பஸ்



- மாதவி

அதைப் பார்த்ததும் ராமநாதனுக்கு படபடப்பு எகிறியது. ஹால் டிக்கெட் டேபிளில் இருந்தது. மகன் சீனு பரீட்சைக்குப் போகிற அவசரத்தில் மறந்துவிட்டானா? தேர்வு அறைக்குள் இது இல்லாமல் விடமாட்டார்களே! ஹால் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினார். நல்லவேளை, சீனு போகும் பஸ் கிளம்பவில்லை. ஏறிப் பார்த்தார். பஸ்ஸில் சீனு இல்லை. குழம்பினார். அருகே நின்றவன், “அடுத்த பஸ் இதுக்கு முன்னாடி போயிடுச்சுங்க. அதுல போயிருக்கலாம்” என்றான்.

“ஓஹோ!” என்றவர் தைரியமாய் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தார். சீனு போன் செய்தான், “அப்பா, ஹால் டிக்கெட்டை வச்சிட்டு வந்துட்டேன்...” “தெரியும்! நா எடுத்துக்கிட்டு, நீ வழக்கமா போற பஸ்ஸில் வர்றேன்...” “அப்பா, நான் முன்னாடி போயிக்கிட்டிருக்கேன்!” “நீ காலேஜ் போகறதுக்கு முன்னாடி நான் வாசலில் நிற்பேன், பாரு!”

“அது எப்படிப்பா?” “அப்படித்தான்டா! என் பஸ்தான் முன்னாடி போகணும். ஆனா உன் பஸ் முன்னாடி புறப்பட்டுட்டான். விடுவானா இவன்? டிக்கெட்டுக்கு பறப்பான்! விரட்டிக்கிட்டு வந்து ஏதாவது ஒரு ஸ்டாப்பில் முந்திடுவான்” என்றார். சொன்னபடி சீனுவுக்கு முன்பாகப் போய் காலேஜ் வாசலில் நின்றார். வந்து வியந்தவனிடம், “இதுதான்டா பஸ் சைக்காலஜி” என்றார்.