முகங்களின் தேசம்



ஜெயமோகன்
ஓவியம் : ராஜா

பிறிதொரு முகம் 2012ம் ஆண்டில் நாங்கள் சென்ற பயணத்தில் சமண அறநிலைகளையும் ஆலயங்களையும் பார்வையிட்டுச் செல்லும்தோறும் ஒரு வகையான அமைதி வந்துவிட்டது. ‘எங்கிருந்தாலும் ஒரு நாளைக்குள் செல்லும் தொலைவில் ஒரு சமண அறநிலை இருக்கும்; அங்கு தங்குமிடமும் உணவும் இலவசமாக அளிக்கப்படும்’ என்று அறிந்துவிட்டோம். கையில் பணத்துடன் செல்லும்போதே இப்படி! பணமே இல்லாமல் கிளம்பிச் செல்லும் பயணங்களில் உணவு கிடைக்கும் என்பது அளிக்கும் நிம்மதி, கடவுள் அளிக்கும் நிம்மதியைவிட பெரியது.



சில ஊர்களில் நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச் செல்வோம். எங்கள் குழுவின் ‘செய்தித்தொடர்புத்துறை’ நண்பர் ராஜமாணிக்கம், ‘‘Sir, actually we are pilgrims from South India. And we are on a travel to see all Jain places in India’’ என்று கல்லும் கரைந்துருகும் கீதத்தை ஆரம்பிப்பதற்குள்ளே, ‘‘முதலில் குளித்துவிட்டு வாருங்கள். அறை தயாராக இருக்கும். உணவு உண்ணலாம்’’ என்று புன்னகையுடன் சொல்வார்கள்.

நாங்கள் அசைவ உணவு உண்ண விரும்புவோம் என்று எண்ணி, ‘‘இங்கு அசைவ உணவு கிடைக்காது, பரவாயில்லையா?’’ என்பார்கள் சில ஊர்களில். சமணர்களுக்கு, அவர்கள் அல்லாதவர்கள் அனைவருமே மூன்று வேளையும் அசைவ உணவு உண்பதாக ஒரு நினைப்பு உண்டு. அந்தப் பயணத்தில் இந்தியா முழுக்க நட்பு நிறைந்த முகங்கள் அன்றி எதையுமே நாங்கள் பார்க்கவில்லை. அந்த அனுபவம் காரணமாக ஓரிடத்தில் சற்று சூடுபடவும் நேர்ந்தது.

இந்தியா என்பது எனக்கு முகங்களின் பெருக்கு. இந்த முகமும் அதில் ஒன்று என்பதால், அதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மேலும், இத்தனை ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்த நினைவு எங்கள் நெஞ்சிலிருந்து மறையவே இல்லை. காலப்போக்கில் ஒரு வடுவாகவே அது எஞ்சுகிறது!

2012 ஜனவரி 20ம் தேதி கர்நாடகத்திலுள்ள பெல்காம் நகருக்குச் சென்றோம். அங்கு ஒரு சமண ஆலயம் உள்ளது என்றும், அதன் அருகிலேயே ராமகிருஷ்ண மடத்தின் மிகப் பெரிய கிளை ஒன்று இருப்பதாகவும் இணையம் மூலம் அறிந்தோம். சுவாமி விவேகானந்தர் யாசகம் செய்தபடி அலைந்துகொண்டிருந்த துறவியாக இருந்தபோது, 1892ல் பெல்காம் நகருக்கு வந்தார். அன்று அது சிற்றூர். வனத்துறை ஊழியராக இருந்த ஹரிபாத மிஸ்ரா என்பவரின் விருந்தினராகத் தங்கினார். பிறகு அமெரிக்கா சென்றபோது, அங்கிருந்து ஹரிபாத மிஸ்ராவுக்கு விவேகானந்தர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.



