நிமலன் வாக்கு கேட்டு நீரால் விளக்கு எரித்த நமிநந்தி!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

அசலேசம் (ஆரூர்)

சிவஞானசெம்மல் கண்டராதித்த சோழரின் மனைவியாரும், மதுராந்தக உத்தமசோழரின் தாயாரும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெரிய பாட்டியுமான செம்பியன் மாதேவியாரின் சிவத்தொண்டு அளப்பரியதாகும். அரச வாழ்க்கையினை துச்சமெனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும் புதிய கற்றளிகளாக பழைய தளிகளைப் (கோயில்களைப்) புதுப்பிப்பது, புதிய சிவாலயங்களை எடுப்பது, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களுக்கெல்லாம் எண்ணிறைந்த செப்புத் திருமேனிகளை வார்த்து அளிப்பது, தங்கத்தாலும், வெள்ளியாலும் தெய்வ உருவங்களை சமைத்து சிவாலயங்களுக்கு அர்ப்பணிப்பது, நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்னாலான அணிகலன்களைத் தெய்வப் படிமங்களுக்குச் சூட்டுவது, பொன், வெள்ளி கொண்டு பூசனைக்குரிய கருவிகளையும், வேதிகைகளையும், பாத்திரங்களையும் அளிப்பது என அப்பெருமாட்டி செய்த அறக்கொடைகளை நூற்றுக்கணக்கான சோழர் கல்வெட்டுக்கள்
எடுத்துரைக்கின்றன.

சோழர் கலை பற்றி ஆராய்ந்து வருகின்ற வல்லுநர்கள் சோழர் தம் படைப்புகளை வகைப்படுத்தும்போது செம்பியன் மாதேவியார் கலைப்பாணி என்ற ஒரு பகுப்பையே குறிப்பிடுவர். அவை கலைநயம் மிகுந்த உயரிய படைப்புக்களாகும். கோனேரிராஜபுரம் எனும் ஊரில் உள்ள திருநல்லமுடைய மகாதேவர் கோயில், ஆடுதுறை, குத்தாலம், திருமணஞ்சேரி, செம்பியன் மாதேவி, திருநறையூர் திருக்கோடிகா போன்ற பல ஊர்களில் திகழும் கோயில்கள் இவ்வம்மையாரால் புதுப்பிக்கப் பெற்ற கற்றளிகளாகத் திகழ்கின்றன. இவ்வரிசையில் அவ்வம்மையாரின் கொடையாகப் புதுப்பிக்கப்பெற்ற ஒரு சிவாலயம்தான் திருவாரூர் திருவரனெறி எனப்பெறும் கற்கோயிலாகும். இவ்வாலயத்தை ஆரூர் மக்கள் பிற்கால வழக்கில் அசலேசம் என்பர்.

புற்றிடங்கொண்டார் திகழும் வன்மீகேசம், அரனெறியுடைய மகாதேவர் அருளும் திருஅரனெறி, பரவையுண் மண்டளி என்ற மூன்று சிவாலயங்களும் ஆரூர் நகரில் திகழும் தனித்தனி பாடல்கள் பெற்ற தேவாரத் தலங்களாகும். செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாகப் புதுப்பித்த அரனெறி திருநாவுக்கரசர் எனும் அப்பர் சுவாமிகளால் இரண்டு பதிகங்கள் பாடப்பெற்ற சிறப்புடையதாகும். ஒரு பதிகத்தின் பதினொரு பாடல்களிலும் ஆரூர் அரனெறியாரின் பெருஞ்சிறப்புகளை எடுத்துரைக்கும் திருநாவுக்கரசு பெருமானார் மற்றொரு பதிகத்தின் பாடல்கள் தோறும் ஆரூரின் மற்றொரு தேவாரத் தலமான புற்றிடங்கொண்டார் உறையும் பூங்கோயிலின் சிறப்புகளை எடுத்துரைத்த பின்பு அரனெறி சென்று ஈசனை வழிபட்டு தன் அருவினை நோய்தனை களைந்து கொண்ட திறத்தை,

‘‘போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம்
    புற்று இடங்கொண்டு இருந்தானைப் போற்றுவார்கள்
ஆதியனை அரனெறியில் அப்பன் தன்னை
    அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே’’

