ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

அவனுடைய உண்மையான முதலாளி யாரென்று கேட்டதும், பத்ரி திடீரென்று தன் வாய்க்கு ‘ஜிப்’ போட்டுக்கொண்டது விஜய்யை சற்று கலைத்தது. தோண்டித் தோண்டிக் கேட்கும் தன்னுடைய கேள்விகளின் தீவிரத்தை அவன் புரிந்துகொண்டிருப்பானோ என்ற அச்சம் எழுந்தது.

அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தவனாக, “குட் நைட்...” என்று சொல்லிவிட்டு விஜய் தன் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டான். விடிவதற்கு இன்னும் சில மணி நேரமே இருந்தது. வானம் தன்னுடைய ஆடையின் தொடுவான விளிம்பில் வெளிச்ச ஜரிகையை அணியத் துவங்கியிருந்தது. நடமாட்டம் இல்லாத அந்தக் கடற்கரையில் சிறு விளக்குகளைத் தாலாட்டிக்கொண்டு சற்றே உயரமான மீன்பிடிப் படகு ஒன்று ஒதுங்கியது.

பக்கப் பலகைகளில் ‘தீபக் மரைன்’ என்று எழுதப்பட்ட அந்தப் படகின் டபடபவென்ற மோட்டார் சத்தம் தேய்ந்து ஓய்ந்தது. உள்ளிருந்த ஆட்கள் படகு விளிம்பில் இருந்து நூலேணி பிடித்து இறங்குவது நிழலுருவமாகத் தெரிந்தது. இரண்டு படிகள் இறங்கி, தண்ணீரும், மணலும் சமமாய் கலந்திருந்த இடத்தில் அவர்கள் ஒவ்வொருவராகக் குதித்தனர்.

நான்கு ஆட்களும் வெளியே குதித்ததும், திடீரென்று எங்கிருந்தோ அவர்கள் முகத்தில் வெளிச்ச வட்டங்கள் பாய்ந்தன. “ஹேண்ட்ஸ் அப்..!” என்ற அதட்டலான குரல் இருட்டில் ஒலித்தது. துப்பாக்கிகளை உயர்த்தியபடி, கடலோர பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும் முன்னணிக்கு வந்தனர்.

படகிலிருந்து இறங்கியவர்களின் முகங்களில் பீதி. சட்டென அவர்கள் தண்ணீரில் பாய்ந்து தப்பிக்கப் பார்த்தபோது, ஒரு துப்பாக்கி வெடித்தது. தண்ணீரில் இறங்கியவர்களில் ஒருவன் முழங்காலைப் பிடித்துக்கொண்டு, ‘‘அம்மா..!’’ என்று வலியில் அலறினான். குப்புற அடித்து தண்ணீரில் விழுந்தான். காவல் துறையின் தீவிரமான தீர்மானம் புரிந்தவர்களாக மற்றவர்கள் தத்தம் இடத்திலேயே உறைந்தனர். அவசரமாகக் கைகளை உயர்த்தினர்.

“சார், படகுல வெறும் மீன்தான் இருக்கு..!” என்று ஒருவன் பரிதாபமான குரலில் சொன்னான். “படகுல என்ன இருக்குன்னு பார்க்கத்தான் நாங்க வந்திருக்கோம். மீன் இருந்தா உங்களுக்கு விடுதலை! மீனைத் தவிர வேற ஏதாவது இருந்தா, அந்த மீனோட கதிதான் உங்களுக்கு..!” என்றார் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார். அடுத்த சில நிமிடங்களில் படகிலிருந்து மீன்பிடி வலைகள் வெளியே இழுத்துப் போடப்பட்டன.

