அடிபற்றி அகமகிழ்வோம்!



இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

‘அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ - இந்தப் பழமொழி நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான் என்ற போதிலும் அனைவருமே தவறான முறையில்தான் அர்த்தம் புரிந்துகொண்டிருக்கிறோம்.அதாவது ‘சமாதானமாகப் பேசிப் பயன் இல்லை. இரண்டு அடி கொடுத்தால் அவன் சரிப்பட்டு வருவான்’ - இந்த முறையில்தான் அந்தப் பழமொழியை நாம் உபயோக்கிறோம். ஆனால் பெரியவர்கள் அப்பழமொழி மூலம் நமக்கு எதை உணர்த்தினார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி உறவுகள் எல்லாம் ஓர் எல்லைவரைதான். மனிதர்களாகிய நமக்கு மேலான துணையாக கடைசிவரை அமைவது இறைவனின் அடிமலர்கள்தான். ஆகவே தெய்வத் திருவடிகளை ‘சிக்’கெனப் பற்றிக்கொள்வதே சிறந்தது. எனவேதான் ‘அபிராமி என்றன் விழுத்துணையே! என்று அபிராமி பட்டர் பாடுகின்றார். இறைவனைத் தவிர பிற துணைகள் எல்லாம் விழுந்துவிடும். மானிட உயிர் பற்றிக்கொள்ள வேண்டிய மகத்தான துணை தெய்வத்தின் திருவடிக்கமலங்களே ஆகும்.வள்ளுவர் இதனை அழுத்தம் திருத்தமாக முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே மீண்டும் மீண்டும் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றார்:

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது
கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
தாளை வணங்காத் தலை
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

வள்ளுவரைப் போலவே மாணிக்கவாசகரும் அடிக்கு அடி தான் பாடிய சிவபுராணத்தில் இறைவனின் திருவடியைப் போற்றியிருக்கிறார்.சிவபெருமானின் ஆலயங்களில் பிரதோஷ நன்னாளன்று கூடியிருக்கும் அன்பர்கள் ஒரே குரலில் உற்சாகமாகப் பாடும் ‘நமச்சிவாய வாழ்க!’ என்ற பாடலை உற்றுக் கவனித்தால் இந்த சூட்சுமம் நமக்கு விளங்கும். பாடலைப் பார்க்கலாமா?

நமச் சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!
வேகம்கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க!
ஈசன் அடி போற்றி! எந்ைத அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

வாசகர் இவ்வாறு வரிக்கு வரி ஆண்டவனின் அடிமலர்களைப் போற்றுகிறார். மேலும் இத்திருவாசகத்தை அவன் அருளாலே அவன்தாள் வணங்கி நான் பாடும் பேறு பெற்றேன் என்றும் மொழிகிறார். இப்போது விளங்குகிறதல்லவா, ‘அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள்?

மீண்டும் பிறப்பு வேண்டும்!


திருக்குற்றாலத்தில் எழுந்தருளி பக்தர்களை காத்தருள்பவர் திருகூடப்பெருமான். அச்சிவபிரானின் சந்நதிக்கு கவிராஜ பண்டாரத்தையா என்னும் புலவர் சென்றார். புலவர் அவ்விறைவனிடம் வைத்த  வேண்டுகோள் புதுமையானது. கவிரசம் ததும்பும் அந்த விண்ணப்பம் என்ன தெரியுமா?‘திரி கூடப்பெருமானே! உன் தேவி பார்வதிக்கு அன்புடன் உன் அங்கத்திலேயே சரிபாதி அளித்துவிட்டாய். நான் ஏழைப் புலவன். அந்த அளவுக்கு உன்னிடம் உரிமை கோர மாட்டேன். எனக்கு பாதியில் பாதி தந்தால் அது போதும்!’‘பாதியில் பாதி’ என்று புதிராக புலவர் கேட்பது என்ன தெரியுமா? கணக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் கட்டாயம் விடையைக் கண்டுபிடித்து விடலாம்.ஒன்றில் அரைபாகம் பாதி, பாதியில் சரிபாதி கால்!எனவே உன்றன் திருவடிப்பேறான காலைக் காட்டி என்னை ஆட்கொள்வாய் என்பது தான் புலவரின் வேண்டுகோள்.  இலக்கியத்தேன் சுரக்கும் கவிராஜ பண்டாரத்தையாவின் வேண்டுகோள் வெண்பா இதுதான்:

அருவித் திரிகூடத் தையா உனைநான்
மருவிப் பிரிந்திருக்க மாட்டேன் - இறைவிக்கு
ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டாம் எனக்குப்
பாதியிலே பாதிதந்து பார்!

