மன வயலை ஆழ உழும் அற்புதக் கலப்பைகள்!



மன இருள் அகற்றும் ஞானஒளி 42

களங்கனி வண்ணா கண்ணனே என்தன் கார்முகிலே என நினைந்திட்டு
உளங்கனிந்திருக்கும் அடியார் உள்ளத்துள் ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே
வளங்கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே!
(திருமங்கையாழ்வார்)

இந்தத் தேன் தமிழ்ப் பாசுரத்தில் இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை, உருக்கத்தை மிக இயல்பாகப் படைத்து நமக்கு வழங்குகிறார், நம் பரகாலனான திருமங்கையாழ்வார். உளங்கனிந்திருக்கும் அடியவர் உள்ளத்துள் ஊறிய தேன் - உள்ளத்துள் ஊறிய தேன் போன்றவன் எம்பெருமான் என்கிறார்.இதில் பல உள்ளார்ந்த விஷயங்கள் இருக்கின்றன. தேன் தானும் கெடாது, தன்னில் சேர்கிற பொருளையும் கெடாது பார்த்துக் கொள்ளும். அதைப்போல இறைவன் தன்னை சரணடைந்தவர்களை எப்பொழுதும் காப்பாற்றுவான் என்பது ஒரு கருத்து.மற்றொன்று, தேனில் இடப்படுகிற பொருள் நாளாக ஆக சுவை கூடிக்கொண்டே போகும். அதைப் போல இறைவனுடைய சிந்தனைகளை சதா சர்வகாலம் நம் மனதின் அடி ஆழத்தில் பதிய வைத்தால் நாம் முன்னம் செய்த, இப்போது தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டு இருக்கிற பாவங்கள், தீவினைகள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிப் போய் விடும்.

அவன் எப்படிப்பட்ட பெருமானாம்? சீர்காழிக்குப் பக்கத்தில் இருக்கிற திருநாங்கூர் திருத்தலத்தில் நடுநாயகமாக இருந்து கொண்டு அருள்பாலிக்கிற அந்த செம்பொன் அரங்கர், தன்னை நாடி வருகிற பக்தர்களுக்கு அருளை மழையாகத் தருகிறவனாம். அதனால்தான் பேரின்பம் தருகிறவன் என்ற, சந்தோஷத்தைக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் திருமங்கை ஆழ்வார்!இந்தப் பாசுரத்தில் நம்பிக்கை விதையை அனாயசமாகத் தூவியிருக்கிறார்  ஆழ்வார்! அவனைச் சரணடைந்தால் ஆகாதது ஒன்றுமில்லை. மூன்று உலகங்களுக்கும் நாதன் அவன். அதனால்தான் இந்தப் பாசுரத்தை முடிக்கும்போது ‘வணங்கி நான் வாழ்த்தெழிந்தேனே’ என்று சுபமாய் முடிக்கிறார்!திருமங்கை ஆழ்வார் இவ்வாறு, செம்பொன் அரங்கனை சிந்தை முழுவதும் நினைத்து கண்ணீர் மல்க பாசுரம் படைத்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளோ,  ‘என்னால் உன்னை இன்னும் நினைக்க முடியவில்லை. என் உள் மனம் உன்னை நினைப்பதற்குள் எத்தனை எத்தனை இடையூறுகள்? கர்ம வினைகளால் சூழப்பட்ட எனக்கு அதிலிருந்து விடுபட வழிகள் ஏதும் இல்லையா?  என்று கேட்கிறார். உடனே அவர் மனம் திருவாரூர் தியாகராஜரிடம் குடிகொண்டு விட்டது. தன் மன உணர்வுகளை அற்புத தேவாரப் பாடலாக வடித்தெடுத்தார்:

‘‘அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே?’’

ஒரு நாளில், காலை - மாலை இருவேளைகளிலும் அஞ்சுபதம் ஐந்தெழுத்தாகிய நமசிவாய நாமத்தை இடையறாது சொல்ல வேண்டும். அந்த திருநாமத்தை மனதில் ஏந்தியபடியே திருவாரூரில் அரசனாக அருள்பாலிக்கும் தியாகேசப் பெருமானை தரிசிக்கும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.சைவ சமயத்தில் திருவாரூருக்கு இருக்கும் பெருமைகளும் சிறப்பும் மிகவும் மேன்மைக்குரியவை. அந்த கமலாலயக் குளத்தையும், எதிரே அமைந்துள்ள ஆரூரானையும் தரிசிக்க ஆயிரம் கண் போதாதே!

‘‘திருவினார் ஓர் பாகம் சேர்வதற்கு
முன்போ, பின்போ
தில்லை அம்பலத்தாடுவான் புகுவதற்கு
முன்போ, பின்போ
திசை எட்டும் தெறிப்பதற்கு
முன்போ, பின்போ
திருவாரூர்க் கோயிலாக கொண்ட நாளே!’’

‘‘உன் பழமையை என்னவென்று சொல்வது! உமையம்மையான பராசக்தி உன்னுடன் சேர்வதற்கு முன்பாகவா அல்லது பூலோக கைலாசம் என்றழக்கப்படுகிற தில்லையம்பலமாகிய சிதம்பரத்திற்கு நடராஜர் வருவதற்கு முன்பாகவா, இந்த உலகம் தோன்றி பிறகு எட்டுத் திசைகளும் தோன்றுவதற்கு முன்பாகவா எப்போது திருவாரூரில் நீ வந்து அமர்ந்தாயோ?’’ என்று கேட்கிறார். இந்தப் பாடல் திருவாரூர்க் கோயிலின் அதி அற்புதத்தையும், அதன் பழமையையும் புனிதத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது!எத்தனை மகான்கள், எத்தனை ரிஷிகள், நாயன்மார்கள் தங்களின் ஆன்மாவை இறக்கி வைத்த இடம் இந்த திருவாரூர் ஸ்தலம்! சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மூச்சுக்காற்று உலவுகிற மண் இந்த மண்!திருமங்கையாழ்வாரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவர்கள் மட்டும் இறைவனை மனதாற வணங்கவில்லை. நம்மையும் உடன் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்கள்!

இன்றைய சமூக வாழ்வில் எத்தனையோ தடைகள், துயரங்கள் இவற்றையெல்லாம் இறக்கி வைப்பதற்கு திருக்கோயிலைத் தவிர வேறெங்கே போகமுடியும்?நிம்மதி தரும் சந்நதிதான் மனதிற்கு அமைதி தரும். ஆகச் சிறந்த இடமான திருக்கோயிலும், தேவாரமும், திவ்யப்பிரபந்தமும்தான் நம்மை என்றும் நல்வழிப்படுத்தும் கருவிகள். தேவாரமும் திவ்யபிரபந்த பாசுரங்களும் வெறும் பக்தி நூல்கள் இல்லை. மாறாக நம் மன வயலை ஆழ உழும் அற்புதக் கலப்பைகள். மன மாசு தீருவதற்கும் நல்ல அன்பும் அருளும் கிடைப்பதற்கும் வழிசெய்யும் அற்புதச் சாதனங்கள். நம்மை நல்வழிப்படுத்தும் நாயகர்கள்.திருமங்கையாழ்வார் காட்டிய திருநாங்கூருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுட்டிக்காட்டிய திருவாரூருக்கும் சென்று இறைவனை வணங்கி பாசுரங்களையும், தேவார பதிகத்தையும் படித்து வாழ்வில் மேன்மை அடைவோம்.

(தொடரும்)