பெருநாளிஅக்கா மகள்களை கரை சேர்க்கும் தாய்மாமன்!

காமெடி நடிகராக ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சிட்டிசன் மணி இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள முதல் படம் இது.பெருநாளி என்ற ஊரைச் சேர்ந்த நாயகன் சிவா, பால் வியாபாரம் செய்து வருகிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக  நினைத்து வளர்க்கும் சிவாவை அதே ஊரில் உள்ள அவரது அத்தை மகளான நாயகி மதுனிக்கா காதலிக்கிறார். ஆனால், அவரது அப்பா குடும்பப் பகை காரணமாக சிவாவுக்கு தனது பெண்ணைக் கொடுக்க மறுக்கிறார்.

இதற்கிடையே, நாயகன் சிவாவின் அக்கா மகள் ஒரு அரசியல்வாதியின் மகனைக் காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பியும் ஒரு அரசியல்வாதியின் மகளைக் காதலிக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளைகளைக் காதலிக்கும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதிகள் வீட்டில் சம்பந்தம் பேச, வில்லன் கார்த்திக் மற்றும் அவரது அப்பா இருவரும் சிவாவை பழிவாங்குவதற்காக சூழ்ச்சி செய்து திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து நாயகன் தனது அக்கா மகள்களின் திருமணத்தை நடத்தி முடித்தாரா இல்லையா, அவருடைய முறைப் பெண்ணைக் கரம் பிடித்தாரா இல்லையா  என்பதே மீதிக்கதை.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் சிவா மற்றும் நாயகி மதுனிக்கா ஆகிய இருவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன்’ கார்த்திக் கவனிக்க வைக்கிறார். காமெடி நடிகர் கிரேன் மனோகர், குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். கிடைத்த வித்தியாசமான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்தோணி, சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

சிசர் மனோகர் மற்றும் அவரது குழுவினரின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன.  இசையமைப்பாளர் தஷி படத்துக்கு பெரிய பலம்.  ஆர்.குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. காமெடி, காதல், ஆக்‌ஷன் என அனைத்தையும் சம அளவில் கொடுத்து தயாரிப்பாளருக்கு மணி வருமளவுக்கு இயக்கியுள்ளார் ‘சிட்டிசன் மணி.