கடற்கரையில் விரிந்து பரந்திருக்கும் வெண்மணல் எவ்வளவு என்றுகூட எண்ணிக் கணக்கிட்டு விடலாம். ஆனால் ஒரு மனிதனின் பிறப்பு எவ்வளவு என்று கூறிவிட முடியாது என்கின்றனர் ஞானிகள்.

‘புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுர ராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்ற இத்தார சங்கமித்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
- என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

‘ஏழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்’ என்று கூறுகின்றார் அருணகிரி நாதர்.அருளாளர்கள் அனைவருமே ‘‘இந்தப் பிறப்பே என் இறுதிப் பிறப்பாக இருக்க வேண்டும் இறைவா!’ என்றே ஒட்டு மொத்தமாக ஓங்கிக் குரல் எழுப்புகின்றனர்.திருவள்ளுவர் நாம் இறைவனிடம் கேட்கும் வரம் பிறவாமையாகவே அமைய ேவண்டும் என்கிறார். ‘‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை’ என்கிறது குறள். பெயர் தெரியாத புலவர் ஒருவர் ‘வீடு பேறு எனக்குத்தான்! வேண்டாம் இவ்வுடம்பு’ என்று புதிர்போல ஒரு பாடல் பாடி சுவாமி மலை முருகனை வேண்டுகிறார்:

வெங்காயம் சுக்கானால்
   வெந்தயத்தால் ஆவ தென்ன?
இங்கார் சுமந்திருப்பார்
   இச் சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல்
   வேண்டன் பெருங்காயம்.
ஓரகத்துச் செட்டியாரே!

நகரத்தார்கள் விரும்பி வழிபடும் வடிவேலவனை ‘செட்டியார்’ என்றே புலவர்கள் அழைக்கின்ற மரபு ஒன்றுண்டு. எனவே சுவாமிமலை முருகரை ஒரு  பலசரக்குக் கடை வைத்திருப்பவராகவே பாவித்து ‘வெப்பமான இந்த மானுட தேகம் சுக்குபோல காய்ந்துவிட்டால் மீதமிருக்கும் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது? (வெங்காயம்: வெப்பமான இத்தேகம், வெந்தயம் - எரிந்தபின் எஞ்சும் சாம்பல்) ஆகவே சிறந்த வீடு பேறு என்னும் சீர் அகம் தருக. இந்த மிகையான உடம்பு என்னும் பெருங்காயம் எனக்கு வேண்டாம் என்கிறார்.

மளிகைப் பொருட்களை வைத்தே மகத்தான உண்மையை விளக்கிய மாபெரும் பாடல் இது.அனைத்து கவிஞானியரின் வேண்டுகோளும் மீண்டும் பிறப்பு வேண்டாம் என்றிருக்க, திருநாவுக்கரசர் மட்டும் வித்தியாசமாக ஒரு புதிய கோணத்தில் தன் கருத்தைப் புலப்படுத்துகிறார்.‘மனிதப் பிறவி பெற்றதால்தானே தில்லை நடராஜரைத் தரிசிக்க முடிந்தது? சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை அனுபவிக்க இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.‘மெய் ஞான தெய்வத்தை... சென்று கண்டு தொழ, நாலாயிரம் கண் படைத்திலனே! அந்த நான்முகனே!’ என்று அருணகிரிநாதர் அதிசயித்துப் பாடியதைப் போல, நாவுக்கரசரான அப்பரடிகளும் ‘மனிதப்பிறவி மீண்டும் வேண்டும். சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க!’ என்கிறார்:

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற்
   குமிண் சிரிப்பும்
பணித்த சடையும், பவளம்போல் மேனியிற்
   பால் வெண் நீறும்
இனித்த முடைய எடுத்தப் பொற் பாதமும்
   காணப் பெற்றால்
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த
   மா நிலத்தே!

(இனிக்கும்)