மலை முழுதும் திருக்குறள்!



‘‘திருக்குறளை ஓலைச்சுவடிகளிலும், நூல்களிலும், கணினியிலும் கூட பார்த்துட்டோம். ஆனா, எந்தக் காலத்திலும் அழியாமல் நிலைச்சு இருக்க என்ன செய்யலாம்னு யோசிச்சேன். மொத்தக் குறளையும் ஒரு மலை முழுக்க கல்வெட்டுகளா செதுக்கி வைக்கிறதுதான் ஒரே வழினு தோணிச்சு. அதைத்தான் முன்னெடுத்திருக்கோம்!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த பா.ரவிக்குமார். இதற்காகவே ‘குறள்மலைச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவியிருக்கும் திருக்குறள் பக்தர் இவர்.



‘‘எனக்கு சொந்த ஊர் ஈரோடு பக்கத்துல எம்மாபூண்டி கிராமம். திருக்குறள் மேல ரொம்ப ஈடுபாடுள்ள குடும்பம். எங்க அப்பா, தாத்தா எல்லாம் திருக்குறள் சொல்லாம அன்னைக்குப் பொழுதை ஆரம்பிக்கிறதில்ல. எனக்குள்ளேயும் அந்த உந்துதல் இருந்ததாலதான் நண்பர்களோடு சேர்ந்து கடந்த 1999ம் வருஷம் இந்த ‘குறள்மலைச் சங்கம்’ அமைப்பை ஆரம்பிச்சேன். இதோ முதல் குறளைச் செதுக்கியாச்சு!’’ - திருத்தமான தமிழில் விவரிக்கிறார் ரவிக்குமார்.

குறள் பற்றால் தன் இரு மகன்களுக்கும் ‘திரு’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இவர். ‘‘சங்கம் தொடங்கினதும் முதல்ல அரசுகிட்டதான் கோரிக்கை வச்சோம். அப்புறம், நாங்களே மலையைத் தேர்ந்தெடுக்கக் கிளம்பினோம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் செ.ராசு, சிற்பி பாலசுப்பிரமணியம், லண்டன் தமிழ்ச் சங்க ஸ்தாபகர் சிவா பிள்ளை, இந்தோனேஷிய தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விசாகன்னு நிறைய தமிழறிஞர்கள் எங்களுக்கு உதவினாங்க.

கடைசியா திருப்பூர் பக்கத்துல மலையப்பாளையம் மலையைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரே பாறையாலான நூறடி மலை. இருபது ஏக்கர் பரப்பளவு. உச்சியில் தமிழ்க்கடவுள் முருகன் இருக்கார். திருக்குறள் பதிக்க இது சரியா இருக்கும்னு ஆய்வாளர்கள் சொன்னாங்க. உடனே, அரசிடம் அனுமதி கேட்டு மனுக்கள் கொடுத்தோம். தொடர் முயற்சிக்குப் பிறகு, கடந்த 2013ம் வருஷம் ‘கோரிக்கை ஏற்கப்பட்டது’னு பதில் வந்துச்சு!’’ என்கிற ரவிக்குமார் முப்பது அடி தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும்படி முதல் குறளைச் செதுக்கியிருக்கிறார்.

‘‘மாமல்லபுரம் கல்வெட்டு சிற்பக் கலைஞர் அரவிந்தன் தலைமையிலான குழு இந்தப் பணியை செஞ்சாங்க. இயற்கை மூலிகை  பெயின்ட் கொண்டு இதை தெளிவா தெரியும்படி பண்ணியிருக்கோம். முதல் குறளை செதுக்க பல பரிசோதனைகள் பண்ணினதால 11 லட்ச ரூபாய் செலவாச்சு. இனி ஒவ்வொரு குறளுக்கும் 3 லட்ச ரூபாய் இருந்தா போதும். அரசு நிதி உதவி கிடைச்சா ரெண்டே வருஷத்துல முடிச்சு இந்த மலையை அரசிடம் கொடுத்துடலாம். எல்லாம் வள்ளுவர் அருளால நடக்கும்னு நம்புறேன்!’’ என்கிறார் ரவிக்குமார் நம்பிக்கையுடன்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: எபிநேசர்