பழங்குடி மக்களின் மொழியை ஆவணப்படுத்திய ஆசிரியைகள்!



மனிதன் தன்னுடைய உணர்வுகளை, எண்ணங்களை இன்னொருவரிடம்  பகிர்ந்துகொள்ள இணைப்புப் பாலமாக இருப்பது அவன் பேசுகின்ற மொழிதான். மனித கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்த சிலவற்றில் மொழியும் ஒன்று. ஆனால், ஆதிகாலம் தொட்டு மனிதன் பேசிவந்த பல மொழிகள் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன. நாம் சரியாக ஆவணப்படுத்தாமல் விட்டதுதான் இதற்குக் காரணம்.

உலகில் அதிக மொழிகள் அழிந்துபோன நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு மொழிகள் மீதான அக்கறை இப்போது பூத்திருக்கிறது. நீலகிரியைச் சேர்ந்த ஆசிரியை பூவிழி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியைகள் ஒன்றிணைந்து பழங்குடியின மக்களின் மொழியை அழிவில் இருந்து பாதுகாக்க அகராதியாக தொகுத்திருப்பது, அப்படிப்பட்ட ஒரு முயற்சி!

‘‘நீலகிரியைப்  பொறுத்தவரை கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனமும் பேசுகிற மொழி பிரத்யேகமானது. இதுவரை அந்த மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. எழுத்து வடிவில் இல்லாததால், இவர்களின் மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அத்துடன் பழங்குடியினர் அல்லாதோர் அந்த மொழியைக் கற்க முடியாமல் போய்விடுகிறது.

எழுத்தில் இல்லாததால் கற்றுக் கொள்ளவும் கடினமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் பழங்குடியினத்தவரின் குழந்தைகளுக்கு  தமிழிலோ, ஆங்கிலத்திலோ ஆரம்பக் கல்வியைக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குக் கடினமாகவே இருந்து வருகிறது. இந்தக் குறையைப் போக்கவே பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழிகளை அகராதியாகத் தொகுக்க நினைத்தோம்’’ என்று நம்பிக்கை பொங்கப் பேசுகிறார், மொழி அகராதியை உருவாக்குவதில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்ட ஆசிரியை பூவிழி.

‘‘சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை நடத்திய குழந்தைகள் திறன் மேம்பாடு குறித்த நிகழ்வில் கலந்துகொண்டேன். குழந்தைகள் ஏன் பள்ளிக்குப் போக மறுக்கின்றனர் என்பது பற்றிய நிகழ்வு அது. தாய்மொழியில் ஆரம்பக்கல்வியைக் கற்க ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. அதைச் செய்வதே பிரச்னைக்குத் தீர்வு எனப் புரிந்தது. பள்ளி முதல்வர் சண்முகம், நீலகிரி மாவட்ட ஆதிவாசிகள் நலச்சங்க (நாவா) செயலாளர் ஆல்வாஸ் ஆகியோரிடம் ஆலோசனை செய்து உடனே பணியைத் துவங்கினோம்’’ என்கிறார் பூவிழி.

‘‘சில இடங்களில் மொழிக்கலப்பால் அந்த மொழி சார்ந்த மக்களே சொல்லை மறந்துவிட்டனர். அந்த சொல்லை ஆவணப்படுத்துவதில் பெரும் குழப்பமே  வந்தது. குறிப்பாக ‘தோடா’ மொழியின் வார்த்தைகள் நிறையவே சிதைந்து போயிருந்தன. அதன் ஒலி உச்சரிப்பை வைத்து, வார்த்தைகளை எழுத்தில் கொண்டுவருவது கடினமாக இருந்தது. வயதான ஆதிவாசிகளிடம் பேசி சேகரித்தோம்’’ என்றார், அகராதி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்ற  ஆசிரியை காயத்ரி.

தொடர்ந்து பேசிய ஆசிரியை பூவிழி, ‘‘முதலில் அடிப்படையாகத் தினமும் பயன்படுத்தும் 50 சொற்களை அகராதியாகத் தொகுத்தோம். பூக்கள், பழங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் உடல் பாகங்கள் போன்றவற்றின் சொற்களைத் தமிழ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோம். இதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆர்வமாகப் பழங்குடியின குழந்தைகளும் மற்ற மாணவர்களும் கற்றுக்கொண்டனர். அது எங்களுக்கும் ஊக்கமாக இருந்தது. தற்போது 350 சொற்களுக்கான அகராதியைத் தயாரித்துள்ளோம். மீதமுள்ளதையும் சேகரித்து விரைவில் மிகப்பெரிய அகராதியாகக் கோர்ப்போம்.

ஓவியங்கள், படங்களாக மக்களின் வாழ்க்கை முறையை அகராதியின் இடையே சேர்க்க உள்ளோம். பழங்குடியின மாணவர்களுடன் மற்ற மாணவர்களும் இங்கு படிக்கின்றனர். அவர்களும் இந்த மொழிகளைக் கற்கும் வகையில் உருவாக்குவோம்’’ என்றார் நம்பிக்கையுடன். ‘‘பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அகராதியாகத் தயாரித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்டோரியா பள்ளியின் முதல்வர் சண்முகம், ஆசிரியை பூவிழி மற்றும் இவர்களுடன் சேர்ந்து ஆவணப்படுத்திய ஆசிரியைகளுக்கு பழங்குடியின மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்கிறார் ஆதிவாசிகள் நலச் சங்க (நாவா) செயலாளர் ஆல்வாஸ் பெருமிதத்துடன். ‘‘தற்போது ஆரம்பக்கல்விக்கான சொற்களைத்தான் கண்டுபிடித்து உள்ளோம். நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று ஒவ்வொரு தரத்துக்கும் அவர்களுக்குத் தகுந்த சொற்களைச் சேர்த்து இதை விரிவுபடுத்த வேண்டும். அரசு உதவினால் இதை வேகமாகச் செயல்படுத்தலாம்’’ என்கிறார் நீலகிரி பழங்குடியின மக்கள் கல்வி திட்ட இயக்குநர் விஜயகுமார் நிறைவாக!

- திலீபன் புகழ்
படங்கள்: அப்பாஸ்