சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்!



ஹெல்த் காலண்டர்

உலக இதய தினம் செப்டம்பர் 29


இதய நோய்களால் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் மரணமடைகின்றனர். இந்தியாவில் மட்டும் 26 சதவிகிதம் பேர் இதய நோய்களால் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம். அதனால் உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளை அவ்வப்போது முறையாக பரிசோதனை செய்து அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியம்.

அதிக எடை கொண்டவர்கள் கொழுப்பைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும். யோகா, தியானம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். சரியான உணவு, உடற்பயிற்சி, பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணர்வினை அனைவரிடமும் ஏற்படுத்துவதன் மூலம் இதய நோயைக் கட்டுப்படுத்தலாம். 

புகை மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் 30 சதவிகிதம் இதய நோய்களுக்கான ஆபத்தைக் குறைக்க முடியும்.

உலக அல்சைமர் தினம் செப்டம்பர் 21முதியவர்களிடம் அதிகரித்து வரும் அல்சைமர் நோயால் மூளையின் உயிரணுக்கள் சிதைவடைந்து ஞாபக மறதி, நினைவாற்றலில் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அல்சைமரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உறவினர்களின் பெயர்கள், முகவரிகள், சாலைகளின் பெயர்களையும்கூட மறந்து விடுவார்கள்.

மனநிலை மாற்றங்கள், சமீபத்திய தகவலை மறந்துபோதல், பழக்கப்பட்ட வேலைகளை முடிப்பதில் சிரமம், நேரம் மற்றும் இடங்கள் சார்ந்த குழப்பம், தேதி மற்றும் நேரத்தை மறந்து போதல், சமூகம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பது போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. இந்த நோய் தீவிரமான நிலையில் அன்றாட செயல்களையும், அடிப்படை கடமைகளையும் ஆற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

புத்தகங்கள் வாசித்தல், மகிழ்ச்சிக்காக எழுதுதல், இசைக்கருவிகள் இசைத்தல், குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுதல், நீச்சல், நடை, யோகா மற்றும் தியானப் பயிற்சிகளி–்ல் ஈடுபடுதல், பந்துவீசுதல் போன்ற பிற குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவது அல்சைமரிலிருந்து பாதுகாக்கும்.

அல்சைமரை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் நோயாளிக்குப் பலன்தரும் வகையில் சிகிச்சை அளிக்க முடியும். மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளோடு  இதுபோன்ற பாதிப்பு உடையவர்களுக்கு குடும்பம் மற்றும் சமுதாயத்தின் ஆதரவும் மிகமிக அவசியம்.

உலகக் காது கேளாதோர் தினம் செப்டம்பர் 24உலகளவில் காது கேளாதவர்களின் எண்ணிக்கை 36 கோடியாக உள்ளது. மேலும் பிறக்கிற 1000 குழந்தைகளில் 5 குழந்தைகள், குழந்தைப் பருவத்திலேயே செவித்திறன் இழப்போடு அல்லது இழக்கக்கூடிய சாத்தியக்கூறோடு பிறக்கின்றன.

ஒருவர் பேசும்போது அல்லது ஏதேனும் ஒரு வகை சத்தத்தைக் கேட்டு ஒருவர் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது, பிறரை சத்தமாக பேசச் சொல்வது, நாம் சொல்வதைத் திரும்பத்திரும்ப கேட்பது போன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு காது கேட்பதில் ஏதாவது பிரச்னை இருக்கலாம்.

காது மெழுகு, ரத்தம் அல்லது சீழ் போன்றவை காதில் இருந்து வெளிவருவதை காதில் நீர் வடிதல் என்று சொல்கிறோம். இப்படி காதிலிருந்து நீர் வடியும்போது, காதில் எண்ணெய், நீர் போன்ற எந்த திரவத்தையும் ஊற்றக் கூடாது. ஏனெனில், காது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் தன்மையுடையது.

பிரத்யேகமாக நாம் அதை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. வெளிப்புறத்தில் சுத்தம் செய்வது மட்டுமே போதுமானது. காதிலிருந்து ரத்தம் வடிதல் மற்றும் அதிக துர்நாற்றம் வீசுவது போன்றவை கடுமையான நோயின் அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்ட
உடனேயே மருத்துவரை அணுகுவது நல்லது.

அதிக சத்தத்தோடு, நீண்ட நேரம் இசையைக் கேட்பதால் காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, தொலைக்காட்சி, ஸ்டீரியோ, ஹெட்செட் போன்றவற்றின் ஒலியைக் குறைத்து பயன்படுத்த வேண்டும்.

உலக வெறிநாய்க்கடி நோய் தினம் செப்டம்பர் 28வெறிநாய்க்கடி என்கிற ஆபத்தான நோய், நாய் அல்லது பிற விலங்குகளால் உண்டாகிறது. இதுபோன்ற விலங்குகளால் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூளை பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கானோர் இந்த நோயால் மரணமடைகின்றனர்.

அதிகமாக நாய்க்கடிக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கே, தொற்று ஏற்படும் ஆபத்தும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற ஒவ்வொரு 10 மரணங்களிலும் 4 மரணங்கள் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே ஏற்படுகின்றன.

இந்த நோய் ஏற்படுவதற்கு Lyssa Virus காரணமாக உள்ளது. காயம், கீறல் அல்லது பாதிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் சளிச்சவ்வுப் பரப்போடு நிகழும் தொடர்பால், அதாவது மிருகங்களின் கடியால் இந்த வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ் மூளைக்கு சென்ற பின்னர் ஏற்படும் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரிடம் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது என்றாலும் தடுப்பூசியால் 100 சதவிகிதம் தடுக்கக் கூடியதே.

காயத்தில் வலி அல்லது அரிப்பு, காய்ச்சல், 2 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கும் தலைவலி, தண்ணீரைக் கண்டு அஞ்சுதல், பிரகாசமான ஒளி அல்லது சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமை, சித்தப்பிரமை, நடத்தை மாற்றம் போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

விலங்குகள் கடித்தோ அல்லது பிராண்டியோ ஏற்பட்ட காயத்தைப் 10 முதல் 15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும். 70 % ஆல்கஹால் அல்லது எத்தனால் அல்லது பொவிடோன் அயோடின் பயன்படுத்தியும் காயத்தைக் கழுவலாம்.

அதன் பிறகு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நாய் போன்ற ஏதாவது பிற விலங்குகள் கடித்து விட்டால், தடுப்பூசி போடுவதற்கு உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய்க்குத் தடுப்பூசி போடுவது நாய்க்கும் நல்லது; உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

- தொகுப்பு: க.கதிரவன்