மரகதமாய் மின்னும் மகாதேவன்!



உத்திரகோசமங்கை

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உள்ளது. அங்கு மரைக்காயர் என்ற பெயர்கொண்ட ஒரு மீனவர், மிகுந்த வறுமையுடன் வாழ்ந்துவந்தார். ஆனாலும், அருகில் கோயில் கொண்டிருக்கும் மங்களேஸ்வரரை நம்பிக்கையுடன் தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப் படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்தவர் அவர்.ஒருசமயம் அவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்துச் செல்லப்பட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்றது. படகு மோதிய வேகத்தில் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது.

படகினுள் ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக விழுந்த சில விநாடிகளில் அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும், மழையும் சட்டென்று நின்று விட்டது. படகுக்குள் நிலைகுலைந்து போயிருந்த மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டார். திரும்ப மண்டபம் நோக்கிப் பயணிக்கலாமென்று பார்த்தால் எப்படிப் போவது என்றே புரியவில்லை. திக்கு, திசை தெரியவில்லை.மங்களேஸ்வரரை உளமாற துதித்து படகை செலுத்த ஆரம்பித்தார். அங்குமிங்குமாகத் திரிந்தலைந்து பலநாள் கழித்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவரவில்லையே என்று கவலையோடு கரையிலேயே காத்திருந்த அவரது குடும்பம் அவரைப் பார்த்தபின்புதான் நிம்மதி அடைந்தது.

படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்தக் கல்லை மிதித்தபடி வீட்டிற்குள்ளும், வெளியிலுமாக நபர்கள் போகவர, மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று பச்சை வண்ணத்தில் பாறை மின்னியது!மங்களேஸ்வரர், தன் வறுமையை நீக்க அளித்த பரிசு அது என்பதை உணர்ந்த மரைக்காயர், மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் பரிசுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். நடந்த அனைத்தையும் விவரித்து, தன் வீட்டில் அந்தக் கல் இருப்பதைச் சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் தெரிந்திருந்த ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார். சற்று நேரத்தில், ‘இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது,’ என்று வியந்து சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பொற்காசுகளை அளித்தார்
 
இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலையை வடிக்க வேண்டும் என்று மன்னர் விரும்பினார். அப்படி செதுக்கிக் கொடுக்கத் தகுதியான ஒரு சிற்பியைப் பல இடங்களில் தேடி, கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் ரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது.அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை பார்த்த உடன் மயக்கமே வந்துவிட்டது ரத்தின சபாபதிக்கு. ‘என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது மன்னா,’ என்று கூறிவிட்டு இலங்கைக்குத் திரும்பிவிட்டார்.

மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சந்நதி முன் நின்று பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘நான் மரகத நடராஜர் சிலையை வடித்து தருகிறேன் மன்னா,’ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி மன்னர், மக்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.அங்கே சித்தர் சண்முக வடிவேலர் நின்றிருந்தார். மன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். மரகத நடராஜர் சிலையை வடிக்கும் முழு பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தான், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தான்.

அந்த பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜர், ஒன்றரை அடி உயர பீடத்தில் ராஜ கோலத்தில் அற்புதமாக உருவானார். மிகவும் நுணுக்கமாக சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட அற்புதமான சிலை அது. ஆமாம், நடராஜரின் திருக்கரங்களில் நரம்பு புடைத்துத் தெரியும்! அவருக்குச் செய்யப்படும் பால் அபிஷேகத்தின்போது இதனைத் துல்லியமாகக் காணலாம். சித்தர் ஷண்முக வடிவேலரை அன்று மட்டுமல்ல, இன்றும் அனைவரும் பாராட்டி மகிழ்கிறார்கள். பின்னர் மரகத நடராஜரை பிரதிஷ்டை செய்து ஆலயம் உருவாக்கினான் மன்னன். அடுத்தடுத்து அன்னியர் பலர் படையெடுத்தபோதும் அற்புத பொக்கிஷமான இந்த நடராஜர் யாராலும் களவாடப்படாமல் அருள் ஒளி பெருக்கி பக்தர்களைக் காத்துவருகிறார். அவ்வாறு அவர் களவாடப்பட முடியாததற்குக் காரணம், அவரை எப்போதும் சந்தனக் காப்பிலேயே வைத்திருந்ததுதான்.

அந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால், ஆனித் திருமஞ்சன நாளில், அதாவது ஆருத்ரா தரிசன நாளன்றுதான் இந்த மரகத நடராஜரை, சந்தனக் காப்பின்றி அப்படியே ஒரிஜினலாக தரிசிக்க முடியும். இந்த ஆனித் திருமஞ்சனத் திருநாளன்று  (20.06.2018) இந்த மரகத நடராஜரை தரிசித்துப் பேரருள் பெறுவோம்.உத்தரகோசமங்கை திருத்தலம், ராமனாதபுரத்துக்கு தென்மேற்கே 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

தொகுப்பு: இரா.வளையாபதி
தோட்டக்குறிச்சி