- என்ற பாடலடிகள் வாயிலாக எடுத்துரைத்துள்ளார். அப்பர் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி. 7ம் நூற்றாண்டாகும். அவர் பாடிய தேவாரத்தில் நமிநந்தியடிகள் என்ற நாயன்மார் பூஜித்த பதியாக திருவரனெறியைக் குறிப்பதால் இத்தலத்தின் தொன்மைச் சிறப்பை நாம் நன்கறியலாம். அத்தகு தொன்மைமிகு ஆலயம், பழங்கோயிலாக இருந்ததால் செம்பியன் மாதேவியார் புதுப்பித்துள்ளார்.அசலேசத்தின் கருவறை, தென்புற அதிட்டானத்திலுள்ள முதலாம் ராஜராஜசோழனின் கல்வெட்டொன்று, ‘திருவரனெறி ஆழ்வார் கோயில் திருக்கற்றளி எழுந்தருளுவித்த ஸ்ரீசெம்பியன் மாதேவியார்’ என்று கூறுகிறது. கருவறை ஸ்ரீவிமானம், அர்த்த மண்டபம் மகா மண்டபம் எனவமைந்த இவ்வாலயத்தின் மூலவராகத் திகழும் லிங்கப்பெருமானை இங்குள்ள கல்வெட்டுகள் ‘திரு அரனெறி பட்டாரகர்’, ‘அரனெறி ஆழ்வார்’ என்ற பெயர்களால் குறிக்கின்றன. மகாமண்டபத்தில் அழகிய மேடை, பூக்கள் புணைய நீர் இடும் கல்மேசை ஆகியவற்றுடன் பள்ளித்தாம சிறு மண்டபப் பகுதி அமைந்துள்ளது.

கோஷ்டங்களில் காணப்பெறும் துர்க்கை, பிரம்மன், ஆலமர் செல்வர் ஆகிய சிற்பங்கள் முற்கால கலை அமைதியில் திகழ்கின்றன.மண்டப விதானங்களிலும், சுவர்களிலும் பழமையான ஓவியக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஜமுக்காளம் போன்ற ஓர் ஓவியத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் காணப்பெறுகின்றன. சுவரில் வரையப்பட்டுள்ள புராண ஓவியங்களைத் தவிர உள்மண்டப விதானத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களில் யாக சாலைகளில் கலசங்களும், ஹோம குண்டங்களும், சங்குகளும் எவ்வாறெல்லாம் வைக்கப் பெற வேண்டும் என்ற விளக்கக் குறிப்புகளும் காணப்படுவது வியப்பளிக்கிறது.

இவை வேறு எங்கும் காண இயலாத படைப்புக்களாகும். ஒரு ஓவியத்தின் அருகே உள்ள ‘சித்திரம் எழுதியது, ‘சுவம் ஓதுவார் சதாசேவை’ என்ற தமிழ்க் குறிப்பிலிருந்து, தேவாரம் பாடும் ஓதுவார் ஒருவர் சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார் என்பதறிந்து பிரமிக்கிறோம். திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயிலின் கிழக்கு  ராஜகோபுரத்துக்கு வெளியே கோபுரத்துடன் இணைத்துக் கட்டப்பெற்றுள்ள பிற்காலக் கணபதியார் கோயில் கருவறை, உத்திரக்கல் அரனெறியாழ்வார் கோயிலில் முன்பு இடம் பெற்றிருந்த ஒன்றாகும். அதில் அரனெறியிடாரர்க்கு நாரணகுட்டி என்பவன் வைத்த நந்தா விளக்கு பற்றிய குறிப்பு உள்ளது. முதலாம் ஆதித்த சோழனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி. 884) பொறிக்கப்பெற்ற இக்கல்வெட்டு சாசனம் உள்ள கல் உத்திரம், முதலில் அசலேசத்தில் இடம் பெற்றிருந்து, பின்னாளில் இங்கு இடம் பெயர்ந்துவிட்டிருக்கிறது.