வலையில் சிக்கி உயிரிழந்திருந்த ஆயிரக்கணக்கான மீன்களும், இன்னும் உயிரை இழுத்துப் பிடித்து வைத்துக்கொண்டு, இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டிருந்த சில மீன்களும் நீண்ட துப்பாக்கி முனைகளால் ஒதுக்கப்பட்டன. அவற்றுக்குக் கீழே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நைலான் மூட்டைகள் வெளியே உருட்டப்பட்டன. டார்ச் வெளிச்சத்தில் மூட்டையைக் கிழித்ததும், உள்ளிருந்து துப்பாக்கிகளும், ரைஃபிள்களும், ரிவால்வர்களும், பிஸ்டல்களும் மணல்வெளியில் சிதறின.

“இந்த மீனெல்லாம் எந்த கடல்லப்பா வளருது..?” என்று சுகுமார் கேட்டார். படகில் வந்தவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். ஆயுதக் கடத்தலுக்குப் பயன்பட்ட படகு, கடலோர பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது. பத்ரி முந்தின இரவு போல் சோபாவில் சுருண்டு படுத்துவிட்டான் என்று உறுதி செய்துகொண்டு, அறைக்கதவைச் சாத்தினான் விஜய். துரை அரசனுக்கு போன் செய்தான். குரலைத் தழைத்துக்கொண்டு ரகசிய தொனியில் பேசினான்.

“சார், உங்க மெசேஜைப் பார்த்தேன்... கொள்ளை போன கோயில் சிற்பங்கள்ல சிலது இங்க இருக்குன்னு தெரிஞ்சதுல எனக்கும் மகிழ்ச்சிதான்...” துரை அரசன் உறங்காமலேயே வேலை செய்துகொண்டிருப்பது அவர் குரல் உலர்ந்திருந்ததில் புலப்பட்டது. “மொதல்லேர்ந்தே கொள்ளையடிச்ச சிற்பங்களுக்கும், நீ வேலை பார்க்கற கே.ஜி டிவி நிகழ்ச்சிகளுக்கும், தொடர்பு இருக்குன்றது இப்ப நிரூபணம் ஆயிடுச்சு.

சுத்திச் சுத்தி ஆராய்ஞ்சு கே.ஜி டி.வி தொடர்பு, தீபக் தர்மசேனா, அவரோட அடியாளு சின்னா, சின்னாவோட கையாளு கான்ஸ்டபிள் மாத்ருபூதம், அப்படின்னு அந்த நெட்வொர்க்ல பல கண்ணிகளை நாங்க பிடிச்சிட்டோம். உச்சத்துல இருக்கறவர் பேர் ‘குணாளன்’னு தோணுது. அது யார்னு மட்டும் தெரிஞ்சா போதும்... உலுக்கி எடுத்துருவோம்! விஜய், உங்க டி.வில குணாளன்னு யாராவது இருக்காங்களா..?’’

‘‘இல்லையே சார்..?” “சங்கேத லெட்டர்ல எல்லாம் ‘ஜி’னு போட்டிருக்கு... தீபக் தர்மசேனாவுக்கு உதவி பண்ணினவர் பேரு குணாளன் அப்படின்னு கண்டுபிடிச்சிட்டோம். ‘குணாளன்’ங்கற பேர்ல உங்க டி.வில யாராவது வேலை பார்த்தா, வட்டம் சுருங்கிடும்னு நெனைச்சேனே..?” என்று துரை அரசன் சற்றே ஏமாற்றத்துடன் சொன்னார். “எனக்குத் தெரிஞ்சு குணாளன்னு யாரும் கிடையாது சார்... ஆனா, சந்தேகப்படும்படியா ஒண்ணு, ரெண்டு பேர் என்கிட்ட பேசியிருக்காங்க.

இந்த இ-மெயில் தப்பா வந்ததே, அதை உடனே அழிச்சிருன்னு எங்க எம்.டி பதறினாரு... நான் அழிச்சிட்டேன்னு சொல்லியும் நம்பாமதான், மறுபடியும் கூப்பிட்டு, முஸ்தஃபானு ஒரு டெக்னிகல் ஊழியர் மூலமா என் லேப்டாப்பை செக் பண்ணிப் பார்த்தாருனு நெனைக்கறேன். அதனால குணாளன் உண்மைல யாரா இருக்கும்னு ஒரு சந்தேகம் வருது, சார்...’’