1998ம் ஆண்டில் ராமகிருஷ்ண மடத்தின் செயலர் சமரானந்தா, விவேகானந்தரின் கடிதங்களில் இருந்து இந்த விலாசத்தைக் கண்டுபிடித்தார். அவரது கோரிக்கையின்படி விவேகானந்தருக்கான நினைவு இல்லம் அமைக்க அந்த இடம் அவருக்கு அரசால் நன்கொடையாக அளிக்கப்பட்டது. சுவாமி புருஷோத்தமானந்தர் அவர்களின் பொறுப்பில் அந்த மடம் அமைந்தது. முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அதைத் திறந்து வைத்தார். 

சமணர்களிடம் பெற்ற உபசரிப்பால் ஊக்கம் பெற்ற நண்பர்கள், ‘‘அங்கே சென்று தங்குமிடம் கேட்கலாம்’’ என்றனர். எனக்கு ராமகிருஷ்ண மடங்களைப் பற்றி எந்த உயர்வான எண்ணமும் இல்லை. எனக்குப் பல கசப்பான அனுபவங்கள் உண்டு. ‘‘அதையும்தான் பாத்திருவோமே சார்’’என்றார் கிருஷ்ணன்.

ஆகவே அந்தியில் அங்கு சென்று எங்களை அறிமுகம் செய்துகொண்டோம். எங்கள் பயணத்தின் நோக்கத்தையும், தமிழகத்திலிருந்து சமண அறநிலைகளில் தங்கியபடி நாங்கள் வந்து கொண்டிருப்பதையும் சொன்னோம். நான் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளன் என்று சொல்லி, இணையத்தில் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் வந்துள்ள செய்திகளையும் காட்டினர் நண்பர்கள்.

ஆனால் அங்கிருந்த துறவி எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மிகவும் கறாரான முகத்துடன், ‘‘இங்கு அந்நியரைத் தங்க வைப்பதில்லை’’ என்றார். நண்பர்கள் பல வகையில் பேசிப் பார்த்தனர். ‘‘இங்கே தங்க இடம் அளிக்க மாட்டோம்’’ என்று திரும்பத் திரும்ப ஒரே குரலில் சொன்னார். துறவிகளுக்கே உரிய, பயிற்சி பெற்ற அமைதியான தேன்குரல்.

‘‘ராமகிருஷ்ண மடம் என்ற இந்த அமைப்பே, இவ்வாறு செல்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன்தான் விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது’’ என்றார் கிருஷ்ணன்.  அங்கிருந்த மாபெரும் கட்டிடங்களைச் சுட்டிக் காட்டி, ‘‘குறைந்தது ஆயிரம் பேர் இங்கு வசதியாகத் தங்க முடியும். இப்போது ஐம்பது பேர் கூட இங்கு இருப்பதாகத் தெரியவில்லையே?’’ என்றார்.

‘‘ஆம்! இங்கு இரண்டாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. எங்கள் விழாக் காலங்களில் அவற்றைத் தங்குவதற்காக அளிப்போம். இங்கு தங்க வேண்டுமென்றால் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்களோ, அந்த ஊரில் இருக்கும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கி வரவேண்டும். அவர்களை மட்டும்தான் இங்கு தங்க வைக்க முடியும்’’ என்றார் மடத்தின் தலைவர்.

நான் சற்று எரிச்சலுடன், ‘‘இவ்வாறு பயணம் மேற்கொள்பவர்கள் எவராவது அப்படி சிபாரிசுக் கடிதம் வாங்கி வருவார்களா என்ன? சரி, நீங்கள் எவருக்கெல்லாம் சிபாரிசுக் கடிதம் கொடுப்பீர்கள்?’’ என்றேன். ‘‘எங்கள் மடத்திற்கு வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் சிபாரிசுக் கடிதம் கொடுப்போம்’’ என்றார்.

