பிரசாதங்கள்



சந்திரலேகா ராமமூர்த்தி

பாம்பே ரவை களி


என்னென்ன தேவை?


பாம்பே ரவை, பொடித்த வெல்லம் - தலா 1 கப், வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப், நெய் - 1/4 கப் + எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 கப், அலங்கரிக்க பாதாம் - 6.

எப்படிச் செய்வது?


வெல்லத்துடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்து கொதித்து வந்ததும் இறக்கி வடிகட்டவும். கடாயில் எண்ணெய் + நெய் சேர்த்து சூடானதும் முந்திரியை லேசாக வறுத்து, அதனுடன் ரவையை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து, தேங்காய்த்துருவலையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.மற்றொரு கடாயில் 2½ கப் தண்ணீரை சேர்த்து கொதித்ததும் மிதமான தீயில் வைத்து அதில் வறுத்த ரவை, தேங்காய்த்துருவல் கலவையை கொட்டி நன்கு கிளறி வேகவிடவும். பிறகு வெல்லப்பாகு, வெந்த பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி, நறுக்கிய பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: அரிசி ரவையிலும் செய்யலாம்.

ஜவ்வரிசி தயிர் வடை


என்னென்ன தேவை?


நைலான் ஜவ்வரிசி - 100 கிராம், உளுந்து - 1/2 கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1, நறுக்கிய பச்சைமிளகாய் - 2, நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி, துருவிய இஞ்சி, கேரட் - சிறிது, பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, கடைந்த கெட்டித்தயிர் - 2 கப், சர்க்கரை, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?


ஜவ்வரிசியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து பிறகு பிழிந்து கொள்ளவும். உளுந்தை 20 நிமிடம் ஊறவைத்து வடித்து உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனுடன் ஜவ்வரிசி, மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி சேர்த்து கலந்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வடித்து வைக்கவும்.தயிர் வடை செய்ய: தயிரில் சர்க்கரை, சிறிது உப்பு கலந்து கொள்ளவும். தட்டில் வடைகளை அடுக்கி அதன் மீது தயிர் கலவையை ஊற்றி மல்லித்தழை, கேரட் துருவல், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சிறிது குளிரவைத்து பரிமாறவும்.

நாவற்பழ ஜூஸ்

என்னென்ன தேவை?

நாவற்பழம் - 250 கிராம், தண்ணீர் - 2 டம்ளர், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள், வறுத்து பொடித்த சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் நாவற்பழத்தை போட்டு 2 கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். பின்பு பழத்தை கைகளால் பிசைந்து அதில் உள்ள சதையை எடுத்து தண்ணீருடன் சேர்த்து மிக்சியில் அரைத்து, அதனுடன் சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து மேலே சாட் மசாலாத்தூள் தூவி குளிரவைத்து பரிமாறவும்.இனிப்பு ஜூஸ் செய்ய: நாவற்பழத்தை வேகவைத்தோ அல்லது ஃப்ரெஷ்ஷாகவோ கரைத்து வடித்து தேன், உப்பு சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.

வெள்ளரிக்காய் அடை

என்னென்ன தேவை?


வெள்ளரிக்காய் துருவல் - 2 கப், பச்சரிசி - 1 கப், துவரம்பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1/4 கப், காய்ந்தமிளகாய் - 10, பெருங்காயத்தூள் - சிறிது, புளி, வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு, சீரகம் - 1 டீஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1/4 கப், நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை சுத்தம் செய்து தண்ணீரில் தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி, பருப்பு, காய்ந்தமிளகாய், உப்பு, புளி, வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, சீரகம், சின்னவெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த மாவு கலவையில் கொட்டி கலக்கவும். அதே கடாயில் வெள்ளரித்துருவலை சிறிது வதக்கி அதே மாவுக் கலவையில் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து முறுவலாக வந்ததும் எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.

சப்போட்டா டிலைட்


என்னென்ன தேவை?


பால் - 2 லிட்டர், நன்கு பழுத்த சப்போட்டா பழம் - 6, பிஸ்தா, பாதாம் - தலா 10, கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின், ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


சப்போட்டா பழத்தை தோல், விதை நீக்கி கூழாக்கவும். அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி பாதியாக வந்ததும் கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள், சப்போட்டா கூழ் சேர்த்து கிளறி உடனே இறக்கவும். மேலே பொடியாக நறுக்கிய சப்போட்டா துண்டுகள், பிஸ்தா, பாதாம் தூவி அப்படியே அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

சப்போட்டா ஜூஸ் :


சப்போட்டா - 6, பால் - 1/2 கப், தேன் - தேவைக்கு.
சப்போட்டா பழத்தை தோல், விதை நீக்கி பால், தேன் சேர்த்து மிக்சியில் அரைத்து குளிரவைத்து பரிமாறவும்.

வெள்ளை பூசணிக்காய் முரப்பா


என்னென்ன தேவை?

வெள்ளை பூசணிக்காய் - 1 கிலோ, படிகாரம் - 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 1 லிட்டர்.
பாகு செய்ய - சர்க்கரை - 1½ கிலோ, தண்ணீர் - 1 லிட்டர், ஏலக்காய்த்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?


பூசணிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி படிகாரத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு நீரை வடித்து சுத்தமானத் துணியால் துடைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரைந்து கொதித்து வந்ததும் பூசணித்துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நடுநடுவே கிளறி பூசணிக்காய் நன்கு வெந்து தேன் போல கெட்டியாக வந்ததும் இறக்கி அப்படியே ஒரு நாள் முழுக்க இருக்க விடவும். பின் தனித்தனியாக தட்டில் அடுக்கி ஸ்டோர் செய்யவும்.முரப்பாவாக வேண்டுமென்றால் பூசணித்துண்டுகளை பாகு சிறிது முறியும்போது எடுக்கவும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்