குங்குமம் ஜங்ஷன்



நிகழ்ச்சி... மகிழ்ச்சி!

* ‘ராஜதந்திரம்’ படத்தில் காமெடியனாக நடித்த தர்புகா சிவா, சசிகுமாரின் ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். இந்தப் படத்திலிருந்து ‘தலகாலு புரியலையே...’ என்ற ஒரு பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் அலுவலகத்தில் நடந்த இந்த சிம்பிள் விழாவில் சிங்கிள் ஸாங் ஆடியோவை கௌதம் வெளியிட்டார். தொடர்ந்து சூரியன் எஃப்.எம்மிலும் இதன் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சசிகுமார், கதாநாயகி நிகிலா விமல், படத்தின் இயக்குநர் பிரசாத் முருகேசன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



விளம்பரம்

* கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் அறிவது நம் நாட்டில் சட்டவிரோதம். பல நாடுகளில் இதில் எந்தத் தவறும் இல்லை. கூகுள், யாஹு, மைக்ரோசாஃப்ட் போன்ற இணையதளங்கள் இந்த சோதனை தொடர்பான சர்வதேச விளம்பரங்களை இந்தியாவிலும் பார்க்க முடிகிற மாதிரி வெளியிட்டது சர்ச்சையாகி இருக்கிறது. ‘‘இதை உங்களால் தடுக்க முடியாவிட்டால் இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்’’ என காட்டமாக உத்தரவு போட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

புத்தகம் அறிமுகம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரையாக்கமும் திரைக்கதையும்



மிஷ்கின்
(பேசாமொழி பதிப்பகம், 1, ஸ்ருதி அபார்ட்மென்ட், காந்தி நகர் முதல் குறுக்குத் தெரு, அடையார், சென்னை-20. விலை: ரூ.600/- தொடர்புக்கு: 9840698236) இயக்குநர் மிஷ்கினின் பேசப்பட்ட படம், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. அவரின் தனித்துவ திரைமொழியின் வசீகரம், தமிழில் முன் எப்போதும் காணப்பட்டதல்ல. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் உருவாகிய விதம், அதன் காட்சிப்படுத்தலுக்கான காரண, காரியங்கள் எல்லாம் மிஷ்கினின் வார்த்தைகளிலேயே பதிவாகின்றன. ஒரு படத்தை எப்படி எடுத்தேன் என்று சொல்ல முடிவதும், அதுவே இன்னொரு திரைக்கதை மாதிரி சுவாரஸ்யம் தருவதெல்லாம் தமிழ்ப் புத்தக உலகிற்கு புதுசு.

மூடுமந்திரமான, யாராலும் அவ்வளவாக பகிர்ந்துகொள்ளப்படாத திரை உத்தியை இதில் வாசகர்களுக்காக மனம்விட்டுச் சொல்கிறார். அதில் காட்சிகளுக்கான ஓவியங்களும் அவராலேயே வரையப்பட்டிருக்கின்றன. வெறும் ஸ்கிரிப்ட் புத்தகமாக வெளிவந்திருந்தால்கூட பெரிய விஷயமில்லை. ஆனால் திரைமொழியின் பரிமாணங்களை, வீச்சை, செயலாக்கத்தைச் சொல்ல முன்வருவது நிச்சயமாக சினிமாவின் மீதான அக்கறை. அந்த வகையில் இது முக்கியமான புத்தகம். நூலின் பயன்பாட்டைக் கருதி இதன் விலையை பொருட்படுத்த வேண்டியதில்லை!

ஜஸ்ட் எ மினிட்!

சமூக வலைத்தளங்களில் ஒரு நிமிடத்தில்...