நான் சிரித்துவிட்டேன்.  ‘‘அத்தனை நன்கொடை கொடுக்க முடிபவர்கள், இப்படிப்பட்ட தங்குமிடத்திற்கு ஏன் வரவேண்டும்? நட்சத்திர விடுதிகளிலே தங்கலாமே!’’ என்றேன். அவர் சினத்துடன்,  ‘‘இது எங்கள் விதி. இது பிறருக்குரிய அமைப்பு அல்ல’’ என்றார். ‘‘அப்படியென்றால் நீங்கள் பிறரிடம் நன்கொடை வாங்கக்கூடாது அல்லவா? ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடமிருந்தும் நன்கொடை பெறுகிறீர்கள். அதை உங்களுக்குத் தேவையானவர்களுக்கு வசதிகளைச் செய்துகொள்ள பயன்படுத்தினால் அது தவறல்லவா?’’ என்றேன். 

அவர் எங்களிடம் விவாதிக்கத் தயாராக இருக்கவில்லை. நாங்கள் கிளம்பினோம். பெல்காம் நகருக்கே  திரும்பிச் சென்று ஓர் ஓட்டலில் அறைகள் அமர்த்திக்கொண்டோம். இரவில் நாங்கள் எங்கள் அறைக்கு வந்ததும் அந்த சாமியார் எங்களை போனில் அழைத்து, நாளைக்கு அவரைச் சந்திக்க வரும்படி நண்பர் முத்துகிருஷ்ணனிடம் சொன்னார். அந்தக் குற்றவுணர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அங்கே செல்ல விரும்பவில்லை. 

காலையில் எழுந்ததும் பெல்காம் கோட்டையிலுள்ள சமண ஆலயமான சிக்கி பஸதிக்குச் சென்று பார்த்தோம். அது அந்த மடத்தின் அருகேதான் இருந்தது. தொன்மையான கோயில். கல்லால் ஆனது. உள்ளே அறவுருவான தீர்த்தங்கரர். மடத்திலுள்ள ஒருவர், நாங்கள் செல்லும் கார் எண்ணைப் பார்த்து வந்து, சாமியார் அழைப்பதாகச் சொன்னார். வேறு வழியில்லாமல் அங்கே சென்றோம். சாப்பிடும்படி சொன்னார். கிருஷ்ணன், ‘‘நாம் பண்டாரங்களாக நினைத்து வந்துவிட்டோம். நமக்கு என்ன சார் பிடிவாதம்? நாமதான் உண்மையான சாமியார்கள். சாப்பிடுவோம்’’ என்றார்.

ஒரு பெரிய போஜன சாலையில் தட்டுகளைக் கழுவி வந்து அமர்ந்தோம். எல்லா ராமகிருஷ்ண மடாலயங்களையும் போல பிரமாண்டமான கூடம். அமைதி. சுத்தம். சுற்றிலும் மாபெரும் கட்டிடங்கள். ஒரு வகை உப்புமா போட்டார்கள். என்னால் அள்ளி வாயில் வைக்கவே முடியவில்லை. குமட்டிக்கொண்டு வந்தது.

நான் என் சாமியார் வாழ்க்கையில் பல இடங்களில் பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தவன். தர்ம சாப்பாட்டுக்கான வரிசைகளில் கால் கடுக்க நெடு நேரம் நின்றிருக்கிறேன். கிடைத்ததை உண்டிருக்கிறேன். எனக்கு அவமதிப்பும்கூட பெரிய விஷயமல்ல; அது அவமதிப்பவனின் மனநிலையைக் காட்டுகிறது, அவ்வளவுதான்!

ஆனால் இது அப்படி அல்ல, இதற்குப் பின்னால் உள்ளது ஒரு மாபெரும் வீழ்ச்சி. என் முன்னால் அந்தக் காவிதாரி நின்றபடி எங்களை மதிப்பிடுகிறார். நான் வைர மோதிரம் போட்டிருந்தால் அவர் என் முன்னால் வந்து நின்று இளித்திருப்பார் என்று எனக்குத் தெரியும் என்பதே என் பிரச்னை. ‘உடனே அங்கிருந்து சென்று விடவேண்டும்... ஒரு சொல் கூட அந்தக் காவிதாரியிடம் பேசக்கூடாது’ என நினைத்தேன். அவரைப் பார்க்காமலேயே வெளியேறினேன்.