‘‘யாரு..?’’ என்று எதிர்முனையில் ஆர்வமானார், இன்ஸ்பெக்டர் துரை அரசன். “அது எங்க எம்.டி கிரிதரா இருக்கலாம்னு எனக்குத் தோணுது...” இன்ஸ்பெக்டர் துரை அரசன் அதிர்ச்சியில் மூச்சை இழுத்துப் பிடிப்பது தெரிந்தது. “அது எப்படிப்பா..? குணாளன் எப்படி கிரிதர் ஆகமுடியும்..?” “எனக்குத் தெரியல... அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும். என்னை எம்.டி.தான் அமெரிக்காவுக்கு வலுக்கட்டாயமா அனுப்பினாரு. இங்க வந்தா, எதுக்கு அனுப்பினாரோ, அதைத் தவிர மத்த வேலைகளுக்குத்தான் இவங்க கூட்டிட்டுப் போறாங்க. எல்லாம் சேர்ந்துதான் எனக்கு அந்த சந்தேகம் வருது...”

“அவரைப் பொறுத்தவரைக்கும் உன் அமெரிக்க வேலை முடிஞ்சதா, இல்லையா..?” “நான் நாளைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் போறேன்...”  “கவனமா இருந்துக்க, விஜய்..!” என்றார் துரை அரசன். உடனடியாக துரை அரசன் சில உத்தரவுகள் கொடுத்தார். கிரிதரின் பின்னணியை ஆராய சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரின் தலைமையில் காவல் துறையின் ரகசியப் படை இரவு பகலாக உழைக்கத் துவங்கியது. இந்தப் பக்கம் டாம் கார்ட்டர், அந்தப் பக்கம் பத்ரி என்று இருவரைத் தாண்டி விமான ஜன்னல் வழியே வெளியே பார்த்தான், விஜய்.

அங்கங்கே வெண்பொதிகளாக மேகங்கள் தொங்கிக்கொண்டிருக்க, அவற்றின் இடைவெளிகளில், லாஸ் ஏஞ்சல்ஸ் வானம் தூய நீலமாகத் தெரிந்தது. விமானம் தரை தொடப் போவதாக அறிவிப்பு ஒலித்தது. உலகையே ஆட்டிப் படைக்கும் ஹாலிவுட் சினிமாவின் தொப்புள் கொடி இங்குதான் இருக்கிறது என்று விஜய்க்குத் தெரியும். சினிமாத் துறையிலோ, தொலைக்காட்சித் துறையிலோ இருப்பவர்களின் கனவு சொர்க்கம் இது.

இங்கே காலெடுத்து வைக்கிறோம் என்ற துடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அதை முழுவதுமாக உணர்ந்து, மகிழ்ந்து, கொண்டாட முடியாதபடி நெருக்கடிகள் தன்னைச் சூழ்ந்திருந்ததையும் விஜய் உணர்ந்தான். வெளியில் வந்ததும், கார்களை வாடகைக்கு வழங்கும் ஒரு நிறுவனத்தில் நுழைந்து, வோல்வோ கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்தார், டாம் கார்ட்டர். “நாம இங்க ரெண்டு பேரைப் பார்க்கப்போறோம்... அவங்களும் உன்கிட்ட இந்திய சிற்பங்கள் பத்தியோ, ஓவியங்கள் பத்தியோ பேசலாம்.