* ஃபேஸ்புக்கில் 41 லட்சம் பதிவுகள் ‘லைக்’ ஆகின்றன
* ட்விட்டரில் 347222 ட்வீட்கள் பதிவேறுகின்றன
* இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் போஸ்ட்கள் லைக் செய்யப்படுகின்றன
* ஸ்நாப்சாட்டில் 69 லட்சம் பேர் சாட் செய்கிறார்கள்
* யூ டியூபில் 300 மணி நேரம் ஓடும் அளவுக்கான வீடியோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன

சிற்றிதழ் talk

காற்று இல்லாத இடத்தில் நெருப்பு எரியாது. அப்படியென்றால் காற்று இல்லாத இடத்தில் இருக்கும் சூரியன் தொடர்ந்து எரிகிறதே எப்படி? சூரியன் இருக்கும் இடத்தில் காற்று இல்லை. அதனால் அங்கே ஆக்சிஜன் வாயு இருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால், ஏராளமான ஜுவாலைகள் கக்கி வெப்பத்தையும், வெளிச்சத்தையும் உமிழும் சூரியன் எப்படித்தான் எரிகிறது? சூரியனில் எரிவது சாதாரண வேதியியல் ரீதியிலான நெருப்பல்ல.

அங்கே நிகழ்வது அணு உலையில் நிகழ்வதைப் போன்ற சம்பவம். சூரியன் ஒரு விநாடிக்கு மில்லியன் டன் ஹைட்ரஜனை எரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் சூரியனுக்கு வெப்பத்தை உமிழும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது. ஆகவே, சூரியனை, ‘இறந்து கொண்டிருக்கும் நட்சத்திரம்’ என்று வானியல் வல்லுனர்கள் வர்ணிக்கிறார்கள்.

அதற்காக நீங்கள் பயப்படாதீர்கள். இன்று மாலையே சூரியன் எரிந்து காலியாகி விடும் என்று முடிவு கட்டி விடாதீர்கள். நிச்சயம் நாளை காலையும் சூரியன் உதிக்கும். ஏனெனில் சில மில்லியன் ஆண்டுகளுக்குத் தேவையான ஹைட்ரஜன் சூரியனில் இருக்கிறது. ‘மனுஜோதி’ மே-ஜூன்-ஜூலை-2016 இதழில்...

யூ டியூப் லைட்

* ‘கொடைக்கானல் வோன்ட்’ என ராப் சாங் பாடி ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தையே உலுக்கிய பாடகி சோஃபியா அஷ்ரஃப். அவரை இப்படியொரு சர்ச்சையில் பொருத்திப் பார்க்க முடியவில்லைதான். எல்லாம் ‘டாம் ப்ராம் பாய்’ என்னும் வைரல் வீடியோவால் வந்த வினை. இத்தனைக்கும் இந்தப் பாடலை சோஃபியா பாடவில்லை, அதில் நடிக்கவும் இல்லை. ஜஸ்ட் வரிகள் எழுதியது மட்டும்தான் இவர்.

பிரச்னையாகியிருப்பதும் வரிகள்தான். டாம் ப்ராம் என்பது Tamil Brahmin என்பதன் சுருக்கம். ஒரு தமிழ் பிராமின் பையன் மீது தனக்கு இருக்கும் மோகத்தை ஒரு பெண் சொல்வதுதான் பாடல். ஹீரோயினை வர்ணிப்பது போல அவனை இன்ச் இன்ச்சாக வர்ணிப்பதும், அவனுக்கு ஒரு குளியல் சீன் வைத்திருப்பதும்தான் இந்த வீடியோவின் ஹைலைட். பெண்ணைப் போல் ஆணையும் போகப் பொருளாக்கலாம் என்ற புரட்சிகரப் பெண்ணியச் சிந்தனைதான் இது.

ஆனால் அது அப்படிப் புரிந்துகொள்ளப்படவில்லை. ‘வெளிப்படையாக ஜாதிப் பெயரைச் சொல்லி ஒருவனை எப்படி உயர்த்தலாம்?’ எனக் கொதித்துவிட்டது ஆன்லைன் பாப்புலேஷன். இதுவரை விமர்சனங்கள் எதற்கும் பதில் சொல்லிப் பழக்கம் இல்லாத சோஃபியா, இந்த விஷயத்தில் ஃபீல் ஆகிவிட்டார். ‘‘இந்தப் பாடலின் உள்ளே இருக்கும் கேலியை யாரும் உணரவில்லை. உயர் ஜாதியை நான் போற்றிவிட்டதாகப் பேசுகிறார்கள். என்னை அறிந்தவர்களுக்கு நான் அப்படியல்ல என்பது தெரியும்!’’ என ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் அவர்.