1979ம் ஆண்டில் என்னால் முதன் முதலாக கண்டறியப்பெற்று, படி எடுக்கப்பெற்ற இக்கல்வெட்டு சாசனம்தான் திருவாரூர் திருக்கோயிலில் தற்போது இடம்பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று சாசனங்களிலேயே பழமையானது என்பதில் எனக்குத் தனி பெருமை, மகிழ்ச்சி உண்டு. செம்பியன் மாதேவியார் பழைய கோயிலைப் புதுப்பித்தபோது, அங்கு இடம்பெற்றிருந்த ஆதித்தன், பராந்தகன் போன்ற முற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளைப் படி எடுத்து, தான் புதுப்பித்த கோயிலில் மீண்டும் பொறிக்கச் செய்துள்ளதைக் காணும்போது அவ்வம்மையாரின் மாட்சிமை நமக்குப் புலப்படும். இவை அனைத்தும் செய்த அவ்வம்மையார் திருவரனெறி ஆழ்வார்க்கு அமுது படைக்க நிலமும், வெள்ளித் தளிகைகளும், கலசப் பானையும் அளித்ததை அங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அவருக்குப் பின் வந்த ராஜராஜன், கங்கைகொண்ட  ராஜேந்திரசோழன், விஜயநகர அரசர் வீரபூபதி உடையார் போன்றோரின் கொடை பற்றிய சாசனங்களும் இங்குள்ளன. இத்தகு சிறப்புடைய இந்த கோயிலில் ஈசனின் திருவாக்கால், நீரால் விளக்கெரித்தார் அடியார் ஒருவர். அவர்  தம் பெருமைகளை இனிக் காண்போம்.

திருநாவுக்கரசு பெருமானார் ஆரூரில் பாடிய திருவிருத்தம் எனும் தேவாரப் பனுவலில்,
‘‘ஆராய்ந்து அடித்தொண்டர் ஆனிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக்கு இட்டமை நீள்நாடு அறியும் அன்றே’’

- என்று குறிப்பிட்டு நமிநந்தி அடிகளின் வரலாற்றை எடுத்துரைத்துள்ளார். தாண்டகத்தில் ‘நந்தி பணி கொண்டருளும் நம்பன் தன்னை’ என்றும் அவர் புகழுரைத்துள்ளார். திருவாரூரில் திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர் ‘அருநம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்’ எனப் பாடி நமிநந்தியடிகளின் சீர்மையைச் சுட்டியுள்ளார்.

சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்துள் நமிநந்தியடிகள் நாயனார் புராணத்தில் நமிநந்தியடிகளின் வரலாற்றினை விளக்கமுற எடுத்துரைத்துள்ளார். சோழ நாட்டின் ஏமப்பேரூர் எனும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்த நமிநந்தியடிகள், திருவாரூர் பெருமான்மீது பற்றுடைய சீலராக வாழ்ந்தார். ஒருநாள் திருவாரூர் சென்று பெருங்கோயிலின் ஒரு பகுதியாகத் திகழும் அரனெறி எனும் கோயிலினுட் புகுந்து ஈசனை வணங்க விரும்பினார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

‘தம் பொற் புரிசைத் திருமுன்றில் அனைவார் பாங்கோர் அரனெறியின்
நம்பர் கிடமாம் கோயிலினுட் புக்கு வணங்க நண்ணினார்’

-என்று குறிப்பிட்டுள்ளார். கோயிலின் உட்புகுந்த நமிநந்தியடிகள், பெருமான் முன்பு திருவிளக்கு ஏற்ற வேண்டுமென விரும்பினார். தம்மூர்க்குச் சென்று எண்ணெய் கொண்டுவர இயலாத நிலையில், ஆரூரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடோ சமணர் இல்லமாகும். அங்கிருந்த சமணர்களோ நமிநந்தியடிகளை நோக்கி, கையிலே ஒளிவிட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவர்க்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரிப்பீராக’ என்றனர்.

இந்நிகழ்வினை சேக்கிழார் பெருமான்,
‘கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்த எரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேல் கொள்ளும் புரைநெறியார்’
- என்று குறிப்பிட்டுள்ளார்.

இது கேட்டுப் பொறாத நமிநந்தியடிகள், ஆரூர் அரனெறி பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்போது, ‘நமிநந்தியே நினது கவலையை மாற்றுக. இதன் அயலே உள்ள குளத்தின் நீரை முகர்ந்து வந்து எரிப்பீராக’ என்று அசரீரி வாக்கினை அடிகள் கேட்குமாறு செய்தார் இறைவன்.