விவேகானந்தரின் வாழ்க்கையை அ.லெ.நடராஜன் அரிய நூலாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சி... அமெரிக்காவில் விவேகானந்தரிடம் கேட்கிறார்கள், ‘‘உங்களுக்கு இங்கே மிக மிகப் பிடித்தமானது எது?’’. அவர், ‘‘என் உள்ளம் கவர்ந்த ஒன்று இங்குள்ளது’’ என்றார். அங்குள்ளவர்கள் முகம் மலர்ந்தனர். ‘‘அந்த அழகியின் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?’’ என்று கேட்கிறார் ஒரு சீமாட்டி.  ‘‘இங்குள்ள முறையான பெரிய அமைப்புகள்தான்’’ என்றார் விவேகானந்தர்.

இந்தியாவில் பழமையான அமைப்புகள் இருந்தன. மன்னர்களும் நிலப்பிரபுக்களும் இல்லாமல் ஆனபோது அவை பல வகையிலும் செயலற்றுப் போய்விட்டன. மேலும் அவை சாதி அடிப்படையில் ஆனவை. ஒரு நவீன சமூகத்திற்குப் பொருந்தாதவை. மக்களுக்கு சேவை செய்யவும், ஞானம் தேடிப் பயணிப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், கல்வியைப் பரப்பவும், துறவிகளைப் பேணவும் கூடிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று விவேகானந்தர் எண்ணினார்.

அமெரிக்காவில் இருந்த அவருடைய மாணவிகளால் நிதியளிக்கப்பட்டு ராமகிருஷ்ண மடம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுக்க வெள்ளையர் ஆட்சியின்போது உருவான பெரும் பஞ்சங்களில், ராமகிருஷ்ண மடம் ஆற்றிய பெரும்பங்கு ஈடு இணையற்றது. ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள், பட்டினியில் செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு உணவும் நீரும் எடுத்துக்கொண்டு சிற்றூர்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள். தொற்று நோய்களில் ஏராளமான துறவிகள் இறந்திருக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் பிச்சை எடுத்து கஞ்சித் தொட்டி நடத்தி இருக்கிறார்கள்.

விவேகானந்தர் பல இடங்களில் சொல்லியிருக்கிறார், ‘இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மிகமும் நிலை நிற்பதே, உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் துறவிகளாலும் சமூகத்திற்கு வெளியே வாழும் நாடோடிகளாலும்தான்’ என! இங்குள்ள பெரும்பாலான ஆன்மிக மரபுகளில், ‘துறவி ஆவதற்கு முன் பிச்சை எடுத்து உண்டு அலையும் வாழ்க்கை’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், லௌகீகம் தொடர்பான பயமும் கவலையும்தான் ஆன்மிகமான சிந்தனைக்குப் பெரும் தடைகள். அவற்றில் இருந்து முற்றாக விடுபட்டவனே உண்மையில் எதையாவது ஆழத்தில் சென்று சிந்தித்து அறிய முடியும்.

ராமகிருஷ்ணரே அவரது மாணவர்களைப் பிச்சை எடுக்க அனுப்பியிருக்கிறார். விவேகானந்தரும் அப்படி அலைந்து திரிந்தவர்தான். அந்தப் பயணத்தில்தான் அவர் பெல்காமுக்கே வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் மட்டும் அல்ல, கலையிலும்கூடத்தான் இது உள்ளது. இந்நாட்டின் முக்கியமான எல்லா எழுத்தாளர்களும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்த வாழ்க்கை கொண்டவர்களே. வைக்கம் முகமது பஷீர், சிவராம காரந்த், பிபூதிபூஷன் பந்தோபாத்யாய என எண்ணற்ற உதாரணங்கள்.

