இங்கே படிச்சவங்களுக்கு மரியாதையில்லை!



இயக்குநர் ஆர்.கண்ணன்

‘‘இளைஞர்களின் கதையைச் சொல்ல நினைச்சேன். என் ஹீரோவே பி.இ. படிச்சு முடிச்சிட்டு ரிச்சி ஸ்ட்ரீட்ல எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வித்திட்டு இருக்கிறவர்தான். இங்கே படிச்சவங்களுக்கு மரியாதையில்லை. மலேசியா, சிங்கப்பூர்ல ஒரு இளைஞனுக்கு வேண்டிய அவசியமான சம்பளம் கிடைக்குது. இங்கெல்லாம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு கரணம் போட வேண்டியிருக்குது. இதில் இளைஞர்களின் விறுவிறுப்பான அனுபவங்களோட கதை இருக்கு. அவங்களோட சாகசங்கள் இருக்கு. ‘இவன் தந்திரன்’னு பெயரே நிறையச் சொல்லும்’’ - தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் முக்கிய சீடர்.

‘‘கதையின் தலைப்பே வித்தியாசத்தில் வந்து சேருது! இதில் சொல்ல விரும்புவது என்ன?’’
‘‘என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதை. காத்து, தண்ணி, ஒளின்னு தொட்டியில் பர்ஃபெக்டா பூக்குறது ஒரு வகை. ஆளில்லா காட்டில் தானாகவே பெரிசா பூத்து அழகா சிரிக்கிறது இன்னொரு வகை. இதில் அவ்வளவு நேர்த்தியா, இயற்கையா, முட்டி மோதி முளைச்சி வர்றவங்களைப் பத்தி சொல்லப் போறேன். கெளதம் கார்த்திக், ஆர்ஜே.பாலாஜி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்னு மூணு பேரோட கதை.

படிச்ச படிப்பைப் பயன்படுத்தி நிறைய காரியங்கள் செய்றாங்க. அவங்களுக்கு வருகிற இடையூறுகள், அவங்க அதையெல்லாம் சமாளிக்கிற விதம்னு கதை பயணம் போகும். இங்க ‘கதை இல்லை, கதை இல்லை’ன்னு சொல்லிக்கிட்டே பல வருஷமா திரியுறோம். மெட்ராஸில் இருக்கிற கதையே ஒரு நூறு தேறும். அறிவியலின் சில பக்கங்கள் இதில் இருக்கு.

‘நானோ டெக்னாலஜி’ கூட படத்தில வருது. அதைக் கடந்த விஷயங்கள் கூட இதில் பேசப்படுது. இப்படிச் சொல்லிட்டு இதை அறிவியல் படம் மாதிரி இல்லாமல் எளிமைப்படுத்தி இருக்கேன். இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிற கஷ்டத்தை உணர்த்தியிருக்கேன். நான் பயின்று வந்த பள்ளி சொல்லிக் கொடுத்த விஷயங்களை பக்குவமாக, தெளிவாக சொல்லியிருக்கேன்னு நம்புறேன்.’’

‘‘எப்படி இதில் கௌதம் கார்த்திக் வந்தார்?’’
‘‘இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில் எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் முடிவு பண்ணிட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவங்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் கௌதம் கார்த்திக். ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய்ப் புகுந்து கொள்கிற ஆர்வம் கௌதம்கிட்டே இருக்கு. இன்னமும் அவர் சின்னப் பையன் இல்லை. தூக்கத்தைக் கூட மறந்திட்டு ‘நான் எப்படியெல்லாம் இருந்தா நல்லாயிருக்கும்’னு கேள்விகளால் துளைத்தெடுப்பார்.

‘வேலை இல்லா பட்டதாரி’யில் தனுஷுக்கு  கிடைச்ச மரியாதை, இதில் கௌதமிற்கு கிடைக்கும். கிட்டத்தட்ட இரண்டு வருஷமா நான் தனிச்சுப் போய் உட்கார்ந்து திரட்டின அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கு. இப்ப இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை தேவைப்படுகிறது. அடுத்த கட்டம், அடுத்த டெக்னாலஜின்னு போக வேண்டியிருக்கு...’’

‘‘ ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை’ எப்படிக் கண்டுபிடிச்சிங்க?’’
‘‘கன்னடத்தில் ‘யூ-டர்ன்’னு ஒரு படம் செய்தார். எல்லோரும் ரொம்ப கவனிப்பா பார்த்த படம். அவ்வளவு அருமையாக செய்திருந்தாங்க. இப்பக்கூட எங்க மணிரத்னம் சாரின் ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு முக்கியமான ரோல் பண்றாங்க. மணி சாரே நம்பிக்கையா தேர்ந்தெடுக்கிறது சும்மா இல்லை. மகா அழகியெல்லாம் இல்லை. ஆனால் பக்கத்து வீடு, எதிர் வீடுகளில் சற்றே அழுத்தம் திருத்தமா, களையாகத் தட்டுப்படுற மாதிரி ஒரு பொண்ணு. ரொம்ப அருமையா செய்திருந்தாங்க. சினிமாவை விளையாட்டாக எடுத்துக்காத பொண்ணு. கௌதம் மாதிரியே அக்கறையானவர் ஷ்ரத்தா. இப்படி ஆசைப்படுகிற ஹீரோ, ஹீரோயினைப் பார்த்தா ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்! எனக்கும் இருந்தது. அந்த சந்தோஷம்தான் வெற்றி.’’

‘‘இசைக்காக என்ன செய்திருக்கீங்க!’’
‘‘நிவாஸ் கே.பிரசன்னாதான் மியூசிக். ஒரு நாளும் இவர் இசையை ரொம்ப லேசா எடுத்துக்கிட்டது கிடையாது. ‘தெகிடி’யில் ரொம்ப நல்லா தெரிந்தார். அவசரப்படாமல் கதை கேட்டுப் பார்த்து, அதுல இசைக்கு என்ன வழியிருக்குன்னு பார்த்துட்டு ‘சரி’ன்னு சொல்ற ஆளு. இசைக்கு வலிமையான இடங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, உடனே அவரது பெஸ்ட்டைக் கொடுக்கிறார். மக்களுக்கான ட்யூனையே போடுகிறார். பாடல்கள் எல்லாமே அருமையா வந்திருக்கு. வித்தியாசப்படுத்திக் காட்டணும் என்கிற தனித்துவம் இருக்கிறதுதான் ஆச்சர்யம்.

நல்லிசையும், மெல்லிசையும் இணைகிற ஒரு இடத்தில் அவர் இருக்கார். எங்களுக்குத்தான் அந்தப் பாடல்களுக்கு நியாயம் செய்யணுமேன்னு பயம் கூடிப் போச்சு. ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராமின் சீடர் யு.என்.மோகனை கூட்டி வந்திருக்கேன். வைச்ச முதல் ப்ரேமிலேயே, எங்கே இருந்தோம்னு காட்டுறாங்க. கலகலன்னு ஷூட்டிங் போயிட்டு இருக்கு. இப்போ யதார்த்த களம் பக்கம் தமிழ் சினிமா திரும்பி இருக்கிறது ஆரோக்கியமான மாறுதல். கௌதமும், தன் உழைப்பைத் தந்து உதவும்போது இது திரையில் அழகா வரும்னு ஒரு நம்பிக்கை சித்திரம் வருது. அது உருவாக்கின உற்சாகத்தில்தான் ‘இவன் தந்திரனை’ உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே முடிந்தது.’’

- நா.கதிர்வேலன்