என் காதலி சீன் போடுறாஅண்ணிக்காக பழிவாங்கும் கொழுந்தன்!

நாயகன் மகேஷும், நாயகி ஷாலுவும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். மகேஷ் , ஷாலுவை காதலிக்கிறார். ஆரம்பத்தில் ஓவராக சீன் போடும் ஷாலு, பிறகு மகேஷை ஓவராக காதலிக்கவும் தொடங்குகிறார். இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியான மகேஷின் அண்ணனை, மற்றொரு போலீஸ் அதிகாரியான கோகுல் பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையே சில மர்ம நபர்கள் மகேஷின் அண்ணியைக் கொலை செய்ய, அவர்களைக் கண்டுபிடித்து பழிவாங்குவதற்காக காதலியைப் பிரிகிறார் மகேஷ்.தனது அண்ணியைக் கொலை செய்தது யார்  என்பதை மகேஷால் கண்டுபிடிக்க முடிந்ததா  அவரது காதல் கைகூடியதா, மகேஷின் அண்ணனுக்கும், கோகுலுக்கும் இடையே என்ன பிரச்சினை  என்பது மீதிக்கதை.

படத்தின் டைட்டிலைப் பார்த்தால், முழுக்க முழுக்க காதலைப் பற்றியும், காதலிகள் போடும் சீன்களைப் பற்றியும் படம் பேசப்போகிறது என்று தெரியும்  ஆனால், காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்ட இயக்குநர் ராம் சேவா, திரைக்கதையை சமூக விழிப்புணர்வுடன் எழுதியிருக்கிறார்.நாயகன் மகேஷ் தனக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

நாயகி ஷாலு கதைக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.வில்லனா, நல்லவனா என்று தெரியாத வகையில் வரும் கோகுலின் கதாபாத்திரம் திருப்புமுனை. அவரது ஃபிளாஷ்பேக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. அவரும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், மனோபாலா என்று அனைவரும் தங்களது வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

அம்ரிஷின் இசையும், வெங்கட்டின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கின்றன.பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், எப்படிப்பட்டவர்களுடன் பழகுகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்... அலட்சியமாக இருந்தால் அவர்களது வாழ்க்கை எப்படி தடம் மாறும் என்பதை இயக்குநர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் விதத்தில் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் ராம் சேவா.
மொத்தத்தில், ‘என் காதலி சீன் போடுறா’ வெறும் காதலியைப் பற்றி மட்டும் பேசாமல், சமூகத்தைப் பற்றியும் பேசியிருக்கிறது.