இதனை சேக்கிழார் பெருமான் கூறும்போது,
‘வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணிமாற
இந்த மருங்கில் குளத்துநீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்தபிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்’
- என்று இன்தமிழால் குறிப்பிட்டுள்ளார்.

இறை வாக்கினை விசும்பில் கேட்ட நமிநந்தியடிகள் மகிழ்ந்து இறையருள் இதுவே என்று எண்ணி அரனெறியாம் திருக்கோயிலுக்கு மேற்பால் உள்ள ஆரூர் குளத்து (கமலாலய தீர்த்தம்) நீரை முகந்து கொண்டு வந்து அகலில் நீர் வார்த்து,  திரியிட்டு விளக்கேற்றினார். விடியுமளவும் திருவிளக்குகள் நீரால் எரிந்தன! இச்செய்தியினை பெரியபுராணம், ‘நாதர் அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய’ என்று குறிப்பிடுகிறது.

‘ஆரூர் நறுமலர்நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி நீரால் விளக்கிட்டமை நீணாடறியுமன்றே’ என்று முன்பே அப்பரடிகள் குறிப்பிட்டமையை இங்கு சேக்கிழார் பெருமான் மீண்டும் பதிவு செய்துள்ளார்.ஆரூர் அரனெறி அப்பனே திருவாக்கு அருள, நம்பி நமிநந்தியடிகள் குளத்து நீரால் விளக்கிட்ட திருக்காட்சியினை தமிழ் மக்கள் என்றென்றும் கண்டு களித்து அருள் நலம் பெற வேண்டும் என்று விரும்பினான் அனபாயனின் மைந்தனான இரண்டாம் ராஜராஜசோழன். சேக்கிழார் பெருமானின் வழிகாட்டலோடு பெரியபுராணம் முழுவதையும் காட்சிப்படுத்தி தாராசுரத்தில் ராஜராஜேச்சரம் (ஐராவதீஸ்வரர் கோயில்) எனும் கலைக் கோயிலொன்றினை எடுப்பித்தான். அதில் திருத்தொண்டத்தொகையின் 78 சிற்பக்காட்சிகளை தொடர் வரிசையாக அமைத்தான்.

இருபத்தேழாம் காட்சிக்கு மேலாக ‘நமிநந்தியடிகள்’ என்ற சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பினை இடம்பெறுமாறும் செய்தான். அதன்கீழ் ஆரூர் அரனெறியாம் திருக்கோயில் விளங்க எதிரே இருக்கும் குளத்திலிருந்து நமிநந்தியடிகள் ஒரு பானையில் நீர் முகப்பதும், பின்பு அடிகளே கோயில் முன்பு உள்ள ஐந்து அகல் விளக்குகளில் நீர் ஊற்றி, திரியிட்டு எரிய விடுவதுமாகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குளத்தில் மீன்கள், பறவைகள், தாமரை மலர்கள் காணப்பெறுவதும், அடிகள் எரியவிடும் விளக்குகள் சுடர் மிகுந்து எரிவதும் இச்சிற்பக் காட்சியின் சிறப்பு அம்சங்களாகும்.

நாவுக்கரசு பெருமானின் பதிகப் பாடல்களையும், சேக்கிழார் பெருமானின் நமிநந்தியடிகள் புராணப் பாடல்களையும் ஒரு முறை படித்த பின்பு, தாராசுரம் சென்று சிற்பங்களை கூர்ந்து கண்டு மகிழுங்கள். பின்பு திருவாரூர் சென்று திருஅரனெறியப்பரை தரிசனம் செய்யுங்கள். உடன் கமலாலய தீர்த்த குளத்துப் படித்துறையில் (வடகிழக்குப் படித்துறை) இறங்கி குளத்து நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். அந்த நீர்தான் சுந்தரருக்கு ஆற்றிலிட்ட பொன்னை மீட்டுத் தந்தது, நாட்டமிகு தண்டியடிகளுக்கு கண்ணொளி தந்தது, நமிநந்தியடிகளுக்கு விளக்கு நெய்யாகியது! இவையறிந்த உணர்வோடு மீண்டும் அரனெறி மகாதேவர் முன்பு சென்று அவன் பாதம் பணியுங்கள். ஆனந்த அநுபூதியை நிச்சயம் பெறுவீர்கள்.