அப்செட் ஆகாத! ஏன்னா, நீ கே.ஜி டி.வில கோயில்கள் பத்தி ப்ரோகிராம் பண்ணியிருக்கறது அவங்களுக்குத் தெரியும். கண்டிப்பா அந்த ஆர்வம் அவங்களுக்கு இருக்கும்...” என்றான் பத்ரி. “பொழுதுபோக்குக்காக சிற்பங்களைப் பத்தி கேக்கறவங்களுக்கும், திருட்டுப் பிழைப்புக்காக கேக்கறவங்களுக்கும் வித்தியாசம் இருக்கு பத்ரி..!” என்றான் விஜய், நறுக்கென்று.

“சரி, இதுக்கு மேல உன்கிட்ட சஸ்பென்ஸ் எதுக்கு..? உன்னை சீரியல் பிசினஸ் பேசறதுக்காக உன் முதலாளி இங்க அனுப்பி வெக்கல. சிற்பங்கள் பத்தி பிசினஸ் பேசறதுக்காகத்தான் அனுப்பி வெச்சிருக்காருன்னு எனக்கும் தெரியும். அதனால, இனிமே என்கிட்ட மூடி மறைச்சுப் பேசாதே..!” என்றான் பத்ரி, குரலில் கோபம் சேர்த்து.

தன் சந்தேகம் உறுதிப்படுவதைக் கண்டு விஜய் திடுக்கிட்டான். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாய்விட்டுச் சிரித்தான். “சரி... நமக்குள்ள டிராமா வேண்டாம், பத்ரி! இன்னிக்கு நாம மீட் பண்ணப் போற ஆட்கள் யார் யாரு..? அவங்களும் கிறிஸ்டோஃபர் போல வசதியானவங்களா..?”

“கிறிஸ்டோஃபரை விடவும் வசதியானவங்க. ஹாலிவுட் படங்களைத் தயாரிக்கறவங்க. நீதான் நேர்ல பார்க்கப் போறியே..?” என்றான் பத்ரி. கிரிதர் தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். போனை எடுத்தார். பர்ஸிலிருந்து புதிய சிம்கார்டு ஒன்றை எடுத்து அதில் பொருத்தினார். டயல் செய்தார். எதிர்முனையில் மருத்துவமனையில் ஒரு செவிலியின் போன் ஒலித்தது. சற்று நேரத்தில் அந்த போன் தீபக் தர்மசேனாவின் கைக்குப் போய்ச் சேர்ந்தது.

“குணா பேசறேன்...” என்றார் கிரிதர். “சொல்லுங்க...” என்றார் தீபக் தர்மசேனா மரியாதையாக! “விஜய்க்கு எதிரா புதுசா ஆதாரங்கள் இருக்கணும்ங்கறதுக்காக அவனை நான் வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சேன். ஆனா, போலீஸ் எப்படியோ மோப்பம் பிடிச்சு, என்னுடைய பின்னணியவே ஆராய ஆரம்பிச்சிடுச்சு. எந்த நிமிஷம் வேணும்னாலும் நான் தலைமறைவாயிடலாம். உன்னை போலீஸ் திருகித் திருகிக் கேக்கும்...” “சத்தியமா உங்க பேரை நான் சொல்ல மாட்டேன்...” “ரைட்..!” என்று போன் தொடர்பைத் துண்டித்தார் கிரிதர்.

அழைப்பு மணி ஒலித்து, கதவைத் திறந்ததும், மரகதத்தின் முகம் மலர்ந்தது. “வா நந்தினி... விஜய் அப்பப்ப போன் பேசறானா..?” நந்தினி புன்னகையுடன் நுழைந்தாள். “அடிக்கடி பேசிட்டிருக்கான் ஆன்ட்டி... அவனுக்கு வேலை ஆகணுமே..! நீங்க எப்படியிருக்கீங்க ஆன்ட்டி..?” “எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல... கோயில்ல என் போனை ஒருத்தன் தட்டிவிட்ட நாள்லேர்ந்து யாரோ ஒரு பொம்பளை போலீஸ் எனக்கு பாதுகாப்பா இருக்கானு மட்டும் வெளிய போகும்போது தெரியுது...” என்றாள் மரகதம்.