அந்த அலைச்சல் ஓர் இந்திய சித்திரத்தை அளிக்கிறது. இந்த மண்மேல் பெரும் ஈடுபாட்டை உருவாக்குகிறது. இதற்காக வாழும்படி தூண்டுகிறது. இவ்வாறு அலைந்து திரிபவர்களைப்  பேணும் அமைப்புகள் இந்நாடெங்கும் இருந்தன. ஒவ்வொரு இந்துவும், சமணரும், பௌத்தரும், சீக்கியரும் அந்த மனநிலை கொண்டிருந்தார்கள். அன்னியர்களை ஐயப்படுவதற்கும் புறக்கணிப்பதற்கும் பதிலாக, அவர்கள் அன்னியர்கள் என்பதற்காகவே அவர்களைப் பேணும் ஒரு பண்பாடு இங்கே இருந்தது. 
\
சென்ற நூற்றாண்டில் பிரம்ம சமாஜம் இந்த விழுமியங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தது. அலைந்து திரிபவர்களை ‘சோம்பேறிகள்’ என்றும், ‘குற்றவாளிகள்’ என்றும் அது சொன்னது. அந்த மனநிலையை இடதுசாரிகள் மேலும் பெருக்கினர். ஒருகட்டத்தில், ‘அலைந்து திரியும் அன்னியர்கள் பேணப்படாது போய் விடுவார்கள்’ என விவேகானந்தர் அஞ்சினார். ‘ஒரு நாட்டின் ஆன்மிக சாரம் அந்த அன்னியர்களால், நாடோடிகளால்தான் நிலை நிற்கும்’ என்று அவர் சொன்னார். ஆகவே அதற்கான நவீன அமைப்பை உருவாக்க வேண்டுமென விரும்பி அவர் ராமகிருஷ்ண மடங்களை உருவாக்கினார்.

ஓர் இளைஞன் இன்னதென்றறியாத மன எழுச்சியால் உந்தப்பட்டவனாகத் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி, எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும், உணவும், தலை சாய்க்க இடமுமாக அந்த அமைப்புகள் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

அன்று என்னால் மிக எளிதாக ஒரு முக்கியமான புள்ளியின் சிபாரிசைத் தொலைபேசியிலேயே ஏற்பாடு செய்திருக்க முடியும். அந்தத் துறவி அடித்துப் புரண்டு எனக்கு அறை அளித்திருப்பார். ஆனால் அது, இன்றைய நான். முப்பதாண்டுகளுக்கு முன் இந்தியாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன், மெய்ஞானம் தேடும் பதற்றத்துடன் அலைந்தவன் வேறு ஜெயமோகன். பதறும் கண்களும், தயங்கும் நடையுமாக, கையில் பைசா இல்லாமல், பசித்துக் களைத்து நான் வந்து இந்த வாசலில் நின்றிருந்தால் என்னை இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். அன்றைய விவேகானந்தருக்கே அந்தக் கதிதான் வந்திருக்கும்.

‘‘ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திடமிருந்தும் நன்கொடை பெறுகிறீர்கள். அதை உங்களுக்குத் தேவையானவர்களுக்கு வசதிகளைச் செய்துகொள்ள பயன்படுத்தினால் அது தவறல்லவா?’’

‘இந்த நாட்டின் பாரம்பரியமும் கலைகளும் ஆன்மிகமும் நிலை நிற்பதே, உலகியலை உதறி இந்த நாட்டு நிலவெளி முழுக்க அலைந்து திரியும் துறவிகளாலும் சமூகத்திற்கு வெளியே வாழும் நாடோடிகளாலும்தான்!’

ஓர் இளைஞன் தன்னிடம் உள்ள அனைத்தையும் உதறி, எங்கு செல்வதென்றில்லாமல் செல்லும் அந்தப் பயணத்தில் எந்நேரத்திலும் அடையா வாசலும், உணவும், தலை சாய்க்க இடமுமாக அந்த அமைப்பு இருக்க வேண்டும்!

(தரிசிக்கலாம்...)