடுங்கள். இபோது கிரேன் தொழில் பண்ணுவதில்லை. என்னுடைய நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். ஆனால் யாரும் என்னை நினைத்துப் பார்க்கவில்லை. நல்லா இருந்தால் போதும்.

நான் எதையும் தேடிப் போனதில்லை. சினிமா எனக்கு கடவுள் கொடுத்த தொழில். கடவுள் கரை சேர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் ஏழ்மையாக வாழ்பவன். ஆடம்பர வாழ்க்கையை நான் நினைத்துப் பார்க்கவும் மாட்டேன். அதற்கு ஆசைப்படவும் மாட்டேன். இப்போது டூ விலர் வைத்துள்ளேன். அதுவே எனக்கு பெரிய விஷயம்.

சைக்கிள் பயன்படுத்துகிற இந்தக் காலத்தில் நான் பைக் வைத்திருப்பதே பெருமை. இன்னும் என்னுடைய பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்க்கையில் உயர முடியும் என்ற தில் மனதில்  இருக்கிறது.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)