“ஆன்ட்டி, விஜய்யோட ஒரு பென் டிரைவை எடுத்துட்டுப் போகணும். அதுக்காகத்தான் வந்தேன்...” “தேடி எடுத்துக்கோ...” என்றாள் மரகதம். விஜய்யின் அறையில் அந்த பென் டிரைவை நந்தினி தேடிக்கொண்டிருக்கையில், மரகதம் மோருடன் வந்தாள். “உன்னை வெறுப்பேத்தறதுக்குனு ஃபாரின் பொண்ணுங்ககூட செல்ஃபி எடுத்து அனுப்பிட்டிருப்பானே..?” மரகதம் வேடிக்கையாகச் சொன்னது நந்தினியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அவள் கண்களில் கவலை.

“அவன் ஒழுங்கா திரும்பி வரணுமேன்னு எனக்கு ஒரே பதற்றமா இருக்கு ஆன்ட்டி... அவன் சொல்லிட்டுப் போனது ஒரு விஷயம். ஆனா, அங்க நடந்துட்டிருக்கறது வேற விஷயம். கொள்ளையடிச்ச சிற்பங்களைப் பதுக்கி வெச்சிருக்கற அமெரிக்கன் வீடு ஒவ்வொண்ணா அவனைக் கூட்டிட்டுப் போயிட்டிருக்காங்க... எங்கே எப்போ அவனுக்கு ஆபத்து காத்திருக்குனு எனக்கு பயமா இருக்கு!”

“ஏற்கனவே நான் கலங்கியிருக்கேன்... நீ வேற பயமுறுத்தறே..?” “உங்களை பயமுறுத்த சொல்லலை ஆன்ட்டி... போலீஸும் அவனுக்கு ஹெல்ப் பண்ணத்தான் முயற்சி பண்ணிட்டிருக்கு...” நந்தினி ஒரு பென் டிரைவை எடுத்துக் காட்டினாள். “கெடைச்சிடுச்சு, ஆன்ட்டி...” அங்கேயே தன் லேப்டாப்பைத் திறந்து, பென் டிரைவை செருகி இயக்கினாள். அதிலிருந்த அந்த மின்னஞ்சல் பிரதியை ஜெயசூர்யாவுக்கு அனுப்பி வைத்தாள்.

சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், துரை அரசனுக்கு எதிரில் வந்து சல்யூட் அடித்தார். “சார்... இந்த விவரத்தைப் பாருங்க..!” “என்ன..?” “பன்னெண்டு வருஷத்துக்கு முன்னால, ‘குணாளன்’னு ஒருத்தர் கெஸட்ல கொடுத்து புதுப் பேருக்கு மாறியிருக்காரு. பதிவாயிருக்கற அந்தப் புதுப் பேர் என்னனு பாருங்க...” “கிரிதர்..!” என்று உரக்கப் படித்த துரை அரசன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

இரவு, குளிர்காற்றை எங்கும் நிறைத்திருந்தது. கிரிதர் தன் வீட்டை விட்டு வெளியே வந்தார். விலையுயர்ந்த காரின் கதவைத் திறந்து பிடித்த டிரைவரிடம், “நானே ஓட்டிட்டுப் போறேன்...” என்று சாவியை வாங்கிக்கொண்டார். சாலை முனையில் காரை அநாயாசமாக வளைத்துத் திருப்பினார். படக்கென்று பக்கத்து இருக்கையில் யாரோ அமர்ந்தாற்போலிருந்தது. காரைச் செலுத்தியபடி திரும்பிப் பார்த்தார். அதிர்ந்தார். பக்கத்து இருக்கையில் கைக்கெட்டும் தொலைவில் கல்யாணி. “ஏய்... நீ... நீ... நீ சாகல..?” என்று உதடுகள் உதறக் கேட்டார்.

(தொடரும்...)

ஓவியம்: அரஸ்